நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: நீதிபதி குரியன் வருத்தம்!
உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றப் பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தராகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. நீதிபதி கே.எம் ஜோசப் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 26ஆம் தேதி கொலிஜியம் அமைப்பிடம் மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.
பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கடந்த 2ஆம் தேதி கொலிஜியம் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதை கொலிஜியம் அமைப்பு ஒத்திவைத்தது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற முன்னாள் எம்.பி தாமஸின் சுயசரிதை வெளியிட்டு விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி குரியன் ஜோசப், "முன்னெப்போதும் நடக்காத நிகழ்வுகள் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கொலிஜியத்தின் பரிந்துரை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்படுவது இதுதான் முதல்முறை. இதுபோன்ற விஷயங்கள் இதுவரை நடந்ததில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிக்கும் விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி நடந்தது என்பதற்கும், எதிர்காலத்தில் இதுபோல நடைபெறக் கூடாது என்பதற்கும் விவாதம் தேவை. இதுதான் நீதிபதிகள் இடையே நிலவும் பொதுவான எண்ணமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: நீதிபதி குரியன் வருத்தம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:06:00
Rating:
No comments: