ஜனாதிபதி தேர்தல் முடிவு: மதசார்பற்ற கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் தருணம் – எஸ்.டி.பி.ஐ.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து, மதசார்பற்ற கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணத்தில் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சையத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குடியரசு தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. காரணம் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பது தான். முஸ்லிம்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர், சங்க்பரிவார குண்டர்களால் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, மிகவும் துன்பகரமாக இருக்கும் சூழ்நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய ஜனாதிபதி சங்க்பரிவார கொள்கைகளில் உறுதி கொண்டவர் என்றாலும் அரசியல் சட்டம் வழங்கும் பொறுப்புகளில் இருந்து அவர் நழுவிச் செல்ல முடியாது.
இதற்கிடையில் குடியரசு தலைவர் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளின் வாக்குகள் கட்சி மாறி விழுந்திருப்பது அவர்களின் மதசார்பற்ற தன்மையை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இதன் மூலம் மதசார்பின்மைக்கு அவர்கள் துரோகம் செய்து விட்டார்கள். மேற்கு வங்கத்தில் 5 எம்.எல்.ஏக்கள் அணி மாறி வாக்களித்துள்ளனர். அப்படி வாக்களித்தவர்கள் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் அல்லது இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உ.பியில் சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களும், டெல்லியில் 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களும் அணி மாறி வாக்களித்துள்ளனர்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அஸ்ஸாமில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 13 எம்.எல்.ஏக்களும், பஞ்சாப்பில் இரண்டு ஆம் ஆத்மி எம்.பிக்களும் அணி மாறி வாக்களித்துள்ளனர்.
திரிபுராவில் காங்கிரஸ் அல்லது இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களும், ராஜஸ்தானில் 5 பேர்களும், கோவாவில் காங்கிரஸிலிருந்து 5 பேர்களும், குஜராத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜேடியு கட்சியைச் சேர்ந்தவர்கள் 11 பேர்களும் அணி மாறி வாக்களித்துள்ளனர். மொத்தத்தில் இந்தியா முழுவதும் 116 மக்கள் பிரதிநிதிகள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு அணி மாறி வாக்களித்து தங்களது போலி மதச்சார்பின்மை கொள்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தோல்வி அடைந்திருக்கும் மீராகுமார் தொடர்ந்து மதசார்பற்ற தன்மைக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால், வெறும் அறிக்கைகள் பலனளிக்காது. அவர்கள் பதவியில் இருக்கும் போது, உண்மையிலேயே மதசார்பின்மைக்குப் பாடுபட்டிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் சவாலை அடிமட்டத்திலிருந்தே சந்திக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர் துன்பங்களை சந்திக்கும் போது கண்டன அறிக்கை மட்டும் விடுவது என்பது ஒரு பேஷன் என்றாகிவிட்டது. எனவே மதசார்பற்ற கட்சிகள் மதசார்பின்மை மற்றும் பன்முகத்தன்மை குறித்து தங்களது கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் மறு பரிசீலனை செய்து, தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவு: மதசார்பற்ற கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் தருணம் – எஸ்.டி.பி.ஐ.
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:46:00
Rating:
No comments: