நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்கள்!
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு வரை பிளஸ் டு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால், மத்திய அரசு இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்தது. அதனால், பல மாணவர்களின் பெற்றொர்கள் மீண்டும் நீட் தேர்வு பயிற்சி மையங்களை நோக்கி தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போனார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாகிப்போனது. இந்த நீட் தேர்வால் பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டி செல்ல முடியாத பல மாணவர்கள், பிளஸ் டு வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்காததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் வெளியே நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்படி பிளஸ் டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாததால் அரியலூரில் ஒரு ஏழைப் பெண் பாதிக்கப்பட்ட சம்பவம் பொதுச் சமூகத்தின் பார்வைக்கு வந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவருடைய தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கு முன்பே அனிதாவின் தாய் இறந்துவிட்டார். இத்தகைய சூழலில் வீட்டில் தனியாகவே படித்த அனிதா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 478 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதில் கணிதம், அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதையடுத்து அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் அனிதாவுக்கு கட்டண சலுகையில் இடம் அளித்துள்ளார்கள். அந்த பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்த அனிதா பிளஸ் டு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதில் கணிதம், இயற்பியலில் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வேதியியலில் 199, உயிரியலில் 194 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்கள் படி, பிளஸ் டு மதிப்பெண்ணைக் கொண்டு மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அனிதாவின் கட் ஆஃப் மதிப்பெண் 196.5 மதிப்பெண்கள். இதற்கு மிக எளிதா மருத்துவப் படிப்பில் சீட் கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வு அறிவிப்பால், ஏழை மாணவி அனிதா எம்பிபிஎஸ் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதனை திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இப்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் அவரை தொடர்புகொண்டுள்ளனர்.
அதே போல, துறையூரைச் சேந்த அருள் கார்த்திக் என்ற மாணவர் பிளஸ் டு பொதுத்தேர்வில் 1159 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருடைய கட் ஆஃப் 198 மதிப்பெண்கள். ஆனால், அவர் நீட் தேர்வில் வாங்கிய கட் ஆஃப் மதிப்பெண் 213 என்று குறிப்பிட்டுள்ளார். நீட் பயிற்சி மைய்யங்களுக்கு செல்லாமல் அவரே வீட்டில் படித்து இந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனாலும், இந்த மதிப்பெண் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போதாது என்பதால், ஏழை மாணவரான அருள் கார்த்திக்கும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்படி தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் பிளஸ் டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், தமிழக அரசு நீட் தேர்வை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த குரல்களை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:26:00
Rating:
No comments: