ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி செலமேஸ்வரின் சந்தேகம்!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி செலமேஸ்வரின் சந்தேகம்!

உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகள் குறிப்பிட்ட அமர்வு நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் முறை சந்தேகத்துக்கு இடமானதாக இருக்கிறது என்று, மூத்த இரண்டாவது நீதிபதியான செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இது இந்திய நீதித்துறைக்குள் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதேபோன்றதொரு இன்னொரு அதிர்வை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த இரண்டாவது நீதிபதியான செலமேஸ்வர். நேற்று (ஏப்ரல் 7) டெல்லியிலுள்ள இந்திய அரசியலமைப்புக் கழகத்தில், ‘ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்திய ஹார்வர்டு கழகத்தின் சார்பில், இது ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விவாதத்தில் ஊடகவியலாளரான கரண் தாப்பர், தொடுத்த பல சிக்கலான கேள்விகளுக்குத் தன் பாணியில் நிதானமாகப் பதிலளித்தார் நீதிபதி செலமேஸ்வர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி செலமேஸ்வர், ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது அவ்வழக்கு ஒதுக்கப்பட்ட விதம் பற்றியும் கூட சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
இது நீதித்துறையில் மட்டுமல்ல.... தமிழ்நாட்டு அரசியலிலும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விருப்பத்தின்பேரில் சில அமர்வுகளுக்கு வழக்குகள் மாற்றப்படுவது குறித்து கரன் தாப்பரிடம் பேசிய நீதிபதி, இது பொதுமக்களின் நம்பிக்கையையும், இந்த அமைப்பின் மீதான அக்கறையையும் சிதைத்துவிடும் என்றார்.
”இந்த (நீதிமன்ற) அமைப்பை மாற்றுவதற்கான தேவை குறித்து ஆலோசிக்க வேண்டுமா?” என்ற கரண் தாப்பரின் கேள்விக்குப் பதிலளித்த செலமேஸ்வர், “அதுகுறித்த, ஒருவகையான திரும்பிப்பார்த்தல் தேவைப்படுகிறது” என்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது கண்டனம் தீர்மானம் எழுப்புவதற்குப் போதுமான இடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “கண்டனத் தீர்மானத்தையே நாம் நம்புவது ஏனென்று தெரியவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குக் கண்டனத் தீர்மானம் ஒரு தீர்வல்ல. நாம், இந்த அமைப்பைச் சரி செய்தாக வேண்டும்” என்று பதிலளித்தார்.
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கும் அதுபோன்றதே...
வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவது குறித்த ரோஸ்டர் முறை குறித்துப் பேசிய செலமேஸ்வர், அதை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உள்ளது என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்று தெரிவித்தார். ஆனால், அந்த நடவடிக்கை மக்களுக்குப் பயன் தரும் வகையிலும், விசித்திரமாக இல்லாமலும் இருக்க வேண்டுமென்று கூறினார்.
மேலும், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிந்த பிறகும், அதன் தீர்ப்பு வெளியாக ஓராண்டு ஆனதாகத் தன் பேச்சில் சந்தேக தொனியில் குறிப்பிட்டார் செலமேஸ்வர்.
உச்ச நீதிமன்றத்தில் பணியில் இருக்கும் மூத்த இரண்டாவது நீதிபதியின் இந்த கருத்து தமிழக அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நீதிபதி செலமேஸ்வரின் இந்த கருத்தின் மூலம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்க ஒரு வருட காலம் ஆனது பற்றியும், தீர்ப்பு வழங்கப்பட்ட சூழல் பற்றியும் விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது.
அடுத்த தலைமை நீதிபதி
பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில், தனது அதிகாரத்துக்கு உட்பட்டுதான் ஐந்து மூத்த நீதிபதிகளைக் கொண்டு அரசியலமைப்பு அமர்வை அமைத்ததாகக் குறிப்பிட்டார். “எனது தலைமையிலான அமர்வு அந்த ஆணையைப் பிறப்பித்ததில், என்ன பிரச்சினை என்று இதுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டாவது மூத்த நீதிபதி என்ற முறையில் இது வழக்கமானதுதான்” என்று தெரிவித்தார் செலமெஸ்வர்.
“உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெறும்போது, அந்தப் பதவிக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர்த்தப்பட மாட்டார் என்ற கவலை உள்ளதா?” என்ற கேள்விக்கு, “அப்படி நடக்காது என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால், பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் தெரிவித்தது சரி என்று நிரூபணமாகிவிடும்” என்று தெரிவித்தார் செலமெஸ்வர்.
“கொலீஜியம் அமைப்பு செயல்படாமல் போனால்..?” என்று கரண் தாப்பர் கேள்வி எழுப்பியபோது, அப்படி நடக்காது என மறுத்தார் செலமேஸ்வர். “இரண்டு நாள்களுக்கு முன்புகூட இரண்டு உயர் நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை அளித்தோம். எங்களுக்குள் முரண்பாடு இருப்பது உண்மை; ஆனால், அது எங்களைப் பிரிக்காது” என்று கூறினார்.
முன்னதாக, “இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்தபோது முன்னாள் ஹார்வர்டு மாணவரைச் சந்திப்பேன் என நினைத்தேன். உங்களைக் கேள்வி கேட்பேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்று செலமேஸ்வரிடம் தன் வியப்பைப் பகிர்ந்தார் கரண் தாப்பர்.
பொதுவாக, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் அதுபற்றி பொதுவெளியில் தங்களது கருத்துகளைப் பகிர மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்து வருகிறது. ஜனவரி மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தே கேள்வி எழுப்பினார் செலமேஸ்வர். உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றன. இந்தச் சூழலில், தற்போது நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றிய உரையாடலில் செலமேஸ்வர் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி செலமேஸ்வரின் சந்தேகம்! ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி செலமேஸ்வரின் சந்தேகம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.