விவசாயிகளின் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ.ஆதரவு!

சென்னை: கர்நாடகாவில் காவிரி ஆறின் குறுக்கே இரு அணைகள் கட்டப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு, எஸ்டிபிஐ கட்சி ஆதரவு அளித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக-கர்நாடக எல்லையான மேகேதாடு என்ற இடத்தில் குடிநீர் திட்டத்திற்காக இரண்டு அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் இந்த திட்டத்தை கர்நாடகம் நிறைவேற்றினால் தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் வரத்து குறைந்து காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் அழிந்துவிடும் சூழல் உருவாகும். நீரின்றி காவிரி டெல்டா பகுதியே வறண்டு போகும் நிலை உருவாகிவிடும்.
ஏற்கனவே காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும்பாலும் கர்நாடகா அரசால் மீறப்படும் நிலையில், 45 டி.எம்.சி தண்ணீர் தேக்கும் இந்த குறுக்கணைகள் மேலும் காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு தடையாக அமையும்.
இந்நிலையில், மேகேதாடு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், இந்த முயற்சியை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் காவிரி டெல்டா விவசாயிகள் வரும் 22 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும், சாலை, இரயில் மறியல் போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பாக போராட்டக் குழுவும், விவசாயிகள் சங்கங்களும் விடுத்த கோரிக்கையை ஏற்று எஸ்.டி.பி.ஐ கட்சி இந்த போராட்டத்துக்கு தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முழு அடைப்பு போராட்டம், சாலை, இரயில் மறியல் போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்தின் நோக்கத்தை வெற்றியடையச் செய்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த பிரச்சினையில் ஒன்று பட்டு குரல் கொடுப்பதன் மூலம் தான் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை முறியடிக்க முடியும்.
தமிழக அரசும் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடக அரசின் இந்த திட்டத்தை தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் இந்த திட்டத்தை தடுத்து காவிரி டெல்டாவின் வளங்களை காக்க முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ.ஆதரவு! விவசாயிகளின் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ.ஆதரவு! Reviewed by நமதூர் செய்திகள் on 20:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.