தெரிந்தேதான் செய்கிறீர்களா மோடி?
திட்டக் குழு என்பது நமது தேசத்தை உருவாக்கியவர்களின் பெரும் கனவு.
ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர், தேசிய திட்டக் குழுவைக் கலைத்துவிடுவதாகவும், அதன் இடத்தில் காலத்தின் தேவைக்கேற்ப ஒரு புதிய அமைப்பை உருவாக்க இருப்பதாகவும் அறிவித்தார். 130 கோடி மக்களை உள்ளடக்கி, பல சமூக, வர்க்க, பிரதேச, கலாச்சார வேறுபாடுகளை உடைய, நாட்டில் ஒன்றுபட்ட வளர்ச்சியை உருவாக்குவதில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் பெரும் பங்கு வகித்த ஒரு தேசிய நிறுவனத்தை, தகுந்த தயாரிப்பும் மாற்று ஏற்பாடுகளும் இல்லாத சூழ்நிலையில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று முடக்குவது சரியா என்ற கேள்வி பல தரப்புகளிலும் எழுந்துள்ளது.
தேசிய திட்டக் குழு என்பது ஓர் அரசுத் துறை சார்ந்த அலுவலகமல்ல. அதனுடைய நீண்ட வரலாற்றை அறிந்தவர்கள், சுதந்திர இந்தியாவை உருவாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அற்புதமான தலைவர்களின் ஏக்கமும் கனவும் அது என்று தெரிந்துகொள்வார்கள். தேசிய திட்டக் குழு1951-ல் உருவாக்கப்பட்டாலும், அந்த சிந்தனையின் கரு சுதந்திரத்துக்கு முன்பே உருவானது. 1938-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸிடம் விஞ்ஞானி பி.சி. மகலானோபிஸ் ஒரு வினாவை எழுப்பினார். “அரசியல் சுதந்திரம் பெற்ற பின்பு, இந்த நாட்டு ஏழை மக்களுக்கு சமூக, பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் முன்னேற்றத்தை எப்படித் தரப்போகிறீர்கள் ? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். திகைத்துப்போன போஸ் அவரிடமே “என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று கேட்டார். அப்போது மகலானோபிஸ், “இந்தியாவைப் போன்ற ஒரு பரந்த தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீண்ட காலத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் அட்டவணைப்படி அந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறதா என்று மேற்பார்வையிட்டுத் தகுதியான ஆலோசனைகள் வழங்க விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல் தலைவர்கள் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டும்” என்று சொல்லி திட்டமிடுதலின் அவசியத்தை காங்கிரஸ் தலைவர்களுக்கு விளக்கினார். அதன் அவசியத்தை உணர்ந்த சுபாஷ் சந்திர போஸ், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த விஞ்ஞானி விஸ்வேஸ்வரய்யா தலைமையில் ‘தேசிய திட்டக் குழு’வை அமைத்தார். ஒரு விஞ்ஞானி தலைவராக இருப்பதைவிட இந்திய மக்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்ட ஒரு அரசியல் தலைவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று மகலானோபிஸ் சொன்னதற்கு இணங்க விஸ்வேஸ்வரய்யா மனமுவந்து தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, நேரு அதற்குத் தலைவராக ஆனார்.
1951-ல் உருவாக்கப்பட்ட தேசிய திட்டக் குழுவுக்குப் பிரதமர் நேருவே தலைவராக இருந்தார். முரண்பாடுகள் நிறைந்த தேசத்தின் முரண்பாடுகளை அகற்றவும், நாடெங்கிலும் மக்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் இருந்த ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களைத் தூக்கி நிறுத்தவும் தேசிய திட்டக் குழு வரலாற்றுப் புகழ்மிக்க முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டது, இன்று திட்டக் குழுவின் மரண உத்தரவில் கையெழுத்திட்டிருப்பவர்களுக்குச் சில வரலாற்று உண்மைகள் தெரிந்தாக வேண்டும்! முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது நிகழந்தவை திட்டக் குழுவின் பொற்காலத் தயாரிப்புகள்.
தொலைநோக்குப் பார்வை
தன்னலமற்ற அணுகுமுறையும் தொலைநோக்குப் பார்வையும், உலக அறிவும் நிரம்பப்பெற்றவர்களாக இருந்த பல சாதனையாளர்கள் திட்டக் குழுவில் அங்கம் வகித்து அதன் பணியைச் செழுமைப்படுத்தினார்கள். அரசு இயந்திரத்தை எந்த வகையிலும் சாராத தன்னாட்சி அமைப்பாகத் திட்டக் குழு இயங்கியது. அரசுத் துறைகளின் வழக்கமான ‘செக்குமாடு’அணுகுமுறை, எதிர்மறைச் சிந்தனை, எஜமானப் பார்வை இல்லாமல் தன் செயல்பாட்டை அமைத்துக்கொண்டது. காங்கிரஸ் இயக்கத்தின் தத்துவங்களோடும் சிந்தனைகளோடும் மிகப்பெரும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள்கூட திட்டக் கமிஷனில் இடம்பெற்றிருந்தனர். வி.டி. கிருஷ்ணமாச்சாரி, அசோக் மேத்தா, மகலானோபிஸ், பீதாம்பர்பந்த் போன்ற அறிஞர்கள் தத்துவச் சிந்தனைகளையும் அறிவியல் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்தனர்.
கால்பிடுரய்த், நிக்கோலஸ் ஜார்ஜ் சூசவ், ரோஜன், ஈ.எஃப். ஷுமாக்கர், காலக்கி போன்றவர்கள் ஆலோசகர்களாக இருந்து, உலகம் முழுவதுமிருந்து திரட்டிய அனுபவங்களை நமது திட்டக் குழுவோடு பகிர்ந்துகொண்டார்கள். இத்தகைய உலக அறிஞர்களோடு காந்திய, சர்வோதயச் சிந்தனையாளர்களான ஜே.சி. குமரப்பா போன்றவர்களும் அமர்ந்து இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் திட்டங்களைத் தீட்டினார்கள். ஒருமுறை, திட்டக் குழு அலுவலகமான யோஜனா பவனுக்கு அதன் உறுப்பினர் ஜே.சி. குமரப்பா வாடகைக்குப் பிடித்த குதிரை வண்டியில் வர, காவலர் அவரை உள்ளே விட மறுத்துவிட்டார். திட்டக் குழு உறுப்பினர் வாடகைக் குதிரை வண்டியில் வருவாரா என்ற சந்தேகம் அவருக்கு. பின்பு, பிரதமர் நேருவுக்குத் தகவல் தரப்பட்டு, அவர் தலையிட்டுக் குதிரை வண்டியை உள்ளே விடச் செய்தாராம்.
இந்தத் திட்டக் குழுதான் இந்தியா முழுவதும் உள்ள ஜீவ நதிகளில் கட்டப்பட்ட பெரும் அணைகளுக்குத் திட்டம் தந்தது; பெரும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது; கனரகத் தொழிலை வளர்த்தது, சிறு-குறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கான ஆதாரங்களை உருவாக்கியது; நிலச்சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தியது; தேசிய நெடுஞ்சாலைகள், உயர் அழுத்த மின்பாதைகள், அனல் மின்நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்று இன்றைய நவீன பாரதம் உருவாகக் களம் அமைத்துத் தந்தது திட்டக் குழுதான்.
காட்கிலும் தண்டவதேவும்
திட்டக் குழுவின் இரண்டு துணைத் தலைவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இந்தியப் பொருளாதாரம் எப்படி இயங்க வேண்டும் என்ற வரைபடத்தைத் தயாரித்தவர்கள் அவர்கள். ஒருவர் பொருளாதார அறிஞர் டி.ஆர். காட்கில். இந்திரா காந்தியின் கீழ் திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார். நமது நிதி ஆதாரங்கள் எவ்வித முன்னுரிமையில் செலவிடப்பட வேண்டும் என்ற வரைபடத்தைக் கொடுத்தவர் அவர். மத்திய அரசின் வருவாயும் நிதி ஆதாரங்களும் மாநில அரசுகளுக்கு எப்படிப் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்ற சூத்திரத்தை உருவாக்கியவர் அவர். இன்றுவரை அது ‘காட்கில் பார்முலா’ என்றே அழைக்கப்படுகிறது. அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து போன்ற மாநிலங்களைச் சிறப்புவகை மாநிலங்களாக வகைப்படுத்தி, நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியவர் அவர். மற்றொருவர் சோஷலிஸ்ட் தலைவர் மது தண்டவதே, வறுமைக்கோட்டு எல்லை எப்படி வரையறுக்கப்பட வேண்டும் என்ற சமூகநீதிக் கணிதத்தை முதலில் வழங்கியவர்.
பிரதமர் தயவில்…
கால வெள்ளத்தின் நெருக்கடியிலும், அரசியல் சுயநலவாதிகளின் தாக்குதலிலும் திட்டக் குழு தனது உயர்ந்த அடையாளங்கள் சிலவற்றைத் தொலைத்தது உண்மை. ஆனால், திட்டக் குழு தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகளும், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற மாறுபாடுகளும், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதிலும் - பங்கிட்டுக்கொள்வதிலும் மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கின்ற கருத்து வேறுபாடுகளும் முழுமையாக முடிந்தபாடில்லை.
பல்வேறு அரசியல் கட்சிகள், பல சித்தாந்தத் தொகுப்பு கள், பல சமூகப் பின்புலங்களைச் சார்ந்தவர்கள், மாறுபாடான தேவைகளையுடையவர்கள் என்று எல்லோ ரையும், எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்களையும் நிதி ஆதாரங்களுக்காக ஒரு கோரிக்கை மனுவுடன் பிரதமரின் தயவுக்காக அவரது வரவேற்பறையில் காக்க வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. மத்திய-மாநில நிதிப் பங்கீட்டை மத்திய நிதி அமைச்சரின் தலையசைவுதான் முடிவுசெய்யும் என்ற நிலை வந்துவிட்டால், கூட்டாட்சித் தத்துவம் சிதறிவிடும். திட்டக் குழுவை எடுத்துவிட்டு, பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் ஆலோசனை வழங்க அறிஞர்கள் அடங்கிய ஒரு ‘சிந்தனைத் தொட்டி’அமைக்கப்படும் என்று கசிய விடப்படும் தகவல்கள் உண்மையானால் அது மிகப் பெரும் துரதிருஷ்டம்.
பரந்த இந்த தேசத்தின் புவியியல், பொருளியல், சமூகவியல் சார்ந்த புள்ளிவிவரங்களைத் தொகுத்துத் தரும் தகவல் களஞ்சியமாகவும், தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப விரிவாக்கங்கள், அடிப்படைக் கட்டுமானப் பணிகள், சமூக வளர்ச்சித் திட்டங்கள், மனிதவள மேம்பாடு போன்றவற்றில் மேலும் பல பரிமாணங்களுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஓர் அமைப்பை ஒரே உத்தரவில் அடித்து நொறுக்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல. எலிகளுக்குப் பயந்து எஃகுக் கோட்டையை எடுப்பது எப்படிச் சரியாகும்? திட்டக் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு மரணம் மட்டும் தீர்வு என்று சொல்வது நியாயமா?
சா. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
தொடர்புக்கு: spalphonse@yahoo.com
தெரிந்தேதான் செய்கிறீர்களா மோடி?
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:25:00
Rating:
No comments: