தாரைவார்க்கப்படுகிறதா தேசத்தின் சொத்து?
தாரைவார்க்கப்படுகிறதா தேசத்தின் சொத்து?
ரயில்வேயில் தனியாரை அனுமதிப்பது லாப வேட்டைக்குத்தான் வழிவகுக்கும்.
இந்திய ரயில்வே. உலகின் மிகப் பெரிய வலையமைப்புகளுடன் லாப நோக்கமின்றிச் செயல்படும் சேவை நிறுவனம். மக்களின் சேவகனாக இருந்துவரும் ரயில்வேயைப் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதற்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் பெட்டியின் கடைசிச் சக்கரம் கீச்சிடும் சத்தம்கூடத் தனியாருக்குச் சொந்தமானதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பெருவேட்கையின் வெளிப்பாடாக ஆயிரமாயிரம் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
உண்மையில், பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ரயில்வே சட்டம் 1889-ம், இப்போது நடைமுறையில் இருக்கும் ரயில்வே சட்டம் 1989-ம்
இந்திய ரயில்வேயில் எல்லா வகையிலும் தனியார் பங்கேற்க அனுமதிக்கிறது. அதே நேரம், ரயில்வே போக்குவரத்தின் உரிமையும் நிர்வாகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தொழிற்கொள்கைத் தீர்மானம் 1948 வலியுறுத்தியது.
பின்னர், ‘தொழிற்கொள்கைத் தீர்மானம் 1956’-ன்படி ரயில்வே உள்ளிட்ட 17 துறைகள் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்தத் தொழிற்கொள்கைத் தீர்மானம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் போல பொருளாதார அமைப்புச் சட்டம் என்று கூறப்பட்டது. அதனால், எளிதில் மாற்ற முடியாததாக இந்தச் சட்டம் வரையறுக்கப்பட்டது. ஆனால்,
1991-ல் தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை இந்தியாவுக்குள் அனுமதித்தபோது அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 9 துறைகள் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டன. 8 துறைகள் மட்டும் அரசு வசமே இருந்தன.
போட்டிபோடும் பாஜகவும் காங்கிரஸும்
1998-ல் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு, பொதுத்துறைகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை, முக்கியத்துவம் இல்லாதவை எனப் பிரித்தது. கேந்திர முக்கியத்துவம் இல்லாததாக வகைப்படுத்தப்பட்டவற்றில் தனியாரை அனுமதித்தது. இந்த நடவடிக்கையால் 14 துறைகளில் தனியார் நுழைந்தார்கள். ரயில்வே உள்ளிட்ட மூன்று துறைகள் மட்டுமே அரசுக் கட்டுப்பாட்டில் நீடித்தன. பொதுத்துறை நிறுவனங்களுக்கு அத்தோடு சோதனைக் காலம் முடியவில்லை. 2013-ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு, தனியாரை இன்னும் ஆழமாகப் பொதுத் துறைகளுக்குள் ஊடுருவச் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி ரயில்வே துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது. ரயில்வேயின் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி முதலீடு, பாரமரிப்பு ஆகிய நடவடிக்கைகளில் தனியாருக்கு உரிமம் வழங்கலாம் என 2009-ல் நிதியமைச்சகம் வெளியிட்ட நிலைஅறிக்கையில் கூறப்பட்டது. இதன் பேரிலேயே ரயில்வேயின் பல பிரிவுகளில் தனியார் காலூன்றத் தொடங்கினார்கள்.
தனியாருக்குச் சமர்ப்பணம்
இந்த நிலையில், ரயில்வே துறையின் முக்கியமான 10 பிரிவுகளின் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஆகஸ்ட் 22-ல் மத்திய அரசின் வணிக மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழிற்கொள்கை, முன்னேற்றத் துறையின் அரசிதழ் தெரிவித்துள்ளது. இதன்படி, புறநகர்ப் போக்குவரத்துத் திட்டங்கள் (அரசு - தனியார் பங்களிப்பு மூலம்), உயர்வேக ரயில் திட்டங்கள் (புல்லட் ரயில் உட்பட), தனி சரக்குப் போக்குவரத்துப் பாதைகள், ரயில்வண்டி தொடர் அமைப்புகள், இன்ஜின்கள், கோச்சுகள் ஆகியவற்றின் உற்பத்தியும் பராமரிப்பும் தனியாருக்கு அளிக்க வகைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே மின்மயமாக்கல், சிக்னல்கள் அமைத்தல் போன்றவற்றோடு சரக்கு முனையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்பூங்காக்களில் உள்ள ரயில்வே லைன்கள், சைடிங்குகள் ஆகியவற்றை மெயின் லைனுக்கு இணைப்பது மற்றும் அதிவிரைவுப் போக்குவரத்து அமைப்புகள் ஆகிய பணிகளையும் தனியாருக்குச் சமர்ப்பிக்கப்போகிறார்கள்.
காத்திருந்து காத்திருந்து…
மேற்கண்ட இனங்கள் அல்லாத மீதமுள்ளவற்றில், ரயில் இயக்குதல் பணி மட்டும் அரசு வசம் இருக்கும். மற்ற அனைத்திலும் தனியாரும் அந்நிய நேரடி முதலீடும் எந்தத் தடையுமின்றி வரலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரயில்வேயில் தனியார் பங்கேற்பு 0.62% இருந்தது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 36% எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்தது வெறும் 4%. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டு ரூ.1,000 கோடிகூட வரவில்லை. ரேபரேலி ரயில்பெட்டித் தொழிற்சாலை, மாதேபுரா மின்சார இன்ஜின், மரோரா டீசல் இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை போன்றவற்றிலும், கிழக்கு-மேற்கு தனிச் சரக்கு ரயில் பாதை அமைப்பதிலும் தனியாரை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்ததில் கண்கள்தான் பூத்துவிட்டன. எவரும் வரக் காணோம்!
டெல்லி, மும்பையில் மெட்ரோ கார்ப்பரேஷனுடன் இணைந்து ரயில் போக்குவரத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ். அதிகக் கட்டணத்தை நிர்ணயித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அதில் லாபம் இல்லை என்பதால் பாதியில் ரிலையன்ஸ் கழன்றுகொண்டது. ஆக, ரயில்வேயைப் பொறுத்தவரை தனியார்மயத்தால் முதலாளிகளுக்கோ மக்களுக்கோ பயன் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பொதுத்துறையாக அரசிடம் இருக்கும் வரைதான் ரயில்வே பயன் தரும். இருப்பினும், கொள்கையில் பங்காளிகளாக இருக்கும் காங்கிரஸும் பாஜகவும் ரயில்வேயைத் தனியார்மயமாக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அர்ஜென்டினாவின் நிலை
அர்ஜென்டினாவில் ரயில்வே தனியார் வசம் இருக்கிறது. எதிர்பார்த்த லாபம் இல்லை என்று காரணம் காட்டி 35,000 கிலோ மீட்டராக இருந்த தூரத்தை 8,500 கிலோ மீட்டராகத் தனியார் குறைத்துவிட்டார்கள். 95 ஆயிரமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமானது. ரயில்வே சேவை முழுமையாகக் கிடைக்காமல் மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால், தனியார்மயத்துக்கு முழுக்குப் போட்டு, ரயில்வேயை அரசுடைமையாக்க அந்த நாட்டின் புதிய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதுதான் தனியார்மய நிலைமை.
பிரிட்டிஷ் இந்தியாவில் ரயில்வே தனியாரிடமே இருந்தது. அவர்களுக்கு 5% வருமானத்தை பிரிட்டிஷ் அரசு உத்தரவாதம் செய்தது. இதற்காகத் தனியார் முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்திக் காட்டி அரசிடமிருந்து பணத்தைக் கறந்தார்களே தவிர, போக்குவரத்துத் தேவைக்கேற்ப ரயில்வேயை விரிவாக்கம் செய்யவில்லை. தனியாருக்கு லாபம் மட்டுமே குறி என்பதை உணர்ந்த அப்போதைய பிரிட்டிஷ் அரசு, 1924-ல் ரயில்வேயை அரசுடமையாக்கியது.
லாபத்தின் மீது கட்டும் கோட்டை
உலக அனுபவங்களும் உள்நாட்டு அனுபவங்களும் உரக்கச் சொல்வது, தனியார்மயம் என்பது லாபத்தின் மீது கட்டப்பட்டது. சேவை மனப்பான்மை என்பது தனியாருக்குக் கெட்ட வார்த்தை. இருப்பினும், ஆட்சியாளர்கள் அவர்களுக்காகவே திட்டங்களை வகுக்கின்றனர்.
இந்திய மக்களோடும் தொழில்துறையோடும் பின்னிப்பிணைந்திருக்கும் பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து படிப்படியாகக் கைவிட்டுத் தனியாருக்கும் அந்நிய முதலீட்டுக்கும் திறந்துவிட பாஜக அரசு முடிவுசெய்துள்ளது.
இதுவரை ஆர்வம் காட்டாத தனியாரைக் கவருவதற்காக எந்த நிலைக்கும் இறங்கிவர மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு அந்நிய முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கருத்து கேட்டுவருகிறது. சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பெரும் முதலீட்டை, மதிப்பு தெரியாமல் சூறையாடுவதாகத்தான் இந்த நடவடிக்கை அமையும். ஏனெனில், இந்திய ரயில்வே என்பது மக்களின் சொத்து. அது சேதாரமாக அனுமதிக்கலாமா?
ஆர். இளங்கோவன், செயல் தலைவர், டி.ஆர்.இ.யு.
தொடர்புக்கு: elangovandreu@gmail.com
தாரைவார்க்கப்படுகிறதா தேசத்தின் சொத்து?
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:06:00
Rating:
No comments: