கைதி மரணம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!
நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுப் பிரிவு டிஜிபிக்கு, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த வாலிபர் அந்தோணி ராஜ் (வயது 21). நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக இவர் மீது திருட்டு, கொள்ளை உள்ளிட்ட ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 17ஆம் தேதியன்று நீலாங்கரை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அந்தோணியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அந்தோணி, மறுநாள் (மே 18) இறந்துவிட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால்தான் அந்தோணி இறந்ததாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
சென்னை தெற்கு மண்டல காவல் துறை கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் மகேஸ்வரி, அடையாறு துணை ஆணையர் செஷாங்சாய் ஆகியோர் நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். காவல் துறை விசாரணையில் கைதி இறந்ததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் சிஆர்பிசி(CrPC) 176இன் கீழ் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன், தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
விசாரணை கைதி அந்தோணி இறந்தது தொடர்பாக விசாரித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுப் பிரிவு டிஜிபிக்கு, நீதிபதி ஜெயசந்திரன் நேற்று (மே 21) உத்தரவிட்டுள்ளார்.
கைதி மரணம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:08:00
Rating:
No comments: