தலைமை நீதிபதிக்கு செலமேஸ்வர் மீண்டும் கடிதம்!

தலைமை நீதிபதிக்கு செலமேஸ்வர் மீண்டும் கடிதம்!

நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதில் மாநிலவாரி பிரதிநிதித்துவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்துக்கு எதிராக, தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் நீதிபதி செலமேஸ்வர்.
ஜனவரி 12ஆம் தேதியன்று டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான ஜஸ்தி செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப். அதன்பின், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நான்கு நீதிபதிகளுடனும் சமரச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும், உச்ச நீதிமன்றச் செயல்பாடுகளில் இவர்கள் தெரிவித்த அதிருப்தி, தற்போதுவரை அரசியல் களத்திலும் பல்வேறு விளைவுகளை உண்டாக்கி வருகிறது. தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு வழிவகை செய்தது.
கடந்த மாதம் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது கொலீஜியம். ஆனால், இந்து மல்ஹோத்ராவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய சட்ட அமைச்சகம், கே.எம்.ஜோசப்பின் நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்துக்குத் திருப்பி அனுப்பியது. அவரைவிட மூத்த நீதிபதிகள் 11 பேர் இருப்பதாகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் போதுமான அளவுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதாகவும், இதற்குக் காரணம் தெரிவித்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் நீதிபதி செலமேஸ்வர். இதில், ஜனவரி 10ஆம் தேதி மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பிய பரிந்துரையில் எந்த மாற்றமும் செய்யாமல் மீண்டும் வலியுறுத்த வேண்டுமென, அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (மே 10) மீண்டும் கொலீஜியம் கூடுவதாக இருந்தது. ஆனால், செலமேஸ்வர் விடுப்பில் சென்றதால் அந்தச் சந்திப்பு நிகழவில்லை. கொலீஜியம் கூடுவது தொடர்பாக, தீபக் மிஸ்ரா தரப்பிலிருந்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. அவ்வாறு கூடினால், ஜோசப்பின் நியமனத்தை மீண்டுமொருமுறை கொலீஜியம் பரிந்துரை செய்யுமென்று கூறப்படுகிறது. அதை மத்திய அரசினால் கண்டிப்பாக நிராகரிக்க முடியாது. கடந்த வாரம் கேரளா சென்ற நீதிபதி குரியன் ஜோசப்பும், கொலீஜியம் தனது பரிந்துரையை மீண்டுமொரு முறை மத்திய அரசிடம் வலியுறுத்தும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று, தீபக் மிஸ்ராவுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியிருந்தார் செலமேஸ்வர். அதில், மத்திய அரசு நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தொடர்பு கொண்டு உத்தரவிடுவது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் விவாதிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பையும் தீபக் மிஸ்ரா வெளியிடவில்லை. இந்த நிலையிலேயே, தற்போது அவர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். வரும் ஜூன் 22ஆம் தேதியோடு நீதிபதி பதவியிலிருந்து செலமேஸ்வர் ஓய்வு பெறப் போகிறார். இந்த நிலையிலும், உச்ச நீதிமன்ற நடைமுறை குறித்துத் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்.
தலைமை நீதிபதிக்கு செலமேஸ்வர் மீண்டும் கடிதம்! தலைமை நீதிபதிக்கு செலமேஸ்வர் மீண்டும் கடிதம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.