தடையை நடைமுறைப்படுத்து!
இந்தியாவில் தான் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலை இருக்கிறது. இந்நிலையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை விதித்த சட்டத்தை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய,மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது தண்டனை விதிக்கவும் இதில் இடம் உண்டு. சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மனிதக் கழிவுகளை அகற்றிய போது 30 பேர் பலியானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நகர்பகுதிகளில் 363 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்தது. இதற்கான தடை ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் இல்லை.
அதனால், இந்த நடைமுறைக்கு தடை விதித்து, அதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வு, முன்பு வந்தது. அப்போது, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல். இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்ட சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தடையை நடைமுறைப்படுத்து!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:24:00
Rating:
No comments: