பாஜக: ஒரு நபர் காட்சி, இரு நபர் ராணுவம்!

பாஜக: ஒரு நபர் காட்சி, இரு நபர் ராணுவம்!

பாஜக தற்போது மோடி சர்க்காராக மாறி விட்டது என்று தெரிவித்துள்ள சத்ருகன் சின்கா, அக்கட்சியை ஒருநபர் காட்சி என்றும் இரு நபர் ராணுவம் என்றும் விமர்சித்துள்ளார்.
சண்டிகாரில் நேற்று முன்தினம்(மே 20) ஜன் கல்யான் மன்ச் என்ற அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்காவும் பாஜக எம்.பி. சத்ருகன் சின்காவும் கலந்துகொண்டனர். சத்ருன் சின்கா பேசும்போது, பாஜக என்பது ஒரு நபர் காட்சியாகவும் இரு நபர் ராணுவமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், “ஏன் இன்னும் பாஜகவில் உள்ளீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்கும்போது, இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்த காலத்தில் இந்தக் கட்சியில் நான் சேர்ந்தேன் என்று பதிலளிப்பேன். அப்போது இருந்த கட்சி தற்போது இல்லை என்பதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. தற்போது, பாஜக மோடி சர்க்கார் ஆக மாறிவிட்டது.
நான் கட்சியின் கொள்கைகள் எதையும் மீறவில்லை. என்னைக் கட்சியில் இருந்து வெளியேற்ற அவர்கள் நினைத்தால், அதை நான் எதிர்க்க மாட்டேன். அவர்களது முடிவுக்கு நான் மதிப்பு கொடுப்பேன். என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததும் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அவர்கள் என்னை வெளியேற்றாமல் இருப்பதற்குக் காரணமாக உள்ளது. பாஜகவில் உள்ளவர்கள் பயத்தில் உள்ளனர். அதனால்தான் அவர்கள் எதுவும் பேசாமல் உள்ளனர். நான் பேசுவதால், கட்சியில் உள்ள ஒருவராவது பேசுகிறாரே என்று அவர்கள் மகிழ்ச்சியடையக் கூடும்” என்று தெரிவித்தார்.
யஸ்வந்த் சின்கா பேசுகையில், “நாடு தற்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் அடித்தட்டு மக்களுடன் நாங்கள் உரையாடுகையில், அவர்கள் மத்தியில் சோர்வான சூழல் காணப்படுவதை தெரிந்து கொண்டோம். தேர்தல்களின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், மக்கள் அந்த நிலைக்கு சென்று விட்டனர்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீதான மதிப்பீடாகத்தான் இருக்கும். ஜவஹர்லால் நேரு அல்லது இந்திரா காந்தி அல்லது மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் என்ன நடைபெற்றது? என்பதாக அத்தேர்தல் இருக்காது.
அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி காலத்தில் இருந்த பாஜக, தற்போது இல்லை.
இமாசலப் பிரதேசத்தில் கடந்த 1982ஆம் ஆண்டு தேர்தலில், சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜகவுக்கு 29 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்குச் சுயேச்சைகள் 6 பேர் ஆதரவு அளித்தனர். ஆட்சியமைக்க இந்த எண்ணிக்கையே போதும். அத்தேர்தலில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால், ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைமையை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். ஆனால், கர்நாடகத்தில் தற்போது என்ன நடந்தது? என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான், வாஜ்பாய், அத்வானி காலத்தில் இருந்த பாஜக தற்போது இல்லை எனத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
பாஜக: ஒரு நபர் காட்சி, இரு நபர் ராணுவம்! பாஜக: ஒரு நபர் காட்சி, இரு நபர் ராணுவம்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.