அதானி குழுமத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.6200 கோடி கடன் வழங்குவது ஏன்?

புதுடெல்லி, 
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ள நிலையில், குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத்திற்கு நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக ரூ.6200 கோடி கடனுதவி வழங்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்திருப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கலிலீ பேசினில் நிலக்கரி சுரங்கப் பணிகளை 1,650 கோடி டாலர் முதலீட்டில் மேற்கொள்ளவுள்ளது. அதானி மைனிங் என்ற நிறுவனம் இப்பணிகளை மேற்கொள்கிறது. கார்மிசாயில் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துவிட்டது. 

இந்நிலையில், தேசிய சுற்றுச்சூழல் சட்ட விதிகளை மீறுவதாக அதானி நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அதானி நிறுவனத்திற்கு 5 வெளிநாட்டு வங்கிகள் கடனுதவி அளிக்க மறுத்துவிட்டன. 

பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு ரூ.6200 கோடி கடனுதவி வழங்க முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மாகென் செய்தியாளர்களிடம் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:- 

5 வெளிநாட்டு வங்கிகள் கடன் வழங்க மறுத்துள்ள நிலையிலும் எந்த தகுதியின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி அதானி நிறுவனத்திற்கு கடன் வழங்குகிறது? ரூ.6200 கோடி கடனுதவி மூலம் பிரதமர் மோடி அதானி நிறுவனத்தை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார். ஏனெனில் ஆஸ்திரேலிய பயணத்தின் போது அவருடன் எஸ்.பி.ஐ. வங்கி தலைவரும் உடனிருந்தார். அதானி நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காட்டாத ஆர்வத்தை திடீரென இவ்வளவு பெரிய தொகையை கடனாக வழங்குவதில் பாரத ஸ்டேட் வங்கி காட்டுவது ஏன்? சாதாரண பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த பணத்தை சேமித்து வைத்திருக்கும் நிலையில் அந்த பணத்தை அதானி நிறுவனத்திற்கு கடனாக வழங்க முடிவு செய்தது ஏன்? 

ஒருவேளை அந்நிறுவனத்தின் மேலிருக்கும் அக்கறையினால் கடன் வழங்குகிறது என்றால் அதை ஏன் முன்னரே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்டேட் வங்கி குறிப்பிடவில்லை? எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது? அதன் பொறுப்புக்கள் என்ன? 


நிலக்கரித்துறை மந்திரி பியூஷ் கோயல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி ஆஸ்திரேலிய நிலக்கரியால் இந்தியா முழுவதும் ஒளி நிரப்பப்படும் என்று சூளுரைக்கிறார். இரண்டு பேரில் யார் சொல்வது உண்மை என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அவர் கேள்வியெழுப்பினார்.
அதானி குழுமத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.6200 கோடி கடன் வழங்குவது ஏன்? அதானி குழுமத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.6200 கோடி கடன் வழங்குவது ஏன்? Reviewed by நமதூர் செய்திகள் on 21:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.