அங்கீகாரமில்லாத 13 லட்சம் வீட்டுமனைகள்!
தமிழகத்தில் மொத்தம் 13 லட்சம் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் உள்ள நிலையில், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள தகவல் ‘தி இந்து’ நாளிதழில் இன்று ஜூலை 16ஆம் தேதி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதால், வருங்காலத்தில் விவசாயம் அழிந்து உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் அங்கீகாரமில்லாத வீட்டுமனை விற்பனை மற்றும் பத்திரப்பதிவுக்குத் தடைவிதித்தது. இந்த வழக்கில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு கடந்த மே 4ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டுமனைகளின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்த அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை மட்டுமே வரன்முறைப்படுத்த முடியும். அங்கீகாரமற்ற வீட்டுமனை உரிமையாளர்கள் தங்களுடைய வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக விண்ணப்பிக்க இணையதள வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இனையதளத்தில் விண்ணப்பித்து அரசாணையின்படி தங்கள் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தினால் மட்டுமே உரிமையாளர்கள் அங்கு வீடு கட்டி குடியேற முடியும். மனைகளை வரன்முறை செய்ய தமிழக அரசு கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இந்த அரசாணைப்படி மே 4ஆம் தேதி முதல் ஆறு மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மொத்தம் 13 லட்சம் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் உள்ளன. இந்த 13 லட்சம் வீட்டுமனை உரிமையாளர்களும் விண்ணப்பித்தால் அரசுக்கு பத்திரப்பதிவு மூலம் பெரிய அளவில் வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த அரசாணை வெளியாகி மூன்று மாதங்கள் ஆன நிலையில், 6,000 பேர் மட்டுமே அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கட்டுநர்கள் சங்க கௌரவச் செயலாளர் ராம்பிரபு ‘தி இந்து’விடம் கூறுகையில், “அரசுக்கு வருவாய் தரும் இந்தத் திட்டம் பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தவில்லை. இதைப் பற்றி நகரமைப்பு துறையினர்தான் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 2007ஆம் ஆண்டு காலக்கெடுவாக நிர்ணயம் செய்த அரசு அங்கீகாரமற்ற வீடுமனைகளை வரன்முறைப்படுத்த 2016ஆம் ஆண்டை நிர்ணயித்துள்ளது. இதனால், அங்கீகாரமற்ற இடங்களில் வீடுகளைக் கட்டியவர்களால் வரன்முறைப்படுத்த முடியாது. நிலத்தை மட்டுமே வரன்முறைப்படுத்த முடியும். அதனால், தமிழக அரசு இரண்டையும் வரன்முறைப்படுத்த வாய்ப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நகரமைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “மனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக பலமுறை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், மேலும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
அங்கீகாரமற்ற வீட்டுமனைகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் வரன்முறைப்படுத்தாவிட்டால், 1908ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் கீழ் மனைகளைப் பதிவு செய்ய முடியாது. அந்த இடத்தில் கட்டடம் கட்ட அனுமதி கிடையாது. குடிநீர், மின்சாரம் பெற முடியாது இப்படி பல சிக்கல்கள் உள்ளன. அதனால், அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கக் கடைசி நாள் வருகிற நவம்பர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிட வேண்டும்.
அங்கீகாரமில்லாத 13 லட்சம் வீட்டுமனைகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:13:00
Rating:
No comments: