சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை தடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!
சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை தடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!
**************************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சுதந்திர இந்தியாவில் சாலைகளில் பயணிக்கக்கூட கட்டணம் செலுத்தினால் மட்டுமே முடியும் என்ற ஒரு அவலச் சூழலை சுங்கச்சாவடிகள் மூலம் பொதுமக்களுக்கு அரசுகள் ஏற்படுத்திவிட்டன.
மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டுத் தேவைகளுள் ஒன்றான சாலை வசதியினை செய்து தருவது மட்டுமல்லாமல், அதனை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது அரசின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். இந்த பணிகளுக்கென்றே ஒவ்வொரு வாகனம் மூலமும் சாலை வரிகள் உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை நிர்ணயமும் சாலை வழி போக்குவரத்தையும் உள்ளடக்கியே அமைந்துள்ளது.
ஆனால் மாறிவரும் தனியார் மயமாக்கலில் சாலை வசதியும் அரசின் கைகளிலிருந்து தனியாருக்கு மாறிவிட்டது. இதன் காரணமாக சாலைகள் பராமரிக்கப்படுவதாகக் கூறி ஆங்காங்கே சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் எல்லா வகைகளிலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 234 சங்கச் சாவடி மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில்தான் அதிக அளவில் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் தான் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. அவ்வப்போது கட்டணங்களும் அதிகப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சரக்கு வாகன கட்டணங்கள், பேருந்துகளின் கட்டணங்கள் அதிகரிக்கின்றன. இதனால் ஏற்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவை பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்றன.
கோடிக்கணக்கில் சுங்கக் கட்டணக்களை வசூலிக்கும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள், முறையாக சாலைகளை பராமரிப்பது கிடையாது, பராமரிப்பு பணிகளுக்காக போதிய அளவில் ஊழியர்களையும் நியமிக்காமல் ஒட்டு வேலைகளை மட்டுமே செய்கின்றனர். பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் கூட இல்லாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துக்களும் அதிக அளவில் நடக்கின்றன. சாலை அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிடப், பன்மடங்கு ஆதாயங்களை ஒப்பந்த நிறுவனங்கள் பார்த்துவிட்டன. இருப்பினும் இந்த கொள்ளைகள் அரசின் அனுமதியோடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
இந்நிலையில் சுங்கச் சாவடி கட்டணத் தொகையை 10 முதல் 40 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் முதல் கட்டமாக 20 சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள 21 சாவடிகளிலும் கடந்த வாரம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், அவ்வப்போது கட்டணங்களை உயர்த்துவது, புதிய சுங்கச்சாவடிகளை திறப்பது போன்றவை மென்மேலும் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் மக்கள் விரோத நடவடிக்கையாகும். ஏற்கனவே அரசின் தவறான பொருளாதார அணுகு முறையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளான நிலையில் இந்த கட்டண உயர்வுகள் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே ஒப்பந்த காலங்கடந்தும் கட்டண வசூலில் ஈடுபடும் சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் கட்டணங்களை முறைப்படுத்தி குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இது தவறும் பட்சத்தில் சுங்கச்சாவடிகளை எதிர்த்து மிகப்பெரிய அளவில் மக்கள் திரள் போராட்டத்தினை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை தடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:42:00
Rating:
No comments: