நிவாரணம் வேண்டாம்: ஸ்டெர்லைட்டை மூடினால் போதும்!
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கிய ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை வாங்க, இறந்தவர்களின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தடையை மீறி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்திய அரசு மீது மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறிக்குச்சாலையைச் சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஒருவர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழரசனின் வீட்டிற்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் இன்று (மே 26) சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினரிடம், "உங்களது குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
நிவாரணத் தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தமிழரசு குடும்பத்தினர், "அரசு அறிவித்த நிவாரணத் தொகை உட்பட எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் போதும்" என்று கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
நிவாரணம் வேண்டாம்: ஸ்டெர்லைட்டை மூடினால் போதும்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:18:00
Rating:
No comments: