தமிழே ஆட்சி மொழி; வியப்புக்குரிய குரல்! - வி.களத்தூர் எம்.பாரூக்



இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க நடைபெற்ற முயற்சிக்கு எடுத்த எடுப்பிலேயே அரசியல் நிர்ணய சபையில் எதிர்த்த தமிழகத்தின் வரலாற்று நாயகர்கள் இரண்டு பேர். ஒருவர் காங்கிரசின் டி.ஏ.இராமலிங்கம். மற்றொருவர் கண்ணியமிகு காயிதேமில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள். அதோடு நின்றிடாமல் நம் தாய் மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாகுவதற்கு அந்தவையில் தனது குரலை பதிவுசெய்த ஒரே தலைவரும் காயிதே மில்லத் அவர்கள்தான்.

எந்த மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆவது என்ற விவாதம் தீவிரமாக நடைபெற்றபோது காயிதே மில்லத் தனது எண்ணத்தினை, சுதந்திரமாக அப்போது பதிவுசெய்தார். இந்தியாவின் ஆட்சிமொழியாவதற்குரிய தகுதியும், வளமும், ஆற்றலும் உள்ள மொழி தமிழே! என்று அவர் கூறியபோது சபையில் இருந்த அனைவரும் ஆச்சரியக் கண்கொண்டே பார்த்தனர்.

"ஓர் உண்மையை இச்சபை முன்பு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை பற்றி நான் பெருமையடைகிறேன். பழமையான மொழியைத்தான் இந்த நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டும் என்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என அவர் பேசியது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைத்திருக்கிறது.

எதற்காக அரசியல் நிர்ணய சபையில் ஆட்சி மொழியாவதற்கு தமிழை பரிந்துரைத்தேன் என்பதற்கு பின்பு அழகிய விளக்கத்தை அவர் அளித்தார். "அரசியல் நிர்ணய சபையில் நான் தமிழுக்காக, தாய்மொழிக்காக வாதாடினேன் என்றால் தமிழின் அழகு, இயற்கை, இன்பம், வாய்மை, தரம் இவற்றிற்காக வாதாடினேன் என்பதுதான் பொருள். இத்தனை சிறப்புகளும் தமிழுக்கேயன்றி வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான், இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறினேன்".

தமிழ் இலக்கியங்களை, வளங்களை பகுத்து உணர்ந்தவராக இருந்தார் அவர். தமிழின் மேன்மைகளை பல கூட்டங்களில் பேசி தமிழர்களை தமது மொழியை, கலாச்சாரங்களை, பெருமைகளை  உணர்ந்துகொள்ள செய்திருக்கிறார். தமிழ் வளர்ச்சி கழகத்தை நிறுவி அதன் மூலம் அவர் செய்த தமிழுக்கான பணிகள் எண்ணற்றவை. கணக்கில் அடங்காதவை.

தமிழர்கள் மீதும், தமிழகத்தின் மீதும் அவர் கொண்டிருந்த உண்மையான நேசம் தேவிகுளம், பீர்மேடு பிரச்சனை வெடித்தபோது வெளிப்பட்டது.  தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் இணைக்க முற்பட்டபோது அதற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். "அந்த பகுதிகளில் தமிழர்களே அதிகம். ஆகவே அந்த பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்" உறுதியாக சொன்னார். 24.12.1955 அன்று நாடாளுமன்ற மேலவையில் மாநில எல்லைகள் சீரமைப்பு கமிசன் விவாதத்தின்போதும் தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதிகள் என்றே வாதிட்டார். இதற்காக பலரும் போராடி இருக்கிறார்கள் என்றாலும் காயிதே மில்லத்தின் போராட்டம் தனித்துவமானது. ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாகவும் இருக்கிறது.

அவருக்கும், அவருடைய முஸ்லீம் லீக் கட்சிக்கும் தமிழகத்தைவிட கேரளாவில்தான் செல்வாக்கு அதிகம். காயிதே மில்லத் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்டதுகூட கேரளாவில் இருந்துதான். அவர் இடத்தில் வேறு ஒருவரோ, வேறு ஒரு கட்சியோ இருந்தால் தமது கட்சிக்கு எங்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்று பார்த்து அதற்கு ஆதரவாகத்தான் வினையாற்றிருப்பார்கள். காவிரி மேலாண்மை வாரிய விடயத்தில் பாஜகவும், காங்கிரசும் கார்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இருப்பதுபோல். 

ஆனால் காயிதே மில்லத் அப்படி நடந்து கொள்ளவில்லை. உண்மையின் பக்கமே நின்றார். தமிழகத்திற்காகவே குரல் கொடுத்தார். அரசியலில் உண்மையையும்,  நேர்மையையும், எளிமையையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்த மிகச் சில அரசியல்வாதிகளில் ஒருவராக அவர் இருந்தார். அதனால்தான் கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டார். அரசியலில் அவருக்கு நேர்திசையில் இருந்தவர்கள்கூட அவரை கண்ணியத்துடனே அணுகினர்.

தேவிகுளம், பீர்மேடு விடயத்தில் கேரளாவிற்கு எதிரான நிலையை அவர் எடுத்தாலும் 1962, 1967, 1971 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் மஞ்சேரி தொகுதியில் போட்டியிட்டுதான் மாபெரும் வெற்றியை சுவைத்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒருமுறைகூட வாக்குக்கேட்டு பிரச்சாரத்திற்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு மக்களிடம் நற்பெயரை பெற்று செல்வாக்கோடு திகழ்ந்தார். அவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியானதாக இருக்கும்; அதில் நேர்மை கலந்திருக்கும் என்ற எண்ணமே அவரின் செல்வாக்கிற்கு காரணம் ஆகும்.

காயிதே மில்லத்தின் தமிழ் பற்றை அறிந்துகொள்ள வேண்டும், தமிழ் மொழி குறித்தான அவரின்ஆய்வை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரைகளை அறிந்திடலே போதுமானது. அதில் உலகின் மூத்த மொழி, தொண்மை மொழி தமிழே என்று ஆதாரங்களுடன் நிறுவி இருப்பார். இவ்விடத்தில் முழுதும் பதிவு செய்ய முடியாது என்றாலும் சிறு பகுதியை மட்டும் பாப்போம். தமிழின் பொற்காலம் என்ற அரங்கிற்கு அவர் தலைமையேற்று நிகழ்த்திய உரை "சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் படிக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்து கூறமுடியாதது. சிலப்பதிகாரம் பண்டைய கால பூம்புகாருக்கே நம்மை கொண்டு செல்கின்றன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழர் இப்போது நமக்கு இருக்கும் விஞ்ஞான வசதிகளை பெற்றவர்களாக இல்லாதிருந்தாலும்கூட, மிகச் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். மண்பாண்டங்கள் மற்றுமுண்டான பண்டங்களைச் செய்து நாகரிகத்தின் உச்சியிலே தமிழன் இருந்தான் என்றால், இது ஒன்றே அவன் சிறப்புக்குப் போதாதா என்ன?..."

"...தொண்மையான "மொகஞ்சதாரோ" நாகரிகம் 8500 ஆண்டுகளுக்கு முன்னே கட்டப்பட்ட நாகரீகம். அங்கே தமிழ் கல்வெட்டு இருக்கிறது. இப்பொழுதும் அங்கு வாழ்கிற 'பிரிசு' என்ற இனத்தவர் பேசுகின்ற மொழியின் உச்சரிப்பை கூர்ந்து கவனித்தால், அதிலே தமிழ் ஒலி இருப்பதை உணர முடியும். அக்காலத்திலேயே அகலமான வீதிகள் அமைத்தும், கழிவு நீர்க் கால்வாய்கள் அமைத்தும், குளிப்பதற்காக குளங்கள் வெட்டியும் அந்நகரம் அமைக்கப்பட்டிருக்கிறது! இது ஒன்றே தமிழினம் நாகரிகத்தின் உச்சியில் இருந்தது என்பதற்குப் போதுமான சான்றாகும்..."

காயிதே மில்லத்தின் இந்த உரை தமிழ் சமூகத்தை சிந்தனைக்கு உட்படுத்தியது. தமிழுக்காகவும், தமிழருக்காகவும் சிறப்பான பங்களிப்பை செய்த மகத்தான தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் அவர். தமிழ் வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறார்.
 
பெரியார், காமராசர், அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்களின் வரிசையில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர் காயிதே மில்லத். தமிழக சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் இரு அவைகள், இந்திய அரசியல் நிர்ணய சபை என அனைத்திலும் பங்கெடுத்து மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த ஒரே தமிழர் இவரே!

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஒரு தமிழரை தமிழினம் கொண்டாடி இருக்க வேண்டும். மாறாக மறக்கப்பட்டு இருப்பது விந்தையாக இருக்கிறது. அவரின் வரலாற்றை பாடநூல்களில் சேர்பதற்கே கோரிக்கைகள் பல வைக்க வேண்டி இருக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையில் தமிழையே இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்ற அந்த ஒற்றைக் குரலுக்காகவே தமிழர்களாகிய நாம் அவரின் பெருமைகளை பேசுவதுடன், நன்றி பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.
(ஏப்ரல் 05 : காயிதே மில்லத் மறைவு நாள்)

நன்றி : தினத்தந்தி  
தமிழே ஆட்சி மொழி; வியப்புக்குரிய குரல்! - வி.களத்தூர் எம்.பாரூக் தமிழே ஆட்சி மொழி; வியப்புக்குரிய குரல்!  - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 00:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.