படைப்பாளி கறுப்புச் சட்டை அணிய வேண்டுமா?

சிறப்புக் கட்டுரை: படைப்பாளி கறுப்புச் சட்டை அணிய வேண்டுமா?

ஆர்.அபிலாஷ்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கத் தவறுகிறது என்கிற குற்றச்சாட்டின் பின்னணியில், மோடியின் தமிழக வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இங்கே எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி காட்டுவது, கறுப்புச் சட்டை அணிவது, கறுப்பு பலூன் பறக்க விடுவது ஆகிய பல பாணிகளில் போராட்டங்கள் நடத்தினர். சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பு. #Gobackmodi எனும் டிவிட்டர் ஹேஷ்டேக் அன்றைய தினத்தில் உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்ததாக ஒரு செய்தி.
இந்த சந்தர்ப்பத்தில், இப்போராட்டங்களைப் பற்றி நான் ஏன் எழுதவில்லை என ஒரு தோழி வினவினார். ஏன் தமிழ் எழுத்தாளர்கள் இவ்விஷயத்தில் மௌன சாமியார்களாய்த் தனித்து இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் போராட்டத்தின் முன்னணியில் இல்லை (அல்லது போராட்டத்திலேயே இல்லை)? எழுத்தாளன் சமூகத்தின் பிரக்ஞை அல்லவா? மக்களின் சமூகப் பொறுப்புணர்வுகளைத் தட்டி எழுப்ப வேண்டியவன் அல்லவா அவன்? மக்களை வீறு கொள்ளச்செய்யும் போர்வாள் அல்லவா அவன்? பிற நாடுகளில், சமூகங்களில் அவன் அப்படிப் பல அரசியல் போராட்டங்களில் தலைமை ஏற்கிறவனாக இருந்திருக்கிறானே? இப்படி அடுக்கடுக்காய்ப் பல கேள்விகள்.
எல்லாக் கேள்விகளையும் ஒரு குறியீடாகச் சுருக்கினால் அது இப்படி அமையும்: இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் கறுப்புச் சட்டை அணிய மறுக்கிறார்கள்?
எழுத்தாளர்களும் ஜோதியில் கலக்க வேண்டுமா?
நான் அப்போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை ஆதரித்து எழுதினேன். மக்கள் போராட்டங்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நம் சமூகத்துக்கான அரசியல் மொழி போராட்டங்கள் வழியே சாத்தியப்படும் என நம்புகிறேன். அதேவேளையில், போராட்டங்கள் நமக்குச் சமூக அதிகாரத்தைப் பெற்றுத் தருமா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது.
இன்று மீடியா பரவலாக்கம், பொதுப் பிரச்சினைகள் வழியே தமது குரலை வெளிப்படுத்த மக்களுக்கு உருவாகியுள்ள புது விருப்பம் ஆகியவை இத்தகைய போராட்டங்கள் கவனம் பெற வழி செய்துள்ளன. போராட்டங்கள் இன்றி நாம் அரசியல் எனும் இயக்கத்தில் இருந்து வெகுவாக துண்டுபட்டுப் போக வாய்ப்புண்டு. இப்போராட்டங்கள் நிச்சயம் அவசியமே. ஆனால், இந்தப் பிரவாகத்தில் எழுத்தாளர்கள் ஒன்று கலக்க வேண்டுமா என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்துள்ளது.
தமிழ் தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் பொதுவாகவே அரசியல் இயக்கங்கள், போராட்டங்கள், போக்குகளிலிருந்து தன்னை விலக்கிவைத்தபடியே செயலாற்றிவந்திருக்கிறார்கள். அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத தமிழ் எழுத்தாளர்கள் அரசியலற்றவர்களாகவே இருக்கிறார்கள். உலகம் முழுக்க உள்ள போக்கும் இதுதான். கடந்த ஐம்பது வருடங்களில் 100 சிறந்த உலக இலக்கியவாதிகளைப் பட்டியலிட்டால் அவர்களில் 99% பேர் அரசியல் போராட்டங்களுக்குத் தலைமை தாங்காதவர்கள், போர் முழக்கங்கள் செய்யாதவர்கள், கொள்கைப் பிரச்சாரம் செய்யாதவர்களாகவே இருப்பார்கள். இடதுசாரிப் பாரம்பரியம் வலுவாக உள்ள கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்கள் சற்றே விதிவிலக்கு.
ஆளும் கொடுங்கோல் அரசுக்கு எதிராகச் சிறு சிறு போராட்டக் குழுக்களாக மக்கள் கிளர்ந்தெழும் தேசங்களில் அரசியல் போர் முழக்கம் செய்யும் படைப்பாளிகள் அதிகம் இருக்கலாம். ஆனால், படைப்பாளிகள் அரசியல் பேரலைகளில் அடித்துச் செல்லப்படாமல் தனித்து நின்று மாற்றங்களை நுணுகி அறிந்து அவதானிப்புகளைச் செய்ய வேண்டும் என்பதே பெரும்பான்மைப் போக்கு.
ஏன் எழுத்தாளர்கள் மக்களை நேரடியாக, கடுமையாகப் பாதிக்கும் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பாமல் இருக்கிறார்கள்? உலகம் முழுக்க எழுத்தாளர்கள் இவ்விஷயத்தில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். அது ஏன் அப்படி என வினவும் முன்பு வேறொரு கேள்வி:
எழுத்தாளன் மக்களின் பொது மன எழுச்சிகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கலாமா? கொடுக்கலாம். அந்தப் பேரலையில் தன்னைக் கரைத்துக்கொண்டு மக்களின் ஆன்மாவுடன் உரையாடலாம். ஆனால், தான் முழுக்க அந்த அடையாளம் அல்ல எனும் பிரக்ஞையுடன் அதைச் செய்ய வேண்டும். போராட்டக் களத்தில் எழுத்தாளன் கொஞ்சம் விட்டேற்றியாக இருக்க வேண்டும். தன்னை முழுக்க எந்த மக்கள் இயக்கம் அல்லது எழுச்சியிலும் ஒப்புக்கொடுக்கக் கூடாது.
ஏன் இந்த விலகல்?
எழுத்தாளன் ஓர் உதிரி. பிறர் காணாததைப் பார்த்துச் சொல்பவன். காவிரிக்கான போராட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் எழுத்தாளன் அங்கு மக்கள் எழுச்சியின் மனக் கிளர்ச்சியை, தூய்மையை, உன்னதத்தைக் காணலாம். இன்னொருபக்கம் இதே மக்களின் கீழ்மையை, இதே மக்கள் ஒரு தலைமையால், மீடியாவால் சுரண்டப்படுவதையும் காணலாம். ஒரு போராளியின் தங்கை லட்சியத்துக்காக நெருப்பில் குதிக்கிறாள். எழுத்தாளன் மனம் ஒருபக்கம் ஏன் இப்படிச் செய்தாய் எனக் கசிகிறது; இன்னொரு பக்கம் அவளது லட்சியத் தூய்மையை எண்ணிப் பெருமை ஏற்படுகிறது. இன்னொருபக்கம் இந்தச் செயலின் அபத்தமும் எழுத்தாளன் மனதைக் கனக்கச் செய்கிறது. உங்களில் எத்தனை பேர் உங்கள் மகளோ, தங்கையோ, அம்மாவோ தீக்குளித்தால், ‘ஓ தியாக சொரூபமே’ எனக் கவிதை எழுதுவீர்கள்? என்னதான் லட்சியம் முக்கியம் என்றாலும் நம் மனம் சில நேரம் அதற்கு முழுக்க எதிர்த் திசையில் திரும்பிச் சிந்திக்கும்.
பெரும்போக்கும் சிறுபோக்கும்
எழுத்தாளன் தனது அமைப்புக்கு, நம்பிக்கைக்கு, கொள்கைக்கு மட்டும் நேர்மையாக இருக்க நினைத்தால், “தியாக சொரூபமே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்” என லட்சம் பேர் முகநூல் சுவரில் எழுதத் தானும் அதையே வழிமொழிந்து விலகிவிடுவான். ஆனால், ஓர் அசலான எழுத்தாளன் பெரும்போக்குக்கு எதிரான சிறுபோக்கைப் பதிவு செய்வான்.
அவன் எப்போதும் எல்லா அமைப்பு சார் செயல்பாடுகள் மற்றும் கூட்டுச் செயல்கள் மீதும் ஒரு தீரா அவநம்பிக்கையுடனே இருப்பான். சார்த்தரை உதாரணம் காட்டுகிறேன். அவர் அடிப்படையில் ஒரு மார்க்ஸியவாதி. ஆனால், சோவியத் யூனியனில் தோன்றிய கம்யூனிஸ்ட் அரசின் அடக்குமுறைகள் மீது கசப்பு ஏற்பட அவர் உடனே கட்சி சார் கம்யூனிஸத்தைக் கடுமையாய் சாடினார். பிரான்ஸில் உள்ள கம்யூனிஸ்டுகள் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். ஒரு லட்சியத்துக்கும் நடைமுறையில் மனிதர்கள் அதைக் கையாள்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு, போலித்தனத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
ஆனால், அதற்காக அவர் அரசியலே வேண்டாம் எனச் சொல்லவில்லை. ‘என் தேசம் பக்கத்து நாட்டின் மீது அடக்குமுறையை ஏவினால் அது என் அரசின் குற்றம் என என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது; இந்த நாட்டின் ஒவ்வொரு சிறு சலனத்துக்கும் எனது எண்ணங்களுக்கும் ஒரு கண்காணாத தொடர்பு உள்ளது’ என்றார் அவர். ‘மனிதன் சமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்து யோசிக்கக் கூடாது’ என்றார். ‘ஆனால் அதற்காகக் கண்மூடித்தனமாகச் சமூகத்தையோ அரசியல் இயக்கங்களையோ அவன் பின்பற்றல் ஆகாது. அவன் தனக்கும் தன் பார்வைக்கும் தன் சிந்தனைக்கும் நேர்மையாக இருக்க வேண்டும்’ என்றார். நமது இடதுசாரி எழுத்தாளர்களை எடுத்துக்கொள்வோம். உலக அளவிலான இடதுசாரி ஆட்சி, சர்வாதிகார வரலாறுகளை விடுங்கள். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி புரிந்த சில மாநிலங்களில் நிகழ்த்திய அநீதிகளை, குற்றங்களை நமது இடதுசாரி எழுத்தாளர்கள் கண்டித்துள்ளார்களா? சிங்கூரில் நடந்த கொடுமைகளைப் பற்றி நமது கட்சி உறுப்பினர்களான இடதுசாரிகள் ஏதாவது எழுதினார்களா? எனக்குத் தெரிந்து இல்லை. கேரளாவில் இடதுசாரி அரசு எவ்வளவோ சீரழிவான அரசியல் தந்திரங்களை, குற்றங்களை நடத்தியது. எனது இடதுசாரி நண்பர்கள் பலர் மௌனம் சாதித்தார்கள். அதை விடுங்கள். கூடங்குளம் பிரச்சினையில்கூட அவர்கள் கடும் குழப்பத்துக்கு உள்ளானார்கள்.
இது கட்சி அரசியலின் பிரச்சினை மட்டும் அல்ல. நீங்கள் ஒரு கட்சியைச் சேராதவர் என்றாலும், ஒரு சித்தாந்தம், அதை ஒட்டின இயக்கம், அதன் செயல்பாடுகளுடன் உங்களை உணர்வுபூர்வமாகப் பிணைத்துக்கொண்டால் அதன் எதிர்மறையான பக்கம் ஒன்றைப் பார்க்காததுபோல் நடிக்கத் தொடங்குவீர்கள். எழுத்தாளன் தன்னை ஒரு பேரியக்கத்துடன், ஒரு சித்தாந்தப் போக்குடன், மக்கள் எழுச்சிப் போராட்டத்துடன் கருத்தியல் ரீதியாக இணைகையில் அவன் முதலில் தன் நேர்மையை இழக்கிறான். இதை நான் சொல்லவில்லை; சார்த்தர் சொன்னார்.
விலகி நின்று பார்க்கும் கோணம்
‘மோடியே திரும்பப் போ’ போராட்டம் பெறும் கவனம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஓர் எழுத்தாளனாக இதை விலகி நின்று பார்க்கவே விரும்புகிறேன். நான் இதன் பல்லாயிரம் முகங்களில் ஒன்றாக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். நான் என் முகத்தைத் தனியாக, விளிம்பில், எந்தக் களிம்பும் பூசாமல், எந்த அழுத்தத்துக்கும் உள்ளாகாமல் வைத்துக்கொள்ள விரும்புவேன். அப்படியே நான் என் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
அதே நேரம் எழுத்தாளன் முழுக்க விலகி இருக்க வேண்டும் என நான் கோரவில்லை. ஒரு கொந்தளிப்பான நிலையில் அவன் மக்கள் போராட்டத்தில் இணையலாம். ஆனால், அந்தப் போராட்டம் தனதானது என அவன் உரிமை கோரக் கூடாது. அப்போராட்டத்தில் இருந்து எக்கணமும் தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு விட்டேற்றித்தனம் அவனுக்கு இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவன் யார் கையிலோ ஒரு கருவியாக மாறிவிடுவான். அவன் யாருடைய திரைக்கதையிலோ ஒரு பாத்திரமாக நடிக்கத் தொடங்கிவிடுவான்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை எடுத்துக் கொள்வோம். அது மாநில அரசின் மறைமுக ஆதரவின் பெயரில் வலுப்பெற்ற போராட்டம். ஆனால் அரசு எதிர்ப்பு போராட்டம் எனும் மாயை அதன் மேல் மீடியாவால் ஏற்றப்பட்டது. அரசு பின்னர் ஒரே நாளில் அப்போராட்டத்தைத் துடைத்தெறிந்தது. இதை விலகி நிற்கும் படைப்பாளியால் மட்டுமே கவனிக்க முடியும். அவனுக்கே அதை வெளியே சொல்லும் சுதந்திரமும் உள்ளது. ஆனால், அது முழுக்க முழுக்க மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் என விடாப்பிடியாக நம்பத் தலைப்படும் ஒருவன், அதிலிருந்து உணர்வுரீதியாகத் தன்னை துண்டிக்க முடியாத ஒருவன் எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில் (1) உண்மையைப் பார்க்க முடியாது பொய்யை எழுதுவான். (2) உண்மையை எதிர்கொள்ள முடியாது வாய் மூடி நிற்பான்.
எதிலும் மாட்டிக்கொள்ளாதவரை எதிலும் போய் மாட்டலாம். கறுப்புச் சட்டை அணியலாமா? தாராளமாக. அதைப் பெரிய புரட்சியாகக் கருதாமல் உங்களையே உங்களால் பகடி செய்யவும், விமர்சனபூர்வமாகவும் பார்க்கவும் முடிந்தால் தாராளமாக அணியலாம்.
அரசியலைவிட, லட்சியத்தைவிட, ஒரு தனிமனிதனாக ஒரு படைப்பாளியின் சுதந்திரம் முக்கியம். நீங்கள் உண்மையெனக் கருதும் எதையும் உரக்கச் சொல்லும் சுதந்திரம். உங்களுடனேயே நீங்கள் முரண்பட, உங்களையே நீங்கள் மறுக்க, கடந்து போக உங்களுக்கு உள்ள சுதந்திரம்.
அச்சுதந்திரத்தை இழக்க மாட்டீர்கள் எனில் தினமும் ஒரு பதாகை ஏந்தித் தெருவில் ஊர்வலம் போகலாம். உங்களுடன் நானும் வருவேன்!
படைப்பாளி கறுப்புச் சட்டை அணிய வேண்டுமா? படைப்பாளி கறுப்புச் சட்டை அணிய வேண்டுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 00:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.