வாழ்வாதாரம் தேடி அலையும் மீனவர்கள்!
ராக்கி கோஷ்
அது ஒரு முற்பகல் நேரம். மங்கலஜோதி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அவருடைய வீட்டின் முன்பிருந்த மீன்பிடி வலைகளை அவர் மடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு இக்கிராமத்தில் உள்ள பல குடும்பங்களும் இதுபோல மீன்பிடித் தொழிலில் பரபரப்பாகவே இருந்தனர். ஆனால் இப்போது இந்தக் கிராமத்தில் உள்ள பலர் மீன்பிடித் தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர். இது ஒரு காலத்தில் அவர்களின் பாரம்பரியத் தொழிலாகவே இருந்தது.
இந்தக் கிராமத்தில் 5000க்கும் அதிகமானோர் உள்ளனர். இந்தக் கிராமம் சிலிகா கரையோரம் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ள உப்பு நீர் ஏரியாகும். மங்கலஜோதி கிராமம் ஒடிசாவில் உள்ள கோர்தா மாவட்டத்தின் தங்கி தாலுகாவில் உள்ளது. தலைமுறை தலைமுறையாக இங்குள்ள மக்கள் சிலிகாவில் மீன்பிடித்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ்வரா பெஹ்ரா தனது இளம் பருவத்தில் சிலிகாவில் மீன்பிடித்து வந்தார். ”நாங்கள் நம்பிக்கையோடு இந்த ஏரியில் நண்டுகள், இறால்கள் மற்றும் ரக ரகமான மீன்களைப் பிடித்து வந்தோம். இதுதான் எங்களது வருவாய்க்கான ஆதாரமாகவும் இருந்தது" என்கிறார் அவர்.
ஆனால் தற்போது இவர்களின் வாழ்க்கை நிலை மாறியுள்ளது. மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் இங்குள்ள இளைய தலைமுறையைக் கொண்ட குடும்பங்கள் வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர். ”ஒன்று இங்கேயே இருந்து மீன்பிடித் தொழிலைச் செய்ய வேண்டும் அல்லது வேறு பகுதிகளுக்கு குடியேறி மாற்றுத் தொழிலுக்கு கூலி வேலைக்குச் செல்ல வேண்டும்” என்கிறார் கபி பெஹ்ரா. நான்கு பேர் அல்லது ஐந்து பேர் இருக்கின்ற குடும்பங்களுக்கு இந்த வருவாய் போதாது என்று கூறும் கபி, நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை மட்டுமே கிடைப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்.
இவர்கள் மீன்பிடித் தொழிலைத் தொடர, சிறந்த வாழ்வு இவர்களுக்கும் அமைய மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. சிலிகா ஏரியானது புரி, கோர்தா, கஞ்சம் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் மிகப்பெரிய ஏரியாகும். மேலும் இந்த ஏரி 15,000 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
"1990ஆம் ஆண்டுகளில் சிலிகா தொடர்ச்சியாக எதிர்கொண்ட சுற்றுச் சூழல் மாறுபாடுகள் மற்றும் மனிதர்களால் அடைந்த சுற்றுச் சூழல் சீர்கேடுகள் மீன் வளங்களைப் பாதித்தன" என்கிறார் கிருபசிந்து பாத். இவர் சிலிகா மேம்பாட்டு ஆணையத்தின் (சிடிஏ) ஆலோசகராக உள்ளார். வண்டல் படிதல், நீர் பரப்பு சுருங்குதல், களை பரவுதல், மீன் வளம் குன்றுதல் என சிலிகாவின் தன்மை மாறிக்கொண்டே வந்துள்ளது.
மனிதர்களால் ஏற்படும் சீர்கேடுகளைப் பொறுத்தவரையில் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையிலிருந்து மாற்று முறைக்கு மீன் பிடிக்க மாறியதும் ஒரு காரணமாகும். நவீன மீன்பிடி கியர்களைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். என்ஜின் பொருத்திய படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ”முன்பெல்லாம் 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மட்டும்தான் நாங்கள் மீன்பிடித்து வந்தோம். இப்போது 50 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று மீன் பிடிக்கிறோம்' என்கிறார் ராமகந்த பெஹ்ரா.
முன்பு சிலிகாவின் நிலையான தாங்கும் திறன் 27,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. 1995-96ஆம் ஆண்டில் இதன் அளவு 1,274 டன்னாகக் குறைந்தது. 2016-17ஆம் நிதியாண்டில் மீண்டும் 15,000 டன்னாக அதிகரித்துள்ளது. முறைகேடாக அத்துமீறி இறால்களைப் பிடிப்பதும் நடக்கிறது. இதனால் மீன் வளம் குறைகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவும் சிடிஏ முயற்சித்து வருகிறது. இதற்கு ஒடிசாவின் கடல் மீன் வள ஒழுங்குமுறைச் சட்டம்-1982 சிடிஏவுக்கு உதவும் வகையில் இருந்தது.
"சிறு மற்றும் குறு மீனவர்கள் மீன்களைப் பிடிக்க பூஜ்ய வலைகளைப் பயன்படுத்தினர். பூஜ்ய வலைகளில் வலைக் கன்னிகளின் அளவு 100 எம்.எம். ஆக உள்ளது. இதில் சிறு மீன்களும் மாட்டிக்கொள்ளும். இதனால் இந்த வலையைப் பயன்படுத்த சிடிஏ தடை விதித்துள்ளது. "ஆனால் சிலிகாவில் அதிக மீன்கள் இல்லை. வெளியிலிருந்து வரும் வர்த்தகர்களோ என்ன மீன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் அதிகாரிகள் எங்களது நிலையைப் புரிந்துகொள்வதில்லை. சிறிய மீன்கள்தான் கிடைக்கின்றன. வேறு பெரிய மீன்கள் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வாழ்வாதாரமும் இங்கு இல்லை. இதனால் சொந்த மண்ணை விட்டு வெளியேறிச் செல்கின்றனர்" என்று கூறுகிறார் ஷஷிதரா பெஹ்ரா.
மங்கலஜோதி கிராம மீனவர்கள் 2010ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கி விட்டனர். இவர்கள் வெளியேறியதற்கு அடிப்படைக் காரணம் நிலையான வருமானம் இல்லாததே. தொடக்கத்தில் புவனேஸ்வருக்குச் சென்று கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டனர் என்கிறார் ஹரி பெஹ்ரா. இவர் இக்கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.
நல்ல வருவாய் ஈட்ட வேண்டுமெனில் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனர். இருப்பினும் இவர்களில் பலருக்கு தொழிலாளர் உரிமைகள் குறித்து எதுவும் தெரியாததால் பல இடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தானி பெஹ்ரா தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவருடைய ஏஜென்ட் இவருக்கு 10,000 ரூபாய் வாங்கித் தருவதாக உறுதியளித்து அழைத்துச் சென்றார். மீன் பிடித் தொழிலில் அவருக்கு 4000 ரூபாய் மட்டும்தான் கிடைத்துள்ளது. மொழி தெரியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார் இவர்.
இது ஒன்று மட்டுமல்ல; இதுபோல பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்கிறார் மலாய மிஸ்ரா. இவர் அதிகார் என்ற தனியார் அமைப்பில் உள்ளார். இந்த அமைப்பு இவர்களுக்கு நியாயமான ஊதியத்தைப் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுக்யான் பெஹ்ராவுக்கு 20 வயதாகிறது. இவருக்கு மீன் பிடிப்பதில் ஆர்வமில்லை. வேறு தொழிலாளர் வேலைக்குச் செல்ல விரும்பினார். சுக்யான் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த இளையோர்கள் சென்னைக்கு வேலை தேடிச் சென்றனர். இங்கு வந்து பெயின்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளில் வருவாய் அதிகரித்து விலையுயர்ந்த ஆடைகள், செல்போன் என முந்தைய நிலையை விட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
மீன்பிடித் தொழில் ஆணாதிக்கத் தொழிலாகத்தான் உள்ளது. பெண்களைப் பொறுத்தவரையில் வலைகளைத் தயார் செய்வது, மீன்களை விற்பனை செய்வது, காய வைப்பது போன்ற பணிகளில்தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலைகளுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்குக் குடியேறிவிட்டனர். புவனேஷ்வரில் பெண்களுக்கும் கட்டுமானப் பணிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் புவனேஸ்வர் சென்று வருகிறார்கள் சில பெண்கள். ”நான் தினமும் அதிகாலையில் எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு புவனேஸ்வர் சென்று விடுவேன்” என்கிறார் சஞ்சுக்தா. ஆண்களை விடக் குறைவான ஊதியம்தான் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
"மீன் விற்கும்போது உடனடியாகப் பணம் கிடைக்காது. ஆனால் கூலி வேலையில் வாரம் ஒரு முறையோ அல்லது சில நாட்களுக்கு ஒருமுறையோ ஊதியம் கிடைத்து விடுகிறது" என்கிறார் சஞ்சுக்தா. மீன்பிடிக் குழுக்களின் கடுமையான சூழ்நிலையைப் புரிந்து கொண்டுள்ள மாநில அரசும், சிடிஏவும் சிலிகா மீனவர்கள் மத்திய கூட்டுறவு சங்கத்தை (சி.எஸ்.சி.சி.எஸ்.) அமைத்தன. இதன்மூலம் மீனவர்களுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சந்தை அமைப்பு மற்றும் விற்பனை செய்ய நவீன ஸ்டால்கள் அமைத்துத் தரப்பட்டன.
இதன்மூலம் நகரத்தில் வாழும் மக்களுக்கு மீன்கள், நண்டுகள் மற்றும் இறால்கள் கிடைத்தன. மீன்கள் மூலமான மதிப்பு கூட்டுப் பொருட்களை உருவாக்கப் பெண்கள் சுய உதவிக் குழுக்களையும், மீன்பிடி மேலாண்மை வசதிகளையும் சிலிகா மீனவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. "சாலைகள், சோலார் தெரு விளக்குகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. அது எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார் பாத்.
நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்
தமிழில்: பிரகாசு
வாழ்வாதாரம் தேடி அலையும் மீனவர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:44:00
Rating:
No comments: