சென்னையில் பிச்சையெடுக்கும் வெளி மாநிலத்தவர்கள்!
உறக்கத்திலிருந்து விழித்து புறப்படும் நாகத்தைப் போல சென்னை மாநகரம் காலையில் வேகமாக இயங்கத்தொடங்கியிருந்தது. பாடி பாலத்தின் கீழ் பலரும் தங்கள் வேலைகளுக்குச் செல்ல பேருந்துகளுக்காகவும் ஷேர் ஆட்டோக்களுக்காகவும் காத்துக்கொண்டிருந்தார்கள். பாடி பாலத்தின் கீழ் வசிக்கும் சில வீடில்லாத குடும்பங்கள் அன்றைய காலை உணவை சமைத்துக்கொண்டிருந்தார்கள். சிலர், கறுப்பாக அழுக்கு படிந்த ஆடைகளுடன் பாலத்தின் கீழ் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தார்கள். ஒரு பெண் நடக்க முடியாத ஓர் ஆணை தள்ளுவண்டியில் உட்காரவைத்து தள்ளிக்கொண்டு வந்தார். ஒரு பெரியவர், அவருடன் இரண்டு பெண்கள் மிக அழுக்கான உடையுடன் பேருந்துக்காக வந்து நின்றார்கள். அவர்களின் முகங்களில் அலைந்து திரிந்த சோபை படிந்திருந்தது. பெரும்பாலும் அவர்களுக்கிடையே எந்த பேச்சுகளும் இல்லை. பேசிய சில வார்த்தைகளும் தமிழ் அல்ல, இந்திதான். பார்க்கிற யாரும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் அவர்கள் பிச்சைக்காரர்கள் என்பதை. பேருந்துகளில் ஏறி சென்னையில் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்துவிட்டு இரவு நேரத்தில் மீண்டும் இந்த பாலத்துக்கு வந்துவிடுகிறார்கள்.
இப்படியான மனிதர்களை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், சிக்னல்களில் என பல இடங்களில் நாம் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவோ, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற எந்த யோசனையும் இல்லாமல் கடந்து செல்கிறோம். ஏனேன்றால், எல்லோருக்கும் அவரவருக்கான பிரச்னைகள். வெளி மாநிலத்திலிருந்து இங்கே வந்து பிச்சை எடுக்கும் இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று அவர்களிடம் பேசியபோது துயரமும் இயலாமையும் அவர்களின் பேச்சுகளில் வெளிப்பட்டது.
பாடியில் உள்ள பாலத்தின் கீழ் தங்கியிருப்பவர்களில் பலரும் பிச்சைக்காரர்கள். ஒரு பகுதியில் கூட்டமாக ஆறு குடும்பங்களுக்கு மேல் தங்கியிருந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல. அவர்கள் வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக வந்திருப்பவர்கள். நெரிசலான வாகன சத்தங்களுக்கிடையில் அங்கிருந்த பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருக்கும் இந்த பகுதியில் முந்தின நாள் இரவுதான் மழை பெய்திருந்தது. பெண்கள், குழந்தை குட்டிகளுடன் என்ன செய்தார்களோ... நினைக்கவே பரிதாபமாக இருந்தது. வாகனங்களின் வெளிச்சத்திலும், அங்கிருந்த மின் கம்பத்தின் விளக்கு வெளிச்சத்திலும், ஒரு பெரிய பாத்திரத்தில் மொத்த குடும்பத்துக்கும் அன்று இரவுக்கான உணவை சமைத்துக்கொண்டிருந்தார்கள். நான்கும் பேர் அதற்கான விறகுகளை சேகரித்துக்கொண்டுவந்து போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவர் அந்தப் பாத்திரத்தை திறந்து சோறு வெந்துவிட்டாத என்று குச்சியால் துழாவி பதம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களில் தமிழ் தெரிந்தவர் ரோகன் (35) மட்டும்தான். ரோகனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவரிடம் பேசிய போது, “நாங்கள் உத்தரப்பிரதேச மாநிலம். எங்க ஊர் டெல்லியிலிருந்து 200 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிறது” என்றார். குறிப்பாக அவருடைய சொந்த ஊர் பெயரைக் கேட்டபோது, “அது வேண்டாம், தேவையில்லை” என்று கூறிவிட்டார்.
‘இங்கே சென்னைக்கு வந்து என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, “இங்கே நாங்கள் பாம்பே (பஞ்சு மிட்டாய்) மிட்டாய் விற்கிறோம். எங்களுடைய ஓனர் வீடு இங்கேதான் பக்கத்து ஏரியாவில் இருக்கிறது. பெண்கள், சின்ன பசங்க மட்டும் இங்கேயே இருப்பார்கள். ஆண்கள் மட்டும் பாம்பே மிட்டாய் செய்து விற்க போவோம். சில பேர் ஜூஸ் கடையிலும் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு எங்களுக்கு 250 ரூபாய் அல்லது 300 ரூபாய் கிடைக்கும். அவ்வளவுதான்” என்றார்.
‘இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து பாலத்துக்குக் கீழே தங்கிக்கொண்டு கஷ்டப்படுவதைவிட உங்க ஊரிலேயே இதை சம்பாதிக்க முடியாதா?’ என்று கேட்டோம்.
“அங்கே வேலையில்லாமல் சம்பாதிக்க முடியாமல்தான் இப்படி இங்கே வந்து கஷ்டப்படுறோம். அங்கே வேலைக்கு போனா ஒரு நாளைக்கு 100 ரூபாய் அல்லது 150 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் சில நேரங்களில் கிடைக்காது. அதை வெச்சுகிட்டுக் குடும்பம் நடத்தறது ரொம்ப கஷ்டம். இங்கே நாங்கள் இன்னும் ஒரு மூணு மாதம்தான் இருப்போம். அதற்குப் பிறகு சொந்த ஊருக்கு போயிடுவோம். ஊருக்கு போகும்போது ஓர் ஆளுக்கு 5,000 இல்லை 10,000 ரூபாய் சம்பாதிச்சு எடுத்துக்கொண்டு போவோம் அவ்வளவுதான். இங்கே நீங்கள் இப்போது பார்க்கிறது ரொம்ப குறைவான குடும்பங்கள்தான். ஒரு மாதத்துக்கு முன்னாடி நிறைய பேர் இருந்தாங்க. அவர்கள் எல்லோரும் போன மாதம்தான் கிளம்பி போய்விட்டார்கள். அதில், நிறைய பேர் பிச்சை எடுக்கிறவர்கள்தான். எல்லாமே பீகார், ஒரிசா, ராஜஸ்தான்னு பல மாநிலத்தை சேர்ந்தவர்கள்” என்றார்.
அருகில் கம்பி தடுப்புகளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் யார் என்று கேட்டபோது, “இது எங்க பையன்தான் பேர் சிராஜ்” என்றார் ரோகன்.
‘அவனைப் படிப்பதற்கு பள்ளிக்கூடம் அனுப்புகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, “இல்லை... எங்க ஊருக்கு போய்தான் அனுப்ப வேண்டும்” என்றார்.
அங்கே பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் ஐந்து சிறுவர்களுக்கும் மேல் விளையாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் யாருமே பள்ளிக்கூடம் செல்லவில்லை என்பது வருத்தமாகத்தான் இருந்தது. ரோகனிடம் பேசிவிட்டு, பாலத்தின் எதிர்பக்கம் போனபோது, அம்பத்தூர் நோக்கி செல்லும் வழியில் அதே பாலத்தின் கீழ் இருட்டுக்குள் ஒருவர் தள்ளுவண்டியில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். கொஞ்ச தூரம் தள்ளி கும்மிருட்டுக்குள் கொசுவலைகளைக் கட்டி இரண்டு குடும்பங்கள் அதற்குள் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
நடக்க முடியாததால் கைகளில் கட்டையுடன் தள்ளுவண்டியில் அமர்ந்திருந்தவரிடம் பேசினோம்.
“என்னோட பேர் பாபு (45), சொந்த ஊர் குடியாத்தம் பக்கத்தில்தான். இதோ பக்கத்தில் இருக்கிறது என்னோட மனைவி தனலட்சுமி. எங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தது. அதைக் கட்டிக்கொடுத்துட்டோம். அதற்குப் பிறகு இப்படி மெட்ராசுக்கு வந்துட்டோம். எப்படியோ நாள் போகிறது” என்றார்.
அவருடைய மனைவி தனலட்சுமி, “இவருக்கு நடக்க முடியாது. கூட ஒரு ஆளு இருந்து பார்த்துக்கணும் என்ன பண்றதுன்னு தெரியல இப்படி ஏதோ எங்க வாழ்க்கை போகிறது” என்றார்.
தனலட்சுமிதான் அருகில் கொசுவலைக்குள் படுத்துக்கொண்டிருந்த குடும்பத்திடம் அழைத்துக்கொண்டு போனார். அருகில் சென்றபோது அவர்கள் இன்னும் உறங்கியிருக்கவில்லை என்பது தெரிந்தது. கொசுவலைக்குள் எழுந்து வெளியே வந்த அவருக்கு தமிழ் ஓரளவு மட்டும்தான் தெரிந்திருந்தது. அவருடைய பெயர் பாஸ்கர் சௌகான். அவருடைய மனைவி திப்பாலி கொசுவலைக்குள் உறக்கத்தில் இருந்தார். அருகில் தனியாக படுத்திருந்த தனது தாய் பவர் ராம்பியாரி சௌகானை சுட்டிக்காட்டினார். “எங்களுடைய சொந்த ஊர் மாகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம், அஜந்தி. அங்க பிழைக்க வேறு வழியில்லை. அதனால், இப்படி இங்கே வந்து பிச்சை எடுக்கிறோம்” என்று கூறினார் பாஸ்கர். பேசிக்கொண்டிருக்கும்போதே ஓர் இளைஞன் வந்தான். அவனுடைய வலதுகை மணிக்கட்டுவரை இல்லை. அவனுடைய பெயர் நன்னேஸ். அவனும் அவர்களுடன் சேர்ந்து பிச்சைதான் எடுக்கிறார். ஒரு விபத்தில் நன்னேஸின் வலதுகை மணிக்கட்டுடன் துண்டாகிவிட்டதாகத் தெரிவித்தார்கள். அருகில் சிறிது தூரம் தள்ளி அங்கு இன்னும் சிலர் பிச்சை எடுப்பவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
‘இந்தப் பாலத்தின் கீழ் தங்கிக்கொண்டிருக்கிறீர்களே... உங்களை போலீஸார் எதுவும் கேட்பதில்லையா?’ என்று கேட்டபோது, “போலீஸார் எதுவும் கேட்பதில்லை. நேற்று இரவு வந்து விசாரித்துவிட்டு போய்விட்டார்கள். அவர்களுக்கும் தெரியும். திக்கற்றவர்கள்தான் இங்கே வந்து இருக்கிறார்கள்” என்று தனலட்சுமி கூறினார்.
இப்படி, தங்கள் சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் சென்னைக்குப் பிச்சை எடுக்க வந்திருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். அவர்களின் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் கருணைகளினால் மட்டுமே கடந்துகொண்டிருக்கிறது.
சென்னை அடுக்குமாடிக் கட்டடங்கள், சொகுசு கார்கள், வாகனங்கள், ஆடம்பர வாழ்க்கை என்று ஒருபக்கம் இருந்தாலும், சென்னையின் இன்னொருபக்கம் இப்படி பிச்சை எடுக்கும் மக்களும்தான் இருக்கிறார்கள். வல்லரசு கனவுகளைப் பற்றி பேசும் ஆட்சியாளர்கள் இப்படி நாட்டு மக்களில் சிலர் பிழைக்க வழியில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் யதார்த்தத்தையும் உணர வேண்டும். அவர்களும் சுய மரியாதையுடன் வாழ ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் பிச்சையெடுக்கும் வெளி மாநிலத்தவர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:20:00
Rating:
No comments: