ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’!

சிறப்புக் கட்டுரை: ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’!

ரவிக்குமார்

கர்நாடக மாநிலத்தில் வாக்குப் பதிவு நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் பெறுகிறது. கர்நாடகத் தேர்தல் முடிவு அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. 2019 பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்பதையும்கூட அது தீர்மானிக்கப் போகிறது.
1985ஆம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடகாவில் எந்தவொரு கட்சியும் தொடர்ச்சியாக மறுபடியும் ஆட்சிக்கு வந்ததில்லை என்பதால் சில மாதங்களுக்கு முன்புவரை அங்கே பாஜகதான் வெற்றி பெறப் போகிறது என்று ஊடகங்கள் கணித்துவந்தன. ஆனால், அந்தக் கணிப்பு பலிக்குமா என்ற சந்தேகம் இப்போது பாஜக தலைவர்களுக்கே வந்திருக்கிறது. அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் அரசியல் சாதுர்யமும் இந்திய அளவில் மோடியின் செல்வாக்கில் ஏற்பட்டுவரும் சரிவும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பற்றிய ஐயத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன.
பாஜகவை விஞ்சும் அரசியல் வியூகங்கள்!
பாஜக என்னென்ன தந்திரங்களைக் கடைப்பிடிக்கிறதோ அவற்றையெல்லாம் விஞ்சுகிற அரசியல் யுக்திகளை சித்தராமையா கையாண்டு வருகிறார். பேரணி ஒன்றில் பங்கேற்பதற்காக பாஜக தலைவர் அமித் ஷா மைசூருக்கு வந்தபோது பாஜக ஆளும் கோவா மாநிலத்துடனான நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக விவசாயிகள் அறிவித்திருந்த ‘பந்த்’போராட்டத்துக்குக் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதனால் அமித் ஷாவின் பேரணி கூட்டமே இல்லாமல் தோல்வி கண்டது.
கர்நாடக மக்கள்தொகையில் சுமார் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத்துகள் தங்களைத் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிவந்தனர். அதை ஏற்றுக்கொண்ட சித்தராமையா லிங்காயத்துகளைத் தனி மதமாக அங்கீகரித்து அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். லிங்காயத்துகளின் வாக்கு வங்கியைக் குறிவைத்தே அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நிறுத்தியது. ஆனால், சித்தராமையாவின் மேற்படி நடவடிக்கை பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
காதலர் தினம், உணவு விடுதிகள் முதலானவற்றைக் குறிவைத்து பாஜக ஆதரவு உதிரிக் குழுக்கள் கர்நாடகாவில் தொடர்ந்து வன்முறையை ஏவிவந்தன. அதில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். உதிரிக் குழுக்களின் வன்முறை நடவடிக்கைகளின் மூலம் இந்துக்களின் வாக்குகளைத் திரட்டுவதே பாஜக கடைப்பிடித்துவரும் யுக்தி. அதை எதிர்கொள்ளும்விதமாகக் கன்னடப் பெருமித உணர்வை சித்தராமையா தூண்டிவிட்டார். கர்நாடக மாநிலத்துக்கு தனிக் கொடி, இந்தி எழுத்து அழிப்பு, அரசு வேலைகளில் கன்னடத்தில் படித்தோருக்கு 5 சதவிகித ஒதுக்கீடு, ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கன்னடம் கட்டாயம் என்ற அவரது அறிவிப்புகளால் பாஜக திணறிப்போனது.
பாஜக ஆட்சியின்போது சட்ட விரோதச் சுரங்கங்களை நடத்தியதாக சிபிஐயால் வழக்கு பதியப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் ரெட்டி சகோதரர்களுக்குக் கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்தது, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராதது எனப் பல்வேறு உட்கட்சி பூசல்களில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பாஜக, தனது வெற்றிக்குப் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறது. அவர் பேசவிருந்த பேரணிகளின் எண்ணிக்கை 15இல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டது அதற்கொரு சான்று.
மோடிக்கு எதிராகத் திரும்பிய அவருடைய பேச்சு
மே 1ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த நரேந்திர மோடி வழக்கம் போல ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசினார். தனது பேச்சுத் திறமையின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கும் மோடி, தன்னைப் போல ராகுல் காந்தியால் பேச முடியுமா என்று அர்த்தம் தொனிக்கும்விதமாக, “இந்தியிலோ ஆங்கிலத்திலோ அல்லது அவரது அம்மாவின் மொழியிலோ குறிப்புகளை வைத்துக்கொண்டேகூட கர்நாடக அரசின் சாதனைகளை விளக்கி ராகுல் காந்தியால் 15 நிமிடங்கள் பேச முடியுமா?” எனச் சவால் விட்டார்.
அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவரது சவால் அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது. முதலமைச்சர் சித்தராமையா “அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே... பேப்பரை பார்த்துக்கொண்டேகூட எடியூரப்பாவின் சாதனைகளைப் பற்றி நீங்கள் 15 நிமிடங்கள் பேச முடியுமா எனச் சவால் விடுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டார். மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் “நேர்மையோடு, பொய் இல்லாமல் உங்களால் ஐந்து நொடி பேச முடியுமா?” என மோடியைக் கேட்டார்.
சித்தராமையா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதைக் கேலி செய்யும் விதமாக, “கர்நாடக முதலமைச்சர் ‘டூ ப்ளஸ் ஒன்’ என்ற ஃபார்முலாவைக் கண்டுபிடித்திருக்கிறார். இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் தனது மகனை நிறுத்தியிருக்கிறார்” என மோடி கேலி பேசினார். உடனே சித்தராமையாவோ, “ரெட்டி சகோதரர்களுக்கு எதிரான சிபிஐ வழக்குகளை மூடியதில் தனக்கிருக்கும் பங்கு என்ன என்பதைப் பிரதமர் மோடி சொல்ல மறுக்கிறார். மோடியின் ‘டூ ப்ளஸ் ஒன் ஃபார்முலா’ என்ன தெரியுமா? டூ ரெட்டீஸ் ஒன் எட்டி (ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ரெட்டி சகோதரர்களும் எடியூரப்பாவும்)” என்று பதிலுக்குத் தாக்கினார். இப்படி பதிலுக்குப் பதில் எனப் போய்க்கொண்டிருந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி இப்போது ‘தலித் அஸ்திரத்தை’க் கையில் எடுத்திருக்கிறது.
தலித்துகளின் நலன்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரண்டு ட்விட்டர் பதிவுகள் மோடியின் பிரச்சாரத்தை ஒட்டுமொத்தமாகத் தகர்ப்பதாக மட்டுமின்றி தேர்தல் முடிவையே தீர்மானிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. “தலித்துகளும் ஆதிவாசிகளும் எப்போதும் சமூகத்தின் கீழ்த் தட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் பாசிசக் கருத்தியல். எப்படி ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த ஆபத்தான மனோபாவத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பது இத்துடன் உள்ள வீடியோவில் வெளிப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டு இரண்டரை நிமிட வீடியோ க்ளிப் ஒன்றை 6.5.2018 காலை 8.44 மணிக்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
“அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை நிச்சயம் பாஜக மாற்றியே தீரும்” என மத்திய அமைச்சரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான அனந்த்குமார் பேசும் காட்சி, தலித் வீட்டில் உணவருந்துவதாகச் சொல்லி ஓட்டலிலிருந்து வரவழைத்த உணவை எடியூரப்பா சாப்பிடும் காட்சி, குஜராத் மாநிலம் உன்னாவில் தலித்துகள் மிருகத்தனமாக அடிக்கப்படும் காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த வீடியோ, “தலித்துகளின் வீட்டில் சமைத்த உணவு வேண்டாம். ஆனால், அவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புவதோடு “21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர் எடியூரப்பா” என விமர்சிக்கிறது. அந்த ட்வீட் பல்லாயிரக்கணக்கில் லைக் செய்யப்பட்டுப் பகிரப்பட்டுவருகிறது.
அந்த ட்வீட்டை வெளியிட்டு சரியாக 12 மணி நேரம் கழித்து இரவு 8.58 மணிக்கு இன்னொரு ட்வீட்டை ராகுல் காந்தி பதிவு செய்தார். “கர்நாடக அரசின் புரட்சிகரமான எஸ்சி / எஸ்டி துணைத் திட்டம் அனைத்துவிதமான வளங்களிலும் அவர்களது மக்கள்தொகைக்கு இணையாக 24 சதவிகிதத்தை தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு ஒதுக்குகிறது. காங்கிரஸின் திட்டங்களைப் பெயர் மாற்றம் செய்வதிலும் அவற்றின் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதிலும் திறமைமிக்கவரான பிரதமர் மோடி இந்திய அளவில் இந்தத் திட்டத்தை காப்பியடிக்கலாமே” என்று குறிப்பிட்டு அத்துடன் ஒரு பிரச்சார போஸ்டரையும் இணைத்திருந்தார். அதில், “வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்சி / எஸ்டி துணைத் திட்டத்தை 2013ஆம் ஆண்டு இயற்றியது, அனைத்துவிதமான வளங்களிலும் 24 சதவிகிதத்தை எஸ்சி / எஸ்டி மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது, கடந்த ஐந்தாண்டுகளில் 88,385 கோடி ரூபாய் அந்தத் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” எனக் கர்நாடக மாநில காங்கிரஸின் சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் அளித்த தீர்ப்பும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் அமைப்புகள் நடத்திய நாடு தழுவிய பந்த் போராட்டத்தின்போது 12 தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதும் கர்நாடகத் தேர்தலில் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ஏவப்பட்ட ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’ பிரதமர் மோடியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாஜகவையும் நிலைகுலையச் செய்துவிட்டது. ‘காங்கிரஸ் பிரிவினையைத் தூண்டுகிறது’ எனக் கதறும் நிலைக்கு அவர்களை ஆளாக்கிவிட்டது.
மறுக்க முடியாத ஆதாரங்களோடு ராகுல் காந்தியால் எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்விகளுக்கு பாஜகவால் எப்படி பதில் சொல்ல முடியும்? கடந்த நான்காண்டுகளில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன என்பதைப் பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா? கடந்த நான்காண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் தலித்துகளுக்கான துணைத் திட்ட நிதியில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை மறுத்து வஞ்சித்திருப்பதைப் பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா? பண மதிப்பழிப்பு அறிவிப்பு, ஒரே நேரத்தில் தேர்தல், பொது சிவில் சட்டத்துக்கான முயற்சி என அரசியலமைப்புச் சட்டத்தின்மீது அடுக்கடுக்காய்த் தொடுக்கப்படும் தாக்குதல்களை இல்லையென்று பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா?
தலித் மக்களுக்கு எதிராகவும் ஆதிவாசிகளுக்கு எதிராகவும் மோடி அரசு செய்துவரும் தீங்குகளைக் குறிப்பிட்டு இன்னும் பல கேள்விக் கணைகளை காங்கிரஸால் ஏவ முடியும். ராகுல் காந்தி அவற்றை ஏவப் போகிறாரா அல்லது இந்த இரண்டே போதும் என நிறுத்திக்கொள்ளப்போகிறாரா என்பது தெரியவில்லை.
ராகுல் காந்தி வீசியிருக்கும் இந்த தலித் அஸ்திரம் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலைத் துளைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல்வரை பாயப் போகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’! ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’! Reviewed by நமதூர் செய்திகள் on 23:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.