ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதால்,
ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங் சுனில் ஜோஷியைப் போட்டுத் தள்ளியதாக செய்திகள் வெளியாகின
தற்போது மோடியின் ‘நல்லாட்சி’யில் அஜ்மீர், மாலேகான், சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் மரணம் குறித்த விசாரணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள ‘திடுக்கிடும்’ திருப்பங்கள் கடந்த சில நாட்களாக ஆங்கில ஊடகங்களில் கசிய விடப்பட்டு வருகின்றன.
அதாவது, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீற பல முயற்சிகள் எடுத்தாராம். இதனால் ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங், சுனில் ஜோஷியைப் போட்டுத் தள்ளியதுதான் ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் ‘திடுக்கிடும்’ திருப்பங்களின் சாராம்சம்.
2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது ஒரு வெடிகுண்டு.
சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் கலைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்தன.
என்ன நடக்கிறது என்பதைக் கூட உணர வாய்ப்பில்லாத நேர இடைவெளிக்குள் நடந்த இந்த தாக்குதலில் அப்பாவி முசுலீம் மக்கள் சிதறடிக்கப்பட்டனர். பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
2007-ம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பாகிஸ்தான் ’தீவிரவாதிகள்’ தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்று வெடித்த வெடிமருந்தின் கந்தகப் புகை அடங்குவதற்குள் பத்திரிகைகளால் அனுமானிக்கப்பட்டது.
மீண்டும் 2008-ம் ஆண்டு மாலேகானின் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டு நால்வர் கொல்லப்பட்டனர். 2006ம் ஆண்டு துவங்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு மாலேகானைத் தொடர்ந்து, ஆஜ்மீர், ஹைதரபாத் (மெக்கா மஸ்ஜித்), தானே, கோவா, நந்தியாத், கான்பூர், பானிபட் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியான இடைவெளியில் குண்டுகள் வெடித்தவாறே இருந்தன.
ஒவ்வொரு முறையும் இந்திய ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்க பத்திரிகைகளும் உடனடியாக பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டின. இந்திய முஜாஹிதீன் என்கிற ஒரு அமைப்பு இருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் உண்டெனவும், அவர்களுக்கு முன்பு தடைசெய்யப்பட்ட சிமி அமைப்பும் சேர்ந்து இந்தியாவின் மேல் பயங்கரவாதப் போர் ஒன்றைத் தொடுத்திருப்பதாகவும் கதைகள் பின்னப்பட்டன.
பின்னப்பட்ட கதைகளுக்குப் பொருத்தமான நடிகர்கள் தேவையல்லவா? அதனால், ஒவ்வொரு முறை குண்டு வெடித்த பின்னும் அக்கம் பக்கத்தில் தாடி, குல்லாவுடன் நடமாடிய நபர்களை அள்ளிச் சென்று தீவிரவாதிகள் என்று தலைப்பிட்டு பத்திரிகை வாய்களுக்கு அவல் போட்டுக் கொண்டிருந்தனர்.
இதில் ஒரு கேள்வி வருகிறது. அட, அனேகமான குண்டுவெடிப்புகளில் குறிவைக்கப்பட்ட இலக்கு இசுலாமியர்கள் வசிக்கும் பகுதியாகவும், அவர்கள் தொழும் இடங்களாகவும் இருக்கிறதே, என்னதான் தீவிரவாதிகளாய் இருந்தாலும் பாய்மார்கள் தங்கள் சொந்த ஆதரவு சக்திகளையே (இந்துத்துவ அளவுகோலின் படி) தாக்கிக் கொல்லும் அளவுக்கு அத்தனை கேனையர்களாகவா இருப்பார்கள்?
இந்த கதை திரைக்கதை வசனம் நடக்கும் களம் வட இந்தியா என்பதையும், காட்சிகள் ஓடும் திரையரங்குகள் ஆங்கில, இந்தி ஊடகங்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு போன்ற பெரியார் பாரம்பரியம் கொண்ட மாநிலத்திலேயே கள்ளக் காதல், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி தகராறுகளில் சக ரவுடிகளால் காவி ரவுடிகள் கொல்லப்படும் போது “சிக்கிய பக்ருதீன், சிக்குமா 20 பேர் டீம்?- போலீஸ் பக் பக்” என்று தலைப்பிட்டு கூத்தாடும் ஜூனியர் விகடன்கள் இருக்கும் போது, வட இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
போகட்டும், மாலேகான் துவங்கி வடக்கில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு போலீசு வரைந்த திரைக்கதை வசனம் நீதி மன்றத்தில் எடுபடவில்லை. என்ன தான் நீதித் துறையும் காவித் துறையாக இருந்தாலும், சொல்லும் கதை கொஞ்சமாவது தர்க்கப் பொருத்தத்துடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறதே. தொடரும் விசாரணைகளில் கிடைத்த தடயங்கள், ஆதாரங்கள் காவி கும்பலை நோக்கி தவிர்க்கவியலாமல் சென்று சேர்கிறது.
ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங், அசீமானந்தா, முன்னாள் இராணுவ அதிகாரி புரோகித் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மேல் மட்டம் துவங்கி கீழ்மட்டம் வரை பயங்கரவாத அமைப்புக்குள் பயங்கரவாத அமைப்பாக ஒரு பயங்கரவாத வலைப்பின்னல் செயல்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இன்றைக்கு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா, வெறுமனே காங்கிரசின் மேல் மக்கள் கொண்டிருந்த சலிப்பின் காரணமாக மட்டும் இந்த வெற்றியைப் பெற்று விடவில்லை – மக்களின் பொதுப் புத்தியையும் நடுத்தர வர்க்க இந்து உளவியலையும் திட்டமிட்ட ரீதியில் 2000-ம் ஆண்டுகளின் மத்தியிலிருந்தே தயாரித்துள்ளார்கள். அந்த தயாரிப்புகளுக்கு குண்டு வெடிப்புகள் மிக முக்கிய பங்காற்றியுள்ளதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
பிடிபட்ட இந்து பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணைகளில் இருந்து பல உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன. ஆஜ்மீர், சம்ஜௌதா உள்ளிட்ட சில தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியரான சுனில் ஜோஷி. அவரும் ப்ரக்யா சிங்கும் இணைந்து பல்வேறு தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வந்தனர்.இவர்கள் இருவருக்கும் அசீமானந்தா சாமியார் குறிப்பிட்ட சில காலம் தனது வனவாசி கல்யாண் ஆஷ்ரம் (இது ஒரு ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு) அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிரமம் ஒன்றில் அடைக்கலம் கொடுத்ததோடு, பல தாக்குதல் சம்பவங்களின் திட்டமிடுதலிலும், செயல்படுத்துவதிலும் இணைந்திருந்தார். இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மேல் மட்டத் தலைகளும் நேரடியாக தமது ஆசிகளை வழங்கியிருக்கின்றனர் என்பதும் வெளியானது.
சுனில் ஜோஷியின் கொலையை காதல் – கள்ளக் காதல் கொலையாகக் காட்டி அதன் மேல் ஒரு பாலியல் வண்ணத்தைப் பூசுகின்றது மோடி அரசு.
மேலும், விசாரணை அமைப்புகளின் பிடி மெல்ல மெல்ல இறுகி வருவதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ் மேல் மட்ட தலைகள், அதன் கரங்கள் தங்கள் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் நிலை உருவாவதைத் தவிர்க்க சில நடவடிக்கைகளை எடுக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை தற்காலிகமாக அமைப்பில் இருந்து நீக்கியுள்ளனர். மொத்த வலைப்பின்னலையும் ஒருங்கிணைத்து நடத்திச் சென்ற சுனில் ஜோஷி நிரந்தரமாக உலகத்தை விட்டே நீக்கப்படுகிறார்.
தனது தாயாரின் சொந்த ஊரில் தலைமறைவாக இருந்த சுனில் ஜோஷி, அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியில் இருந்த போது படுகொலை செய்யப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக அவரது பாதுகாவலர்களாக நியமிக்கப் பட்டிருந்த ராஜ், மேகூல், கான்சியாம், உஸ்தாத் ஆகிய நான்கு உதவியாளர்களும் இந்த சம்பவத்தின் பின் மாயமாகியிருந்தனர்.
இது அனைவரும் அறிந்த வரலாறு.
இதுவரை, நடந்த முடிந்த விசாரணைகளின் திசை ஒருவாறாக இருக்கும் போதே அதற்கு சற்றும் பொருந்தாத முடிவுகளுக்கு தேசிய புலனாய்வுத் துறை வந்தடைந்திருப்பதற்கும் தற்போது மோடி மத்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதற்கும், இந்துத்துவ பயங்கரவாதம் அரசியல் சட்டபூர்வ வடிவங்களை எடுத்து வருவதற்கும் இடையே உள்ள தொடர்புகளை தனியே விளக்கிப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் அதற்கிருக்கும் தொடர்புகளை 2008-ம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட ரீதியில் பூசிமொழுகி வந்தது. தப்பியோடும் பல்லி, ஆபத்து நெருக்கடிகளின் போது வாலைக் கத்தரித்து விடுவது போல சுனில் ஜோஷியைத் திட்டமிட்டே கொன்றிருந்தனர் எனபதே ஏற்கனவே கிடைத்திருந்த தடயங்களின் யதார்த்தப்பூர்வமான நீட்சியாக இருந்திருக்க வேண்டும்.
இந்நிலையில், சுனில் ஜோஷியின் கொலையை காதல் – கள்ளக் காதல் கொலையாகக் காட்டி அதன் மேல் ஒரு பாலியல் வண்ணத்தைப் பூசுவதன் மூலம் அக்கொலையைத் தொடர்ந்த தர்க்கபூர்வமான காரணிகளின் சங்கிலித் தொடர் தனது காக்கி டவுசரோடு பிணைக்கப்பட்டிருப்பதை மூடி மறைக்கவே இந்த புதிய கதை கட்டப்பட்டுள்ளது.
இப்படிச் சொல்வதால் , ‘தேசத்தின் நலனுக்காக திருமண வாழ்க்கையை மறுத்து, பாலியல் இன்பங்களைத் துறந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் துறவிகளைப் போல் வாழ்பவர்கள்’ என்று பீற்றிக் கொள்ளப்படும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்களின் (பிரச்சாரக்) தனிப்பட்ட ஒழுக்கசீலங்களைப் பற்றிய மயக்கங்கள் ஏதும் இருப்பதாக அர்த்தம் இல்லை.
சட்டசபைக்குள் புளூ பிலிம் பார்த்ததாகட்டும், கோவிந்தாச்சார்யா – உமாபாரதி விவகாரங்களாகட்டும், சஞ்சய் ஜோஷியின் நீலப்பட சி.டியாகட்டும், இன்னும் ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளாகட்டும் – அவர்களே சொல்லிக் கொள்ளும் ஒழுங்கசீலத்தின் மேல் அவர்களே ஒண்ணுக்கடிக்கும் போது நாம் மட்டும் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும். ஆனால் இங்கே ஒரு பயங்கரவாத செயலை மறைப்பதற்கே சங்க வானரங்கள் இப்படி ஒரு கதையை புனைந்துரைக்கின்றன.
ஒட்டு மொத்தமாக பாலியல் காரணங்களைக் காட்டி ஜோஷியின் மரணத்தை மட்டுமல்ல, குண்டு வெடிப்புகளையே கூட இதே காரணத்தைக் கொண்டோ அல்லது இதையொத்த வேறு அற்பக் காரணங்களை முன்வைத்தோ இந்துத்துவ பாசிஸ்டுகள் வேறு ஒரு திசைக்கு நகர்த்தும் சாத்தியங்களும் இருக்கிறது.
மோடி ஆட்சியில் இந்தியாவின் வரலாறு மட்டும் திருத்தப்படுவது இல்லை, இந்துமதவெறியர்களின் குற்றச் செயல் வரலாறும் மாற்றி எழுதப்படுகிறது. வரலாற்றை திருத்தும் பாசிசத்தின் பிரச்சாரப் பணி ஆரம்பித்து விட்டது என்பதால் பயங்கரவாதம் இனி நம் வீட்டுக்கதவை எப்போதும் தட்டலாம்.
நன்றி : வினவு
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:54:00
Rating:
No comments: