ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்லவேண்டும்: எஸ்.டி.பி.ஐ!

குவைத்: "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்ல வெளிநாட்டில் வாழும் மக்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாக்கவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாக்கவி வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வேளையில், குவைத் தமிழ் ஊடகப் பேரவைக்கு வழங்கிய நேர்காணலின்போது மேற்கண்டவாறு கூறினார்.


அவர் வழங்கிய பேட்டியின் முழு விவரம் வருமாறு:

கேள்வி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் களம் எவ்வாறு இருந்தது?

பதில்: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எஸ் டி பி ஐ தொடக்கத்தில் எடுத்த முயற்சி பாரதீய ஜனதாவுக்கு எதிரான வலுவானதொரு மதசார்பற்ற அணியினை உருவாக்க வேண்டும்; அதனை வலிமைபடுத்தும் வகையில் அதன் ஒரு அங்கமாக மாறவேண்டுமென்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையாத நிலையில் எஸ்.டி.பி.ஐ தனித்து களம் கண்டது.

அகில இந்திய அளவில், பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த வாய்ப்புமே இல்லாத இடங்களில் தனித்து போட்டியிடுவது என்றும் மற்ற தொகுதிகளில் போட்டியிடாமல் இருப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வடமாநிலங்களில் கணிசமான ஓட்டு எஸ்.டி.பி.ஐக்குக் கிடைக்கும் வாய்ப்பிருந்த சில தொகுதிகளில், பாரதீய ஜனதா கட்சிக்குச் சாதகமாக அமைந்துவிடலாகாது என்ற எண்ணத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்தோம். தமிழகத்தில் அது போன்ற சுழல் இல்லாத காரணத்தால் மூன்று தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளைப் பெற்றோம். புதிதாக வளர்ந்து வரும் கட்சி என்ற நிலையிலும் 5 ஆண்டுகளுக்குள்ளாகவே நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த நிலையில் பெற்றுள்ள ஓட்டுகளின் வீதம் மக்களிடையே எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மிகுந்த வரவேற்பும் ஆதரவும் இருப்பதையே பறைசாற்றுகிறது.

கேள்வி தமிழகத்தைக் கடந்து ஒரு தேசிய கட்சியாக எஸ்.டி.பி.ஐ இருக்கும் நிலையில், அடுத்து வர இருக்கும் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலை எப்படி அணுக இருக்கிறது?

பதில் : வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான செயல்திட்டங்களைத் துவக்கியிருக்கிறோம். அது தொடர்பாக பல்வேறு குழுக்களை அமைத்து வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது துவக்கநிலை. அடிப்படையாக எப்படி நாம் பார்க்கிறோம் எனில், தமிழகத்தில் வலுவாக காலூன்றிவிடவேண்டுமென்ற முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ள இக்கால சூழலில், அதற்கு எத்தகையதொரு வாய்ப்பும் தந்துவிடாத அளவில் தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பது எங்களின் விருப்பம். அதனை நோக்கிய எங்களின் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். அதற்கான ஒருங்கிணைப்புகளில் ஈடுபட்டுள்ளோம். சமீபத்தில்கூட விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதனுடைய முதல்கட்டமாக வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னையில் பல்வேறு மதச்சார்பற்ற கட்சிகளும் கலந்துகொள்கிற கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதனை அடிப்படையாக கொண்டு, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைவதற்குத் தடையாக இல்லாத வகையில் சட்டமன்ற தேர்தலுக்கான எங்களின் திட்டங்களை வகுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி காங்கிரஸுக்கு மாற்றாக வேறொரு சக்தி இல்லாத சூழலில் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் பாஜகவைத் தோற்கடிப்பதையே முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது குறுகிய சிந்தனை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதே?

பதில் : அப்படியல்ல. பாரதீய ஜனதாவை எதிர்ப்பது என்பதையும் தாண்டி மக்களின், நாட்டின் முன்னேற்றத்துக்கான புதியதொரு மாற்று சக்தியாக உருவாவதற்கான செயல்திட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி கொண்டுள்ளது. அதற்காக அடிமட்ட நிலையிலான பல்வேறு மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுத்து போராடிவருகிறோம். அதன் ஒருபாகமாகத் தான், இம்மாதம் பிப்ரவரி 3 லிருந்து 13 ஆம் தேதிவரை ஊழலுக்கு எதிரான மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம். தொடர்ந்து வரும் 13 ஆம் தேதி அன்று சட்டப்பேரவையை முற்றுகையிடுகிற போராட்டம் ஒன்றையும் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவின் பெரிய வெற்றிக்குக் காங்கிரஸுக்கு எதிரான மக்களின் வெறுப்பு மட்டும் காரணமல்ல; மதச்சார்பற்ற சக்திகள் தனித்தனியாக பிரிந்து போனதும் மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கிறோம். எனவே, எஸ்.டி.பி.ஐ கட்சியினை வலிமையான கட்சியாக உருவாக்குவதையும் தாண்டி இப்போது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள பாரதீய ஜனதாவைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பது போன்ற வியூகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

கேள்வி : இரு பெரிய திராவிட கட்சிகளும் மக்கள் மனதிலிருந்து அகன்றுவரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் எஸ்.டி.பி.ஐ வலிமையான கட்சியாக உருவெடுக்க முடியும் என நம்புகிறீர்களா?

பதில் : இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மை. அதனைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. உதாரணத்திற்குத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே போன்று, பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகி வேறு கட்சிகளுடன் இணைந்து தனியொரு சக்தியாக உருவாக முடியுமா என்பது குறித்து தேமுதிகவும் ஆலோசித்து வருகிறது. புதிதாக ஆரம்பித்து வளர்ந்து வருகிற கட்சி என்ற வகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலான மாற்று சக்தியாக எஸ்.டி.பி.ஐ இப்போதே மாறிவிடும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் எங்களுக்கு இல்லை. அதே சமயம், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வலிமையானதொரு மாற்று அணியினை உருவாக்குவதற்கும் அந்த அணியுடன் ஒத்துழைப்பதற்கும் எஸ்.டி.பி.ஐ தயாராக உள்ளது.

கேள்வி : நாளுக்கு நாள் புதிது புதிதாக கட்சிகள் உருவாகி வரும் நிலையில், சிறுபான்மையினர்களின் ஓட்டுகள் சிதறடிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகிறது தானே? இது உங்களின் ஓட்டு வங்கியைப் பாதிக்காதா?

பதில் : ஒரு குறிப்பிட்ட சமூகம், ஜாதி சார்ந்து இயங்கும் கட்சிகளுக்கிடையே இத்தகைய பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் எஸ்.டி.பி.ஐ அவ்வாறான கட்சிகளில் ஒன்றல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான தனிக்கட்சி என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சிறுபான்மையினர்களின் நலன் மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான பொதுவானதொரு கட்சியாக எஸ்.டி.பி.ஐ கட்சியை முன்னிறுத்தவே நாங்கள் திட்டமிடுகிறோம். அவ்வாறுதான் கட்சியினை உருவாக்கியுமிருக்கிறோம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை எஸ்.டி.பி.ஐ கட்சியினைப் பொதுவான கட்சியாக முன்னெடுப்பதற்கான சரியான வாய்ப்பு எங்களுக்கு இன்னும் அமையவில்லை. முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கான நலன்களுக்காக முழுமையாக உழைக்கும் கட்சி என்பதோடு, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிற ஒரு பொதுவான கட்சியாகவே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள் பல்வேறு கட்சிளாக பிரிந்து கிடப்பது அவர்களைப் பலவீனப்படுத்தவே செய்யும். பொதுவானதொரு செயல்திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஒருங்கிணைந்து அரசியலில் இறங்குவதே பலனளிக்கும். அதற்கான முயற்சிகளைத் தமிழக அளவில் அல்லாது இந்திய அளவில் பலவகைகளில் நாங்கள் முன்னெடுக்கிறோம்.

தமிழக சட்டப்பேரவையில் 24 உறுப்பினர்களைக் கொண்டு மிகப் பெரிய சக்தியாக நின்ற காயிதே மில்லத் காலத்திற்குப் பின்னர் இதுநாள் வரை பலமானதொரு சக்தியாக முஸ்லிம்களால் நிற்கமுடியவில்லை. இந்நிலையினை மாற்றி, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமான வலுவானதொரு சக்தியாக எஸ்.டி.பி.ஐ மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

கேள்வி : இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருமே இந்தியாவின் குடிமகன் என்றிருக்க, முஸ்லிம்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லை என்பது போன்றும் நாட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடியாகவே இவர்கள் தாமே முன்வந்து தமக்கும் அச்சம்பவத்துக்கும் சம்பந்தமில்லை என்றுகூறி தம் தேசப்பற்றை நிரூப்பிக்க வேண்டுமென்பது போன்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுவரும் நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : முஸ்லிம்களைக் குற்றப்பரம்பரையினர், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்பதுபோன்று சித்தரிக்கும் நிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிரிகளால், இஸ்லாமியர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென விரும்புபவர்களால், வரலாற்றில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களுக்குப் பழிவாங்க வேண்டுமென நினைப்பவர்களால் இத்தகையதொரு திட்டமிட்டப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஜார்ஜ் புஷின் வாயிலிருந்தே "மற்றொரு சிலுவை யுத்தம்" என்ற வாசகம் வெளியானதை நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். இதுதான் இந்தியாவில் மற்றொரு பரிமாணமாக மாறியிருக்கிறது. முஸ்லிம்கள் தேசப்பற்றில்லாதவர்களாக இருப்பார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியமாக நாங்கள் நினைப்பது, முஸ்லிம்கள் தங்களின் சமூகத்துக்கு மட்டுமான பிரச்சனைகளையும் தாண்டி ஒட்டுமொத்த மனித சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காக பேசும் மக்களாக அவர்களின் நலன்களுக்காக போராடும் மக்களாக மாறவேண்டும். இந்த நாடு எப்போதெல்லாம் பின்னடைவைச் சந்தித்துள்ளதோ அப்போதெல்லாம் தம் சக்தியையும் கடந்து மிகப் பெரிய பங்களிப்பை இந்நாட்டிற்குச் செய்துள்ளது முஸ்லிம் சமூகம். இந்த நாடு எப்போதெல்லாம் அடிமைத்தனத்துக்கு உள்ளானதோ அப்போதெல்லாம் அடிமைத்தனத்தை உடைத்தெறிவதற்காக முன்னின்று போராட்ட களம் கண்டவர்கள் முஸ்லிம்கள். எனவே இந்த நாட்டின் முன்னேற்றத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை எவராலும் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது. இக்காலகட்டத்தில் இந்தியா மிகப் பெரும் பேரபாயத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த அபாயத்திலிருந்து இந்தியாவை மீட்க முஸ்லிம்கள் முழுவதுமாக தங்களை அர்ப்பணிப்பதற்கான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

இந்த எண்ணத்தை மக்களிடையே விதைக்க எஸ்.டி.பி.ஐ லட்சக்கணக்கான தொண்டர்களைப் பயிற்றுவித்துள்ளது. நாட்டின் பிரச்சனைகளுக்காக பொது சமூகத்தின் பிரச்சனைகளுக்காக நம்மைப் போன்றே பாதிக்கப்படும் அனைத்து மக்களின் பிரச்சனைகளுக்காக போராடும் எண்ணத்தை எங்களின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களிடையே விதைத்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி : இந்தியாவில் நடக்கும் ஃபாஸிச அத்துமீறல்களுக்கு எதிராக சர்வதேச சமூகத்திடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பேதும் எழாததற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

பதில் : இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், அரச பயங்கரவாதங்கள் போன்றவை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் போர்க்குற்ற விசாரணை என்ற அளவுக்குப் பேசப்பட்டது என்றால் அவையெல்லாம் யதார்த்தமாக, சர்வதேச சமூகம் விழிப்புணர்வுடன் இருந்து அவர்களாக தாமே முன்னெடுத்ததல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச அளவில் அதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றை முன்னெடுக்க தயாரானார்கள். என்ன நடந்தது என்பதைச் சர்வதேச சமூகத்தின் முன்னர் தெளிவான ஆதாரங்களுடன் ஈழத்தமிழர்கள் எடுத்துச் சென்றார்கள்.

அதுபோன்றே கிறிஸ்துவர்களுக்கு எதிராக சிறு பிரச்சனை ஒன்று நடக்கின்றபோதே, சர்வதேச சமூகத்துக்கு அது தொடர்பான முழுமையான தகவல்களைத் தருவதற்குத் தயாராகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் தகவல் சேகரிக்கும், கொண்டு சேர்க்கும் விசயத்தில் தெளிவற்று இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் நலன்நாடும் அமைப்புகள் உடனடியாக செய்யவேண்டிய வேலையாக நாம் நினைப்பது என்னவென்றால், சிறுபான்மையினர்களுக்கு எதிராக நடக்கும் ஃபாஸிச கொடூரங்கள், ஒடுக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்தின் முன்னர் கொண்டு சேர்ப்பதற்கு ஆயத்தமாக வேண்டும். முஸ்லிம் சமூகம் கடந்த காலத்தில் இதனைச் செய்யவிட்டுப்போனதாக கருதுகிறேன். இதேபோன்றே இந்தியாவைவிட்டு வெளியே வாழும் மக்களும் இப்பணியினைச் செய்வதற்கு முன்வரவேண்டும். உதாரணமாக, இங்கே குவைத்தில் வாழும் மக்கள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளை உடனுக்குடன் இங்கேயுள்ள மனித உரிமை அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் எடுத்துச் செல்வதன்மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை வெகு எளிதில் ஈர்க்க முடியுமென நம்புகிறேன்.

கேள்வி : வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முடிந்தால் அது இந்திய ஆட்சியாளர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறீர்களா?

பதில் : நிச்சயமாக!

வெளிநாட்டிலுள்ள இந்திய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயலாற்ற முடிந்தால் அது நிச்சயமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதோடு சிறந்த மாற்றங்களை உருவாக்கவும் முடியும். இல்லையேல் தேர்தலில் தமக்கு மிகப் பெரிய பாதிப்பை அவை உருவாக்கும் என்ற அச்சத்தை அவர்களிடையே ஏற்படுத்தும்.

கேள்வி : அப்படியெனில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே உங்கள் கட்சி அமைப்புரீதியாக ஒன்றிணைப்பு ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதா?

பதில் : ஆம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை என்ற இப்போதைய பேச்சு ஆரம்பிக்கும் முன்னரே, ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் நம் கருத்தியலை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு வெளிநாட்டு வாழ் மக்களிடையேயும் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவும் செயல்படவும் முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டு இந்தியன் சோஸியல் ஃபாரம் என்ற பெயரில் அமைப்பும் ஆரம்பித்துள்ளோம். அவர்கள் நம் ஆதரவு அமைப்பாக நீண்டகாலமாக வெளிநாட்டு மக்களிடையே பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாதி, மதம், மொழி கடந்து மனிதநேயத்துடன் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் அமைப்பாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் பெருவாரியாக அங்கத்தவர்களாகவும் உள்ளனர்.

கேள்வி : உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வங்கிகளெல்லாம் திவாலாகி தத்தளித்த நேரத்திலும் இஸ்லாமிய வங்கிகள் எப்பிரச்சனையும் இன்றி தொடர்ந்து செயல்பட்டன. இந்த முன்மாதிரியில், தோஹா வங்கி மேலாளர் சீதா ராமையர்கூட இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் உருவாக்க வேண்டுமென கருத்துரைத்திருந்தார். இலாபகரமாகவே இயங்குமென்ற உறுதி உண்டெனில், நஷ்டத்தை ஏற்படுத்தும் வட்டி முறையினைவிட்டு இஸ்லாமிய மாதிரி வங்கிகள் ஏன் இந்தியாவில் உருவாக்கக்கூடாது? அதற்கான வாய்ப்பிருப்பதாக கருதுகிறீர்களா?

பதில் : நிச்சயமாக. மக்களுக்கு நன்மை எதில் இருக்கிறதோ அதனைச் செய்வதுதான் நல்ல அரசுகளின் கடமை. கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது வட்டி முறைக்கு எதிரான இஸ்லாமிய வங்கிகள் உருவாக்க அனுமதிதரப்பட்டு அது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் விதிமுறைகள்கூட உருவாக்கப்பட்டன. ஆனால் ஒருசிலரின் தனிப்பட்ட தலையீட்டின்பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது அப்பணிகள் தடைபட்டுள்ளன. அத்தடைகளை முறியடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக அத்தடைகள் அகற்றப்படும் என்றே நாங்களும் நம்புகிறோம். ஏனெனில், இது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. அரசின் பொருளாதார திட்டம் தொடர்பான விசயங்களில் நீதிமன்றங்களோ தனிநபர்களோ தலையிட முடியாது. குறிப்பாக, பொருளாதார மந்த நிலையில் பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்போது இஸ்லாமிய வங்கிகள் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தகவல்கள் தொடர்ந்து வரும்போது எந்த ஒரு மக்கள் அரசாலும் அதனைப் புறந்தள்ளி கண்டும் காணாமல் மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கமுடியாது என்று உறுதியாக நம்புகிறோம்.

கேள்வி : நீதிக்காக செயல்பட வேண்டிய ஊடக உலகம் வியாபாரமயமாகிவரும் நிலையில், தமிழகத்தில் ஒரு நேர்மையானதொரு வெகுஜன ஊடகம் உருவாக்குவது குறித்த உங்கள் கருத்தென்ன?

நிச்சயமாக. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் மதிக்கப்படும் ஊடகங்கள், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தங்களின் கடமையை மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. காரணம், இன்று எல்லாமே கார்ப்பரேட் மயமாக மாறிவிட்ட சூழ்நிலையில் ஒரு மாற்று ஊடகம் நிச்சயமாக மக்களுக்குத்தேவை; இந்நாட்டுக்குத் தேவை. அது எங்கே யார் தொடங்கினாலும் எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி : இதற்காக எஸ்.டி.பி.ஐ கட்சி ரீதியில் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டுள்ளதா? குறிப்பாக கட்சி தொண்டர்களைச் சிறந்த ஊடகவியலாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சிகள் ஏதும் நடத்துகின்றதா?

எஸ்.டி.பி.ஐயின் மாணவர் அமைப்புகளுக்கிடையில் ஆரம்பக் காலத்திலிருந்தே இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தபட்டு வருகின்றன. இத்துறையில் படிக்க விரும்பும் ஆரவமுடையோரைக் கண்டறிந்து அவர்களின் படிப்புக்கான உதவிகளைச் செய்வதோடு சென்னையில் தங்க வைத்து முழு படிப்பும் முடிப்பதற்கான வசதிகளையும் செய்துதருகிறோம். ஊடகத்துறையில் வலிமையடைய வேண்டுமென்ற தூர நோக்கு சிந்தனையோடு செயல்படுவதோடு எதிர்காலத்தில் இத்துறையினை வலிமைபடுத்துவதற்கு ஏதேனும் செய்யவேண்டுமென்ற திட்டமிடலும் எங்களிடம் உள்ளது.

கேள்வி : அது உங்கள் அரசியல் கட்சிக்கான தேவைக்காக செய்யப்படுகிறதா?

பதில் : அப்படியல்ல. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது நோக்கோடு ஊடகத்துறையில் செயலாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடனானவர்கள் அனைவருக்குமே செய்யப்படுகிறது. நல்லதொரு மாற்று ஊடகத்தை உருவாக்கவேண்டும்; ஊடகத்துறையில் நல்ல சிந்தனையாளர்களை உருவாக்கவேண்டும்; நீதி, நியாயத்துக்குக் குரல் கொடுப்பவர்களாக அவர்கள் மாறவேண்டுமென்ற பொது நல நோக்கில் இத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம். மதச்சார்பற்ற, இயக்க/கட்சி சார்பற்ற, நீதிக்காக குரல் கொடுக்கும் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதே இதில் எங்கள் இலட்சியம்.

கேள்வி மக்களிடையே பிரிவினை எண்ணங்கள் வலுவாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலாமல் குழப்பமான நிலையில் மக்கள் இருக்கும் சூழலில், அவர்களிடையே இணக்கத்தையும் உறவுகளையும் மேம்படுத்துவதற்கு எவ்வகையான திட்டங்களை எஸ்.டி.பி.ஐ முன்னெடுத்துள்ளது?

பதில் : மக்களிடையே பிரிவினையை அதிகப்படுத்துவதில் சங்க்பரிவார ஃபாஸிச சக்திகள் முனைப்புடன் செயலாற்றுகிறது என்பது உண்மை. அதற்கு எதிராக தனிப்பட்ட முறையில் செயல்படுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதே சமயம், ஃபாஸிசத்துக்கு எதிராக வெவ்வேறு களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்புகளும் கட்சிகளும் இவ்விசயத்தில் ஒற்றைக் களத்தில் ஒன்றாக சேர்ந்து இயங்குமானால் மக்களிடையே மிக எளிதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எஸ்.டி.பி.ஐ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிரான, மதச்சார்பின்மைக்கு எதிரான, மக்களிடையே இந்து, முஸ்லிம் என பிரிவினை எண்ணங்களை விதைத்து அதன் மூலம் மதக்கலவரங்களை உருவாக்கி ஓட்டு வங்கியைப் பெருக்க முனையும் ஃபாஸிசத்தை வேரறுக்க, அதற்கு எதிரான மதச்சார்பற்ற, ஜனநாயகச் சக்திகளை ஒன்று திரட்டுவதன் மூலம் நிச்சயம் அவற்றை எதிர்கொள்ள முடியுமென நம்புகிறோம்.

கேள்வி : சிறந்த கொள்கையுடன் செயல்பட்டாலும் இன்னமும் அடிமட்ட மக்களிடம் எஸ்.டி.பி.ஐ சென்று சேராததன் காரணம் என்ன?

பதில் : எல்லா மக்களும் அறிந்துகொண்ட கட்சியாக மாறுவது பெரிய விசயமில்லை. கவர்ச்சிகரமான தலைவர்களை முன்னிறுத்துவதன் மூலமோ அல்லது ஒரு கட்சியில் பெரிய தலைவராக இருப்பவர் தனியாக பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிப்பதன் மூலமோ எளிதில் அடிமட்ட மக்களிடம் அறியப்படும் கட்சியாக மாறிவிட வாய்ப்புண்டு. இதற்கு ஊடகத்தின் துணையும் பணபலமும் ஊக்கம் கூட்டும். ஆனால், இது நிரந்தரமானது அல்ல. ஜனரஞ்சகமான கட்சியாக எஸ்.டி.பி.ஐ உருவாக்கப்படவில்லை. இது, தெளிவான கொள்கைகளுடன் மக்களின், நாட்டின் நன்மைக்கான சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ள கட்சி. கட்சியில் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு முன்னர், சிறந்த செயல்வீரர்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதுதான் உறுதியான கட்டமைப்பிற்கான அடிப்படையாக அமையும். கட்டுகோப்புடனான செயல்வீரர்களைக் கொண்ட கட்சியாக வளர்த்தெடுக்க முனையும்போது அது வேக வளர்ச்சியாக அமைவது கடினம்.

சிறந்த கொள்கைகளுக்கும் நாட்டுக்கு நலம்பயக்கும் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அத்தகைய கட்சிகளை மக்களிடையே கொண்டுசேர்க்கும் நீதிபூர்வமான ஊடகங்கள் இப்போது இல்லை; எங்களிடமும் வலிமையான ஊடகபலம் தற்போது இல்லை. அத்துடன் பணமும் இல்லை என்றாகும்போது அடிமட்ட மக்களைச் சென்றடைவதில் காலதாமதம் ஆவது இயற்கை. ஆனால் இது நிலையானது அல்ல. நிதானமாக, ஆனால் உறுதியுடன் கட்சியினைக் கட்டமைத்து வருகிறோம். கட்சி ஆரம்பித்த 5 ஆண்டு காலத்துக்குள்ளேயே குறிப்பிடத்தக்க நிரந்தரமான ஓட்டு வங்கியையும் உறுதியான செயல்வீரர்களையும் உருவாக்கியுள்ளோம். இதனுடன் ஊடக பலமும் சேரும்போது நிச்சயம் வேகமாக அடிமட்டமக்களைச் சென்றடைவோம் என்ற நம்பிக்கையுள்ளது. அப்படி சென்றடையும்போது, தேசிய அளவில் மக்கள் நலனுக்காக செயல்படும் வலிமையான, அசைக்கமுடியாத தேசிய கட்சியாக எஸ்.டி.பி.ஐ நிச்சயம் மாறும்!

மேற்கண்டவாறு அவர் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்நேர்காணலின்போது குவைத் தமிழ் ஊடகப்பேரவையின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்லவேண்டும்: எஸ்.டி.பி.ஐ! ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்லவேண்டும்: எஸ்.டி.பி.ஐ! Reviewed by நமதூர் செய்திகள் on 21:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.