டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் மீண்டும் இன்று ஜூலை 16ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கியுள்ளது.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்குக் கூடுதலாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை சுமார் 41 நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டை ஓடுகளை மாலையாக அணிதல், பிச்சை எடுத்தல், தூக்குக்கயிறு மாட்டுதல், ஒப்பாரி வைத்தல், பாதி மீசை, தலை மழித்தல், நிர்வாணப் போராட்டம், குட்டிக்கரண போராட்டம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் போராடினர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இருப்பினும் அவர்களின் போராட்டத்துக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, சென்னை உட்பட சில பகுதிகளில் அய்யாகண்ணு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று ஜூலை 16ஆம் தேதி மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லி சென்ற தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ மூலம் லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் வீட்டுக்குச் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரதமர் வீடு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முயன்றவர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்துள்ளனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஜந்தர் மந்தரில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதியுள்ளது என்று எச்சரித்தனர். பின் விவசாயிகள் சிலரை கைது செய்து நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். டெல்லியில் அய்யாக்கண்னு தலைமையிலான விவசாயிகள் தங்களுடைய இரண்டாவதுகட்ட தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளதையடுத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:12:00
Rating:
No comments: