எங்கள் நிதியில் கை வைக்க வேண்டாம்!
‘வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது அவசியமானதுதான். அதற்காக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதியில் கை வைக்கக் கூடாது’ என்று அனைத்திந்திய அளவிலான நிதியமைச்சர்களின் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வசூலிக்கும் வரியின் ஒரு பகுதியை எந்த அடிப்படையில் பகிர்ந்தளிப்பது என்பதை ஆராய்ந்து ஒரு சூத்திரத்தை வழங்குவதற்காக நமது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி 15ஆம் நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்குழுவுக்கான வரையறைகளை அளித்துள்ள மத்திய அரசு, 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பகிர்ந்தளிக்க கூறியுள்ளது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால், தென்மாநிலங்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்கும். இந்த 15ஆவது நிதிக்குழுவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சார்பில் முதல்வர் நாராயணசாமி, ஆந்திரா சார்பில் நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்ணடு, கர்நாடகா சார்பில் விவசாய அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடா, கேரளா சார்பில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோர் பங்கேற்றனர்.
கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய அளவில் நிதியமைச்சர்கள் கூட்டம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘நிதி தன்னாட்சி மற்றும் மாநில சுயாட்சியில் தமிழகம் முன்னோடியான மாநிலம், நாம் பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும்போது ஆந்திரா சென்று தான் நிதி தன்னாட்சி பெற வேண்டும் என்ற தேவை தமிழகத்துக்கு இல்லை’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (மே 7) ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு தலைமையில் இந்திய அளவிலான நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. 11 மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டத்தை நடத்திய ஆந்திர மாநிலம் தவிர்த்து, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்கம் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பஞ்சாப் நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால் தென்மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். 15ஆவது நிதிக் குழுவின் விதிமுறைகளானது, முற்போக்கான மாநிலங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடும். வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது தேவையானதுதான். அதற்காக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதியில் கை வைக்க கூடாது. இது பெரும் உள்ளக் குமுறலைத்தான் ஏற்படுத்தும்” என்றார்.
மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, “15ஆவது நிதிக் குழுவின் விதிமுறைகளானது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 284(4) மற்றும் 275 ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்யும்விதமாக உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக கேரளாவில் நடைபெற்ற தென்மாநில நிதியமைச்சர்களின் கூட்டத்தில் தமிழகம் புறக்கணித்த நிலையில், அனைத்திந்திய அளவில் நடைபெற்ற கூட்டத்தையும் புறக்கணித்துள்ளது.
எங்கள் நிதியில் கை வைக்க வேண்டாம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:42:00
Rating:
No comments: