கல்வி என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம்.

education-

இஸ்லாமிய சமூகம் முன்னேற வேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம், இலக்கியம், ஊடகம், அரசியல் ஆகிய துறைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த 67ஆண்டுகளாகவே முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் என்ன? என்ற கேள்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முதல் காரணமாக இருப்பது நம்மிடம் கல்வியில்லை என்பதுதான்.
கல்வி அறிவுதான் சமூக விடுதலைக்கு உதவும். அந்த கல்விக்காக தொலை நோக்கு பார்வையும், சரியானதிட்டமிடலும் இருக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கில மொழியை ஒதுக்கிய நம் முன்னோர்களால் 50 வருடம் கல்வியில் பின்தங்கியுள்ளோம் என்பது கசப்பான உண்மை. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகும் கூட படிக்க நல்ல வாய்ப்புகள் இருந்தும் வெளிநாட்டு மோகத்தால் கல்வியில் நாட்டம் இல்லாமலே இருந்திருக்கின்றோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்று அப்படி இல்லை அதிகமான மாணவ மாணவிகள் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இன்றைய இளைஞர்களிடத்தில் அரசு வேலைக்கு முயற்சிக்க வேண்டும், சமூக முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்ற உயர்ந்த நற்சிந்தனை வளர்ந்து வருகிறது. பொறுப்பில்லாமல் ஏனோதானோ என்று படிக்கும் ஒரு சில மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றாக படித்து தேர்ச்சி பெற்று உடனே வேலை கிடைப்பதில்லையென்று வெளிநாட்டில் டிரைவர் வேலைக்குகூட பலர் செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
ஒரே படிப்பை பலரும் படிப்பதும் வேலையின்மைக்கு காரணமாகிறது. உதரணத்திற்கு இன்ஜினியர் படிப்பையேபலரும் படிப்பதால் எல்லோருக்கும் வேலைக்கிடைப்பதில் பெருத்த சிக்கல் ஏற்படுகிறது. இது மிகவும்வருத்தத்திற்குரிய விஷயம். குறிப்பிட்ட ஒரு வேலையை அரசு ஒரு வருடத்திற்கு 5000 பேருக்குத்தான் கொடுக்கமுடியும் என்று தெரிந்திருந்தும் அந்த குறிப்பிட்ட துறையை பெரும்பாலான மாணவர்கள் எடுத்து படிக்கிறார்கள்.இந்த நிலை மாறவேண்டும் ஒவ்வொரு துறையிலும் படிக்கும் மாணவர்கள் அந்தந்த துறைகளில் மேற்படிப்பு வரைபடிக்க வேண்டும் சச்சார் அறிக்கையின் படி 1.4% முஸ்லிம் மாணவர்கள்தான் மேற்படிப்பு வரை படிக்கிறார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.
படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் UG வுடன் தனது படிப்பை நிறுத்தி விடாமல், PG, PHD போன்று ஆய்வுபடிப்பு வரை படிக்க வேண்டும். இந்த துறைதான் என்று ஒதுங்காமல் சட்டம், பொருளாதாரம், அறிவியல், வரலாறு, அரசியல் என எந்த துறையாக இருந்தாலும் உயர்படிப்பு வரை படிக்க வேண்டும்.
பெண் கல்வி :
முஸ்லிம் சமூகத்தில் பெண்கல்வி குறைவாகவே இருக்கிறது. ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுடன் முடிந்துவிடும். ஆனால் ஒரு பெண்ணின் கல்வி அவளின் குடும்பத்திற்கே பயனுள்ளதாக அமைகிறது. பிள்ளைகளிடம் தந்தையின் நெருக்கத்தை விட தாயின் நெருக்கமே அதிகமாக இருக்கும். அதிக நேரமும்தாயிடம்தான் அந்த குழந்தை  வளரும். உலக கல்வியும், மார்க்க கல்வியும் படித்த ஒரு தாயால் அவர்களின் குழந்தையை நல்ல படிக்கும் மாணவர்களாக வளர்க்க உதவும். பெண்கல்வியில் முன்னேற்றம் காண தடையாகஇருப்பது இருபாலர் கல்வி கூடங்கள்தான். தனியாக பெண்கள் கல்லூரியில் உலக கல்வியுடன், மார்க்க கல்வியோடுபடிக்க வைக்க முயற்சிக்க வேண்டும்.
கல்வி துறையில் முஸ்லிம்கள் முன்னேற்றம் கண்டால் அவர்களின் சமூக முன்னேற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது. அதேபோல் தான் கற்ற கல்வியை சமூகத்தின் இளைஞர்களுக்கு பயன்படும் விதத்தில் கல்வி குறித்து விழிப்புணர்வையும், எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனையையும், ஆர்வத்தையும் உருவாக்க வேண்டும்.முஸ்லிம் சமூகம் பெருவாரியாக வாழக்கூடிய ஊர்களில் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுநிரந்தரமான கல்வி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கல்வியில் நமது இலக்குகளை எட்டிவிட்டால் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அனைத்து வழிகளிலும் சிந்திக்கதுவங்கி விடுவார்கள்.
நமக்கெதிராக போடப்படும் தடைகளை உடைக்க ஒரு ஆயுதம் தேவை. அதுதான் கல்வி என்னும் ஆயுதம்! கல்வி என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம், தடைகளை உடைத்து கனவுகளை நினைவாக்குவோம்.
- வி.களத்தூர் பாரூக்
கல்வி என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம். கல்வி என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம். Reviewed by நமதூர் செய்திகள் on 20:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.