நீட் தேர்வு: மனிதச் சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு


Stalin
திமுக நடத்தும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று அக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நீட் தேர்வு எனும் கொடுமையான முறையினால், எளிய மக்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி கானல் நீராகியுள்ளது. சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஆனால், நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்த நிலையில், அதிமுக அரசு அதனைத் தடுப்பதற்கு முழு முனைப்புடன் சட்டம் இயற்றவில்லை.
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக்குத் தடை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து 10}ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு, அரசு செலவில் தரமான கல்வி வழங்குவதற்காக ற"எலைட் பள்ளிகள்' உருவாக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எலைட் பள்ளியில் படித்த மாணவர்களில் 12 பேர் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் சேர்ந்தனர். காரணம், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டும் அதே பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும், ஒருவர்கூட எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வாகவில்லை. காரணம், 2 ஆண்டுகள் அவர்கள் கடுமையாகப் படித்து, பொதுத்தேர்வில் சிறப்பாக மதிப்பெண் எடுத்தபோதும், நீட் தேர்வில் உரிய மதிப்பெண்களை எட்ட முடியவில்லை என்பதால் அவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 27}ஆம் தேதி திமுகவும் தோழமைக் கட்சியினரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.
தொழில்துறையில் பின்னடைவு: இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறோம் என்று அறிவித்துள்ள அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சங்களிலும் தமிழகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது கவலை அளிக்கிறது.
சமீபத்தில் வெளிவந்துள்ள பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் ஆய்வில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலம், உட்கட்டமைப்பு, தொழிலாளர், பொருளாதார சூழல், தொழில் செய்வதற்கான சூழல், நிர்வாகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகிய 6 அம்சங்களில் தமிழகம் 6}ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆறு அம்சங்களில் மிக முக்கியமான தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் நிலவும் மாநிலம் என்ற அம்சத்தில் நாட்டில் உள்ள மாநிலங்களில் 17} ஆவது இடத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்ட கொடுமை நிகழ்ந்து விட்டது.இதிலிருந்து விரைவில் தமிழகத்தை மீட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றலும் திறமையும் திமுகவுக்கு மட்டுமே உண்டு என மக்கள் உணரத் தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு: மனிதச் சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு நீட் தேர்வு: மனிதச் சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 00:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.