ரவுடி நிறுவனம் வேதாந்தா: இங்கிலாந்து எதிர்கட்சி!

ரவுடி நிறுவனம் வேதாந்தா: இங்கிலாந்து எதிர்கட்சி!

லண்டன் பங்குச் சந்தையின் பட்டியலில் இருந்து வேதாந்தா நிறுவனத்தை நீக்க அந்நாட்டில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
வேதாந்தா நிறுவனத்தின் போக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு அல்லாமல், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதாக உள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி வாசிகள் 100 நாட்கள் போராடி 100ஆவது நாளில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் போலீசார் ஒடுக்குமுறை ஏவப்பட்டு இதுவரையில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் தூத்துக்குடியில் இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. மாநில அரசோ வெற்று சாக்குப்போக்குகள் கூறி வருகிறது.
தூத்துக்குடியில், மட்டுமல்ல ஒடிசாவின் நியம்கிரி மலையைக் குடைந்து பாக்சைட் உற்பத்தி செய்யவும் வேதாந்தா முயன்றது. அப்போது எழுந்த எதிர்ப்புகளால் அம்மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் மீது போலீஸ் ஒடுக்குமுறை ஏவப்பட்டது. சாம்பியா நாட்டின் கொன்கொலா காப்பர் சுரங்கங்கள், ஒடிசா மாநிலத்தின் லஞ்சிகாரில் உள்ள அலுமினிய உருக்கு ஆலை என வேதாந்தா நிறுவனத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகள் ஏராளம். இவற்றைக் காப்பாற்றிக் கொள்ள வேதாந்தா நிறுவனம் கையிலெடுத்த ஒடுக்குமுறை முயற்சிகளும், மனித உரிமை மீறல் செயல்களும் ஏராளம்.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச் சந்தைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென்று இங்கிலாந்து எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. லேபர் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரும், இங்கிலாந்து கருவூலத்தின் மாற்று வேந்தருமான ஜான் மெக்டொனெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் காரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் ஒழுங்குமுறை ஆணையங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதனால், வேதாந்தா போன்ற ரவுடி நிறுவனத்தால் லண்டன் நிதிச் சந்தையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராகப் போராடியவர்களில் 13 பேர் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தப் பெரு நிறுவனம் பல ஆண்டுகளாக சட்ட விரோதமான சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், சுற்றுச் சூழலை நாசமாக்கியும், உள்ளூர் மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றியும் வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பான 'ஃபாயில் வேதாந்தா' அமைப்பைச் சேர்ந்த சமரேந்திர தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "15 ஆண்டுகளாக லண்டன் பங்குச் சந்தையின் பட்டியலில் வேதாந்தா நிறுவனம் இருந்து வருகிறது. இந்த கிரிமினல் நிறுவனம் லண்டனில் நற்பெயர் பெற்றிருந்த அதே நேரத்தில், இந்தியாவிலும், சாம்பியாவிலும் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதாக நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எச்சரித்து வந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
ரவுடி நிறுவனம் வேதாந்தா: இங்கிலாந்து எதிர்கட்சி! ரவுடி நிறுவனம் வேதாந்தா: இங்கிலாந்து எதிர்கட்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.