வரி பயங்கரவாதம்: யஷ்வந்த் சின்கா

வரி பயங்கரவாதம்: யஷ்வந்த் சின்கா

இந்தியாவில் தற்போது வரி பயங்கரவாதம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள யஷ்வந்த் சின்கா, பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவரும் பாஜகவின் முன்னாள் உறுப்பினருமான யஷ்வந்த் சின்கா, மோடி பிரதமர் ஆனதிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்து, மோடியையும் அருண் ஜேட்லியையும் கடுமையாகக் குற்றம்சாட்டி, தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.
பாஜகவில் மூத்த தலைவர்களின் கருத்துகளைக் கட்சியினர் நிராகரிக்கின்றனர் என்று கூறி, “அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் இனி சேரப்போவதில்லை, பாஜகவிலும் நான் இல்லை, அக்கட்சியின் தொடர்பைத் துண்டிக்கிறேன்” என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.
அண்மையில் அவர் தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியையும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்தது முக்கியமான சந்திப்பாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று(மே 9 ) கோவாவின் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட யஷ்வந்த் சின்கா, “தற்போது ’வரி பயங்கரவாதம்’ நடைமுறையில் உள்ளது என்றும் நாடு அறிவிக்கப்படாத அவசர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது” என்றும் கூறினார். 1975ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலை பிரகடம் அரசியல் ரீதியானது; ஆனால் தற்போதைய அவசர நிலை பிரகடனம் என்பது அறிவிக்கப்படாத ஒன்று என்று குறிப்பிட்டார்.
"நாங்கள் கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினோம்.
தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரி தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியும் அளித்தோம். ஆனால் அதற்கு மாறாக தற்போது வரி தீவிரவாதம் தொடர்பாக நாள்தோறும் புதுப் புது உத்தரவுகள் வருகின்றன.
பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து கோர்ட்டுகளில் 20 லட்சம் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபிறகு இதுவரை 357 திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன. மின்சாரமே இல்லாத கிராமங்களில் உள்ள வியாபாரிகளை வருமான வரியை இணையத்தில் செய்யச் சொன்னால் அது அவர்களால் எப்படி முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
”இந்திரா காந்தி அறிமுகப்படுத்திய அவசர நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது இப்போது உள்ள அவசர நிலை. 1975ஆம் ஆண்டில் இந்திரா காந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியில் இந்த முடிவை இந்திரா காந்தி எடுத்தார்.
ஆனால் தற்போது நாம் எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலையானது அறிவிக்கப்படாத ஒன்றாகும். இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் நமது நாட்டின் அரசியல் முறையில் மெதுவாகக் கொல்லும் வி‌ஷம் செலுத்தப்பட்டுவருகிறது” என்றும் குற்றம் சாட்டினார்.
வரி பயங்கரவாதம்: யஷ்வந்த் சின்கா வரி பயங்கரவாதம்: யஷ்வந்த் சின்கா Reviewed by நமதூர் செய்திகள் on 23:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.