ஒப்பந்தம்: சிபிஐ(எம்) எதிர்ப்பு!

ஒப்பந்தம்: சிபிஐ(எம்) எதிர்ப்பு!

இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் வர்த்தக நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்குவதற்கு சிபிஐ(எம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் இணையதளச் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கவுள்ளது.
இதை ஃப்ளிப்கார்ட்டின் பங்குதாரரான சாப்ட் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி மசயோஷி உறுதி செய்துள்ளார். “அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஃப்ளிப்கார்ட்டை விற்பதற்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை சுமார் 1,600 கோடி அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,07,600 கோடி) வால்மார்ட் வாங்கவுள்ளது. இந்தத் தகவல் இந்திய வர்த்தகத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியலிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
ஃப்ளிப்காட்டின் பங்குகளை வால்மார்ட் வாங்கவுள்ளதற்கு சிபிஐ(எம்) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொலிட் பீரோ நேற்று (மே 10) வெளியிட்ட அறிக்கையில், “ஃப்ளிப்கார்ட்டின் பங்குகளைச் சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்குவதற்கு இந்திய வர்த்தகத் துறையில் அந்நிய நிறுவனங்கள் பின்வாசல் வழியாக நுழைவதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்தியச் சில்லறை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான பரிந்துரையை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பாஜகவும் இதை எதிர்த்தது. தற்போது, இ-காமர்ஸ் துறை மூலமாக அந்நிய முதலீடு நுழைவதற்கு பாஜக அரசு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. இது, நான்கு கோடி இந்தியர்களுக்கு வேலை வழங்கிவரும் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தை முற்றிலும் அழித்துவிடும்.
வால்மார்ட் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் தனது பொருள்களை இந்தியாவிலும் விற்பனை செய்யும். இதனால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும். எனவே ஃப்ளிப்கார்ட்டின் பங்குகளை வால்மார்ட் வாங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்: சிபிஐ(எம்) எதிர்ப்பு! ஒப்பந்தம்: சிபிஐ(எம்) எதிர்ப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.