பெட்ரோகெமிக்கல் திட்டம்: தமிழகத்துக்கு வரவிருக்கும் அடுத்த ஆபத்து!
ஹைட்ரோ கார்பன் எடுப்பதை எதிர்த்து நெடுவாசலிலும் கச்சா எண்ணெய்க்குக் குழாய் பதிப்பதை எதிர்த்து கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதைப்பற்றி தமிழக அரசும் சரி; மத்திய அரசும் சரி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தை அழிக்கும் அடுத்தப் பணியை தமிழக அரசும் மத்திய அரசும் தொடங்கியுள்ளன. அதுதான் பெட்ரோல் உற்பத்தி மையங்கள் அமைக்கும் திட்டம்.
கடந்த ஜூலை 19ஆம் தேதி மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை உள்ளடக்கிய 23,000 ஹெக்டேர் நிலப்பரப்பு பெட்ரோலியம் பொருள்கள் உற்பத்திக்கான முதலீட்டு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களைச் சேர்ந்த 25 கிராமங்கள் மற்றும் நாகையில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சேர்ந்த 20 கிராமங்களில் இந்த பெட்ரோலிய உற்பத்தி மண்டலம் அமைக்கப்படவுள்ளது. இப்பகுதிகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.1146 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் மண்டலம் என்ற திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும். குறிப்பிட்ட பகுதிகளில் உற்பத்தி நிறுவனங்களை தொடங்கி பெட்ரோலியம், கெமிக்கல், பெட்ரோகெமிக்கல் ஆகியவற்றை உள்நாட்டுத் தேவைக்கும் ஏற்றுமதிக்கும் உற்பத்தி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆந்திரா, குஜராத், ஒடிசா மற்றும் தமிழகத்தில் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2015 டிசம்பர் மாதத்திலேயே இந்தப் பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கக்கோரி தமிழக அரசு தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. அதாவது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே இத்திட்டத்துக்கு தனது அனுமதியை வழங்கியுள்ளார். தற்போது எடப்பாடி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். கடலூர் முதல் நாகை வரையிலாக பகுதிகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருள்களைச் சுத்திகரிப்பு செய்வதற்கு இப்பகுதியில் தொழிற்சாலைகள் கட்டப்படவுள்ளன. அவற்றை ஏற்றுமதி செய்ய ஏதுவாக அருகிலேயே சிறு துறைமுகம் கட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ராமநாதபுரம், அரியலூர், திருவாரூர், கடலூர், நாகை, தஞ்சை ஆகிய பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. மூலம் 33 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு எண்ணெய் மற்றும் எரிவாய் எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி 34 லட்சம் கனஅடி அதாவது 90 டன் எண்ணெய் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பி.சி.பி.ஐ.ஆர். திட்டம் இப்பகுதி மக்களிடம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் நிஜாமுதின் கூறுகையில், “இத்திட்டத்தால் இப்பகுதியில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு அடைவதுடன், கடல்வளம் மற்றும் மீன்வளம் அழியும். விவசாயம் பாதிக்கப்படும். மீனவர்களின் உரிமை என்பது முற்றிலும் தடைப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பூவுலக நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் கூறுகையில், “பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாகக் கடற்கரை சூழலியலில். அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவனிடம் கருத்து கேட்டோம். அதற்கு அவர், “இந்த ஆட்சி எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் மக்களுக்கு எதிரானதாக அது இருக்காது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகவே அது அமையும். தொழிற்சாலை அமைவது மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படாது. வெறும் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளைச் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே அமைக்கப்பட்டாலும் அதற்கு ஏராளமான நீர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. கடல்நீர் நிலத்தடி நீருடன் கலக்கும் ஆபத்தும் உள்ளது.
மேலும் உலக நாடுகள் அனைத்துமே பெட்ரோலியத்துக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றன. பிரான்ஸ் நாடு 2030-க்குள் பெட்ரோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்யுள்ளது. இந்தியாகூட மின்சார கார் உற்பத்தியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதற்காக பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தைப் புதிதாக அமைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.
- முருகேஷ் மற்றும் காசி
பெட்ரோகெமிக்கல் திட்டம்: தமிழகத்துக்கு வரவிருக்கும் அடுத்த ஆபத்து!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:31:00
Rating:
No comments: