மகிழ்ச்சி தரும் பேரிச்சை

'பழங்காலம்' என்று தமிழில் தொன்ம காலத்தை குறிக்கும் சொல் எத்தனை அர்த்தப்பூர்வமானது. பழம் போல் கனிந்த கடந்த காலம், பழம் போலவே நினைத்தால் இனிக்கக் கூடியது. பழம் போலவே ஆரோக்கியம் (மனதில்) தரவல்லது இல்லையா? அதிலும் பழங்காலத்து பழம் என்பது எவ்வளவு சிறப்பு கொண்டதாக இருக்கும்? வரலாற்றால் துல்லியமாக கணிக்க முடியாத மற்றொரு கனி பேரிச்சம் பழம். 

பேரிச்சம் பழத்தின் தாயகம் எதுவென்பதிலும் பல முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன. பெரும்பான்மையினரின் கருத்துப்படி, இன்றைய பெர்சிய பகுதியில் ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களில் தோன்றியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. நமது மொகஞ்சதாரோவில்தான் முதலில் தோன்றியிருக்கும் என்கிற அனுமானமும் உண்டு. நைல் நதி பாயும் எகிப்துதான் என்பவர் களும் இருக்கிறார்கள். ஜோர்டானின் ஆற்றுப் படுகைகளில்தான் பேரிச்சையின் காலம் துவங்கியது என்றும் கருத்து நிலவுகிறது.

எப்படி இருந்தாலும் வெப்ப மண்டல பாலை பிரதேசங்கள்தான் பேரிச்சைக்கு உகந்தது என்பதால் வளைகுடா பகுதிகள்தான் பேரிச்சையின் தாயகமாக இருக்கலாம் என்பது ஏற்கக்கூடியதாக இருக்கிறது. 1963-65 வருடங்களில் இஸ்ரேலின் மசாடா என்னும் இடத்தில், தொல்பொருள் ஆய்வாளர்களின் தேடலில், ஒரு ஆதிகால குடுவை கிடைத்தது.

அதில் பதப்படுத்தப்பட்ட பேரிச்சை கனிகள் இருந்தன. அந்த பேரிச்சைகள் குறித்து, ஜூரிச் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில், அந்த பழங்கள் கி.மு. 155-க்கும் கி.மு. 69-க்கும் இடைப்பட்ட காலத்தியது என்று கண்டுபிடித்தார்கள். இந்த ஆய்வினை 2005-ல் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதன் விதைகளில் இருந்து பெறப்பட்ட ஒரு பேரிச்சம் கன்று நடப்பட்டு வளர்க்கப்பட்டது. அது 2008-ல் 4 அடி வரை உயர்ந்து கிளைத்தது. ஆக 2000 வருடங்கள் தாண்டியும் உயிர்ப்புடன் இருக்கும் சக்தி பேரிச்சைக்கு உண்டு என்கிற விஷயம் இயற்கையின் பேரதிசயம்!

பேரிச்சையின் வகைகள்

ஏர்காசியே தாவர இனத்தைச் சார்ந்த பேரிச்சையில் 2500-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அஃபாண்டி, அஜ்வா, குதாக், லூனா, மாப்ரும், ரபியா, சவாடா, சஃப்ரி  என்பவை குறிப்பிடத்தக்க வகைகள். பொன்னிற பேரிச்சை மட்டுமல்லாது கறுப்பு பேரிச்சைகள் சுவை மிகுந்தவை. நம் ஊர் ஆற்றுப் படுகைகளில் ஈச்சம் பழம் வளர்ந்திருப்பதை ஒரு சிலர் ருசித்திருக்கக் கூடும். அது போன்ற சிறிய ஈச்சம் பழத்தை கர்ஜுரம் என்றும், பேரிச்சையை பிண்ட கர்ஜுரம் என்றும் சொல்வார்கள். சிறிய ஈச்சம் பழம் சதைப் பற்று குறைவாக இருக்கும். 

பேரிச்சையின் மருத்துவ குணங்கள்
பேரீந் தெனுங்கனிக்குப் பித்த மத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
ரத்த பித்த நீரழிவி லைப்பாரும் அரோசி
உரத்த மலக் கட்டு மறும் ஓது.  


என்கிறது அகத்தியர் குணபாடம். பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. 

தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். 

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும். உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும். தினசரி 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு.
 
குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து தந்தால் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கினால் ஏற்படும் பலகீனத்தைப் போக்க பேரிச்சம் பழத்தை  அதிகம் உட்கொள்வது நல்லது. அஜ்வா என்னும் வகை பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் மரணம் நேராது என்ற நம்பிக்கையும் இருந்தது.
 
புல் பூண்டு கூட முளைக்காத பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசங்களில் வாழும் மனிதர்களுக்கும், வலிமையையும் ஆரோக்கியத்தையும் தரவல்ல பேரிச்சம் பழம் உண்மையில் இயற்கையின் பெருங்கொடைதானே. -இன்னும் பேசுவோம்

இலக்கியங்களில்...

ற்றிணை இரண்டாம் பாடலில் பெரும்பதுமனார் என்னும் புலவர் உடன்போக்கு எனப்படும் காதலனோடு தன்னை ஒப்படைத்து காதலி செல்லும் இடம் பற்றி குறிப்பிடுகையில், அவர்கள் ஈச்ச மரக் காடுகள் வழியே சென்றனராம். 

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
என்கிற பாடலில் பெரும்பதுமனார் அழகாக வர்ணிக்கின்றார்.


திருமுறையில் பேரிச்சை

திருமுறையில் ஒரு பாடலில்,
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே
என்று கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி தரும் பேரிச்சை மகிழ்ச்சி தரும் பேரிச்சை Reviewed by நமதூர் செய்திகள் on 20:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.