தனிநபர் உரிமை: மத்திய அரசின் முரண்பட்ட கருத்து!
உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்ட ஆதார் தொடர்பான வழக்கில் தனிநபர் உரிமை குறித்து மத்திய அரசு முரண்பட்ட வாதத்தை முன்வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு வங்கம், கர்நாடகா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்கள், ‘தனிநபர் உரிமை என்பது அரசியல் சாசனத்தினால் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமை’ என்பதை நிறுவ உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
மத்திய அரசு தனது குடிமக்களின் விவரங்களைத் திரட்டும் நோக்கில் ஆதார் அடையாள அட்டை திட்டம் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. முன்பு ஆதார் திட்டத்தை எதிர்த்த பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஆதார் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் செயலில் இறங்கியது. நாடு முழுவதும் 90 சதவிகிதத்துக்கு மேல் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி முழுவதுமாக நிறைவடையாத நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. மேலும், ஆதார் அடையாள அட்டைக்கு ஒருவரின் கைரேகைப் பதிவு, கண் பாவை ஆகிய பயோமெட்ரிக் தகவல்கள் பெறுவதால் இந்தத் தகவல்கள் இணையத்தில் வெளியானால் ஒருவரின் தனிநபர் உரிமை மீறப்படும் என்று வாதிடப்பட்டது. தனியுரிமை மீறும் செயல் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று வாதிடப்பட்டது. இதுதொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒன்பது நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சாசன அமர்வை உருவாக்கி விசாரித்து வருகிறது.
இந்த ஆதார் தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் தேதிகளில் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள் தனிநபர் உரிமைச் சேர்ந்தது. இந்தத் தகவல்கள் பொதுவில் வெளியாகாமல் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, நேற்று ஜூலை 26ஆம் தேதி அரசியல் சாசன அமர்வு முன்பு ஆதார் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால், “தனிநபர் உரிமை என்பது எல்லா கோணத்திலும் அடிப்படை உரிமை என்ற வரையறைக்குள் வராது. தனியுரிமை சுதந்திரம் என்ற கருத்துக்குள் அடங்கும் ஒரு துணை கருத்து. தனி மனித சுதந்திரம் என்பது முழுமையானதாக இருக்கக் கூடியது அல்ல. எந்த ஒரு தனிநபரும் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைக்கு உட்பட வேண்டும். தனிமனித உரிமையின் கீழ் ஆதார் வராது. வளரும் நாடுகள் அனைத்தும் அடையாள முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக வங்கி கூறியுள்ளது” என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
இந்த வழக்கு விசாரணையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கம், கர்நாடகா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தனிநபர் உரிமை என்பது அரசியல் சாசனத்தினால் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமையே என்பதை நிறுவ உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
ஆதார் வழக்கு தொடர்பாக மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். அப்போது அவர், “தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தற்காலத்தில் தனிநபர் உரிமை விவகாரத்தை அலச வேண்டும். தனிநபர் உரிமை என்பது முழு முதல் உரிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அது அடிப்படை உரிமையே. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு சமச்சீர் நிலைப்பாட்டை எட்ட வேண்டும்” என்று வாதிட்டார்.
இந்த வழக்கில், ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில், தனிநபர் உரிமை என்பது பொதுவான சட்ட உரிமைதானே தவிர, அடிப்படை உரிமையாகாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால், அடுத்த சில தினங்களில், வாட்ஸ்அப் தொடர்பான வழக்கில், இதே மத்திய அரசு, தனிநபர் உரிமை, ரகசியக்காப்பு என்பது அடிப்படை உரிமையே என்று உச்ச நீதிமன்றத்தில் முரண்பாடாக வாதாடியுள்ளது.
தனிநபர் உரிமை: மத்திய அரசின் முரண்பட்ட கருத்து!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:08:00
Rating:
No comments: