அண்ணா என்றொரு அறிஞர் பெருமகன் - முஹம்மது ஃபைஸ்

“எனக்கு வயது முப்பது. அறிஞர் அண்ணாவை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். எனினும் அவரது வரலாறை அறிந்து இருக்கவில்லை. அதற்கான ஆவல் கொண்டிருந்த நிலையில் இந்த வலைதளத்தை கண்டேன். பேருவகை கொண்டேன். அவரது சீரிய வரலாறை படித்தேன் என்பதை விட அள்ளி அள்ளிப் பருகினேன் என்பதே பொருத்தமாக இருக்கும். திராவிட இயக்கத்தின் அந்த முன்னோடி நாயகனை தமிழ்நாடு தந்த திருமகனை இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டுமே என ஏங்கினேன். இனி அவரது நூல்களையும் படிக்க எண்ணியுள்ளேன். இந்த வாய்ப்பை நல்கிய தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.”

ஏழு வருடங்களுக்கு முன் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பை இந்த இணைய தளத்தில் படித்தேன்(www.arignaranna.net). படித்த பின் எழுந்த உணர்வில் மேற்கண்ட மின்னஞ்சலை இந்த இணைய தளத்தை பராமரிக்கும் அண்ணா பேரவையின் செயலாளர் இரா.செம்பியன் அவர்களுக்கு அனுப்பினேன். இன்று வரை மின்னஞ்சல் தொடர்பு நீடிக்கிறது.

அண்ணாவின் வரலாறு என்பது தமிழகத்தின் வரலாறு. தமிழக அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றிய வரலாறு. அது வரை கோலோச்சி வந்த காங்கிரஸ் கட்சி; அதில் துருத்திக் கொண்டு நின்ற பார்ப்பனீயம்; இவற்றை முடிவுக்கு கொண்டு வந்த வரலாறு. அண்ணா; அவருக்குத் தலைவராக வாய்த்த பெரியார்; இவர்களின் தலைமையில் கிளர்ந்தெழுந்த திராவிட தமிழ் இனம்; இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாமல் பதுங்கிய ஆரியம்; சந்தேகமில்லாமல் தமிழகத்தின் பொற்காலம் அவை.    

அண்ணாவிற்குப் பிறகு, பெரியாருக்குப் பிறகு இந்த உணர்வு குன்றியது. கிளர்ச்சி தளர்ந்தது. சூழ்ச்சி விரிந்தது. புதுப் பொலிவோடு ஆரியம் தமிழகத்தை இன்று பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்று காங்கிரசில் புற வாசல் வழியாக வந்த இந்துத்துவம் இன்று நேரடியாக, ஒரு அரசியல் கட்சியாக, எண்ணற்ற அமைப்புகளாக களம் காண்கிறது. வட இந்தியாவிற்கே உரித்தான மதவெறி பிற்போக்குத் தனங்களுடன் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இன்று சமூக அமைதியை சீர் குலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றை முன்பை விட வீரியத்தோடு எதிர் கொள்ள வேண்டிய திராவிட கட்சிகளோ ஆரியத்தின் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.  

தமிழினம் இப்படி தன்னிலை மறந்து நிற்பதை அண்ணா அன்று இப்படி சுட்டிக் காட்டினார்: 

” தமிழர்கள் இந்துக்களல்லர். தமிழருக்குத் தனி நெறியுண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களைத் (சைவம், வைணவம்) தமிழர்கள் தம்மை இந்துக்கள் என்று கருதி வருகின்றனர். நெறியைவிட்டு ஆரிய நெறியாகிய இந்து மார்க்கத்தைக் கொண்டு, தம்மை இந்துக்கள் என்று கருதிக்கொள்வதால், தமிழர்கள் தாங்கள் தனி இனம் என்பதை மறந்து, இந்துக்களில் ஓர் பகுதி என்று எண்ணி தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர். – அறிஞர் அண்ணா (தீ பரவட்டும் – 1943)

ஈழத் தமிழர் இனப்படுகொலையில் இலங்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது என்று தமிழகம் எண்ணியபோது எழுந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாக திருப்பியது இந்துத்துவ வஞ்சகம். ஆனால் ராஜபக்சேக்கு பட்டுக் கம்பளம் விரித்து பதவியேற்ற அன்றே தமிழர்களின் முதுகில் குத்தியது. மீனவர்களை காப்பாற்றுவேன் என்று வாய் சவடால் அடித்து விட்டு அங்கே போய் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று இன்று திமிர் பேசுகிறது. 

தமிழகத்தில் இந்த கூட்டம் ஜெயித்த இடம் ஒன்றே ஒன்று. அது கன்னியாகுமரி மாவட்டம். ஒரு காலத்தில் இந்த மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. அப்போது அங்குள்ள மக்கள் குறிப்பாக நாடார் இனம் திருவிதாங்கூர் சமஸ்தான மேல் ஜாதி நம்பூதிரிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அந்த இனத்துப் பெண்கள் தங்கள் மார்பை மறைக்கவும் அப்போது தடை இருந்தது. அதற்கு எதிராக எழுந்ததே தோள் சீலை போராட்டம்.   

வேலை கேட்டு மனு செய்த நாடார் டாக்டர் ஒருவருக்கு தென்னங்கன்றுகளை கொடுத்து, குலத் தொழிலை செய்யச் சொன்னார் அன்றைய திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர். இந்தக் கொடுமைகளுக்கு எதிராகவும் குமரியை தாய் தமிழகத்துடன் இணைக்கவும் மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் போராட்டம் நடந்தது. பலரின் உயிர் தியாகத்திற்குப் பிறகு கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப் பட்டது.

இந்த சீரிய வரலாற்றிற்கு சொந்தமான குமரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த இந்துத்துவக் கூட்டத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி, மீண்டும் குமரியை கேரளாவுடன் இணைக்கப் பாடுபடுவேன் என்று பேசுகிறார். அந்தத் தியாகிகளை கொச்சைப் படுத்துகிறார்.

எந்த நாடார் இனம் அன்று நம்பூதிரிகளிடமும், நாயர்களிடமும் அடிமைப்பட்டு அவமானப்பட்டு நின்றதோ அந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்தான் இந்த பொன்னார். இதே சமூகத்தை சேர்ந்த தமிழிசைததான் இன்று பா.ஜ.க வின் தலைவி. 

இந்து முன்னணியை உருவாக்கிய தானுலிங்க நாடாரும் இந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்தான். தன்னை எதிர்த்த சமூகத்தை கொண்டே தன்னை நிறுவிக் கொள்வதலில் ஃபாசிசத்தின் சூழ்ச்சி மிஞ்சி நிற்கிறது. இதற்கு அது பயன்படுத்தியக் கருவி மதவெறி. பிற சிறுபான்மை சமூகத்திற்கெதிரான வெறுப்பு பிரச்சாரம். இதன் பயனாய் விளைந்ததே மண்டைக் காட்டு கலவரம். இந்த தானுலிங்க நாடார் முதலில் காங்கிரசில் இருந்த போது கோட்டாறு முஸ்லிம் பிரமுகர்களின் வீட்டில் உரிமையுடன் வந்து விருந்துண்டு மகிழ்ந்தவர் என்பதை நம்ப முடிகிறதா?     

ஆதித்தனார் இந்த சமுதாயத்தை சேர்ந்த கல்வியாளர். தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் பெருந்தகை. அன்றைய காலத்தில் பெரியார், அண்ணாவோடு களத்தில் நின்று இந்த திராவிட தமிழ் சமூகத்திற்காக உழைத்தவர். மேல்ஜாதி மொழி நடையில் வந்து கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு மத்தியில் எளிய நடையில் சாமானியர்களும் படிக்கும் வகையில் தினத்தந்தி பத்திரிகையை நிறுவியவர். அண்ணாவின் அமைச்சரவையில் சபாநாயகராக அழகு பார்க்கப்பட்டவர்.

இன்று இந்த தினத்தந்தி இந்துத்துவத்தை தூக்கிப் பிடிப்பதில் மட்டுமல்ல முஸ்லிம்களை பழிப்பதிலும் தினமலரை விஞ்சி நிற்கிறது. ராமகோபாலனின் மதவெறி அறிக்கைகளுக்கு இந்தப் பத்திரிகையில் பிரதான இடம் உண்டு. இதன் தொலைக்காட்சிப் பிரிவிலோ பாண்டே என்ற ரங்கராஜ் பாண்டே ரகுநாதாச்சார்யா இருந்து கொண்டு  ஆர்.எஸ்.எஸ்.சின் வாதங்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் முன் வைத்துக் கொண்டிருக்கிறார் (முன்பு தினமலரில் வேலை பார்த்தவர்).       

சனாதான இந்துத்துவம் தமிழகத்தில் தன் வலையை எப்படி நீளமாகவும் அகலமாகவும் விரித்து வைத்திருக்கிறது என்பது விளங்குகிறது அல்லவா?

இவ்வளவு பகிரங்கமாக இந்துத்துவம் தன் சுயரூபத்தைக் காட்டிய பிறகும் அதை தோளில் சுமந்து ஆதரவு தெரிவிக்கும் திராவிடத்தை தன் பெயரில் வைத்திருக்கும் கட்சிகளை நினைத்தால் தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இருள் தெரிய வரும். இதனால்தான் அண்ணாவை, பெரியாரை நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறோம். அன்னாரது கொள்கைகள் மீள் எழுச்சிப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போதுதான் தமிழகம் மதவெறி சுடுகாடாகாமல் தப்பும். சமூக நல்லிணக்கம் தழைக்கும். அமைதிப் பூங்காவாக மிளிரும். இந்த நல்லிணக்கமும் அமைதியும் தான் இந்த தமிழ் நிலத்தின் இயல்பான நாகரீகம். அண்ணாவின் இந்தப் பிறந்த தினம் இந்த சிந்தனையை இங்கே விதைக்கட்டும். 

அண்ணாவிற்கும் பெரியாருக்கும் சில விசயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. அதில் ஒன்று கடவுள் கொள்கை. கடவுளே இல்லை என்பார் பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பார் அண்ணா. தமிழ் புலவர் திருமூலரின் கூற்றைதான் அண்ணா எங்களுக்கு சொன்னார் என்பார் கலைஞர் உள்ளிட்ட தம்பிமார்கள். இஸ்லாத்தின் தாக்கமும் அவரிடத்தில் இருந்திருக்கலாம் என்பது நமது அனுமானம். இதோ அண்ணா கடவுள் கொள்கையை பற்றிப் பேசுகிறார்:     

” நமக்கு நாலு; ஆறு நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! உண் வேண்டாத சாமி! ஊரார் காசை கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்காராதிகள், அப்பம், பாயசம், அகாரவடிசல் கேட்காத சாமி! அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி அக்ரகாரத்தை கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும்! நம்மிடமிருந்து தியானத்தைப் பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சினைப் பெற்று தக்பாசூரர்களக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.” – ஆரிய மாயை – கட்டுரை – 26.01.1943

(அண்ணாவின் மேற்கோள்கள் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை) 

- முஹம்மது ஃபைஸ்  
http://www.thoothuonline.com/archives/68536#sthash.P6ikBzJ7.dpuf
அண்ணா என்றொரு அறிஞர் பெருமகன் - முஹம்மது ஃபைஸ் அண்ணா என்றொரு அறிஞர் பெருமகன்  - முஹம்மது ஃபைஸ் Reviewed by நமதூர் செய்திகள் on 21:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.