எட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்

சந்திர மோகன்
“ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்கள் கஞ்சமலை, கவுத்தி மலை, வேடிமலையில் உள்ள கனிமங்களை கொள்ளைடிக்கத் தான், இத்திட்டம் போடப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே? ” என சேலத்தில் கடந்த வாரத்தில், தி இந்து செய்தியாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் : “ஊகங்களின் அடிப்படையிலான கருத்துக்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை; இதில் ஒரு துளி உண்மை கூட இல்லை. இத்திட்டத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் பலன் பெறும். ”
ஒருதுளி உண்மை கூடவா இல்லை !!!😁
மற்றொரு புறம், ஆர்.எஸ்.எஸ் சிந்தனை போக்குள்ள, கார்ப்பரேட் ஆதரவு, ஆளும் கட்சிகள் & அரசாங்க ஆதரவு மனப்பான்மை மிக்க மேதைகள், “சேலம் இரும்பு தரம் குறைந்தது Low grade தான்! சேலம் கஞ்சமலையில் 35% இரும்பு தான் கிடைக்கிறது. எனவே, எட்டு வழி சாலைக்கும், கனிம வளக் கொள்ளைக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை ” என்கின்றனர்.
இத்தகைய விவாதங்களின் ஒரு வகை,  பத்திரிக்கையாளர் மாலன் நாராயணன் சொல்வதை பார்ப்போம் :-
” கனிமம் பற்றி நீங்கள் சொல்வது புரியவில்லை. சேலம் பகுதியில் கிடைக்கும் இரும்பு தாதுவில் 35 % to 45% அளவே இரும்பு தாது இருக்கிறது. அதனால், அது Low Grade எனப்படுகிறது. சேலம் உருக்காலை உருட்டாலை ஆனதற்கு இதுவும் ஒரு காரணம்.”
மலைகளையே மறைக்கப் பார்க்கும் கில்லாடிகளும் … சேலம் இரும்பில் கட்டப்பட்ட இலண்டன் பாலமும்…
இரும்பு தாதுக்களை கொள்ளைடிக்கத் தான், சென்னை – சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது என்ற ஐயம் ஏன் விவசாயிகள் & பொதுமக்கள் மத்தியில் எழுகிறது / எழுந்தது?
மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள பசுமை வெளி விரைவுச் சாலை செல்லும் alignment பாதை வரைபடம் மற்றும் NHAI சாத்தியக்கூறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள விவரங்களின் படி,
1) சேலம் மாவட்ட இரும்பு தாது வளம் நிறைந்த கஞ்சமலையின் கிழக்கு புற அடிவாரத்தில் தான், உத்தம சோழபுரத்தில் தான் எட்டு வழி சாலை துவங்குகிறது.
2) சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு வடக்கில் உள்ள இரும்பு தாது வளமிக்க கோது மலைக்கு 10 கி.மீ தொலைவில் உள்ள குள்ளம்பட்டி வழியே தான் alignment அமைக்கப்பட்டுள்ளது.
3) தருமபுரி மாவட்டம், அரூர் அருகிலுள்ள, இரும்பு தாதுவளமிக்க தீர்த்த மலையின் அடிவாரத்தை ஒட்டி தான் alignment செல்கிறது.
4) திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் அருகே இரும்பு தாது வளமிக்க கவுத்தி மலை – வேடிமலைகளின் அடிவாரத்தில், 2005 ம் ஆண்டில் TIMCO என்ற பெயரில் ஜிந்தால்/ Jindal நிறுவனம் சுரங்க நிறுவனம் அமைக்கவுள்ளதாக அறிவித்த இனாம் கரியேந்தல் கிராமத்தின் அருகில், 2 கி.மீ தொலைவிலுள்ள நீப்புத்துறை வழியாகத்தான் alignment செல்கிறது.
ஜிந்தால் நிறுவனம் இரும்பு சுரங்கம் அமைக்க கஞ்சமலை கவுத்திமலையில் முயற்சித்ததும் காரணமாகும்.
2005 ம் ஆண்டில், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தான், சேலம்- கஞ்சமலை, திருவண்ணாமலை – கவுத்தி மலை, வேடி மலைகளிலுள்ள இரும்பு தாது பிரித்தெடுக்கும் சுரங்கத் தொழிலில் ஜிண்டால் நிறுவனம் Jindal Vijayanagar Works(99% பங்கு) மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் TIDCO (1% பங்கு) ஆகிய இரண்டும் எஸ்கார்ட் Escort ஒப்பந்தம் என்ற பெயரில் இணைந்து, தமிழ் நாடு இரும்பு தாது சுரங்க கழகம் TIMCO- Tamilnadu Iron Ore Mining Corporation என்ற பெயரில் புதிய நிறுவனமாக சேர்ந்து செயல்பட கையெழுத்திட்டனர். ரூ.400 கோடி ரூபாய் திட்டத்தில், சுமார் 800 ஏக்கர் வன பரப்பில், ஆண்டிற்கு 10 இலட்சம் டன் தாது எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஜிண்டால் நிறுவனம் TIMCO டிம்கோ என்ற பெயரில் சுரங்கம் அமைக்க அனுமதி கோரியும் விண்ணப்பித்து உள்ளது.
உள்நாட்டு இரும்பு சந்தையை விட ஏற்றுமதி செய்யவே சுரங்கம் அமைக்க ஜிண்டால் விரும்புகிறது!
ஜிண்டால் குழுமம் இரும்பு உற்பத்தியில் மிக முக்கியமான நிறுவனம் ஆகும்; உருக்கு இரும்பு Steel உற்பத்தியில் 3வது பெரிய நிறுவனம் ஆகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 59.3 இலட்சம் டன்கள் Iron pellets ல், மிக அதிகமான இரும்பு பெல்லட்டுகள் – 23 % யை ஏற்றுமதி செய்யும் நிறுவனமும் ஆகும்.
ஜிண்டால் சுரங்கம் வெட்ட அனுமதி பெற்றுள்ள சேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது. இவை எல்லாம் வெட்டப்பட்டு எண்ணூர் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது கார்ப்பரேட்டுகளின் இயல்பான ஆசை தான்.
கார்ப்பரேட்டுகளின் வணிகத்திற்காக அமைக்கப்படுவது தான் பசுமை சாலை!
சேலம் இரும்பின் சிறப்பு!
“தரம் தாழ்ந்தது, 35 % தான் இரும்பு உள்ளது” என்ற விமர்சனம் மீது சிறிதளவு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.
Mineral Benefication Plant வந்து விட்ட பிறகு இத்தகைய சொத்தையான விவாதங்களுக்கு மரியாதையே இல்லை.
(சேலம் இரும்பு பற்றி விரிவாக தனியொரு கட்டுரை எழுதவுள்ளதால், முக்கியமான அம்சங்கள் மட்டுமே இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது)
1) உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிரிட்ஜில் 50 டன்கள் சேலம்- கஞ்சமலை உருக்கு இரும்பு பயன்படுத்தப் பட்டுள்ளது. பிரிட்டிஷார் இதை wootze iron என அழைக்கின்றனர். 1843 ம் ஆண்டில், சென்னை மாகாணத்தில் Assistant Surveyor- General ஆக பணியாற்றிய கேப்டன் கேம்பெல், இந்திய இரும்பின் மட்டமான வகையும் கூட, அவர் காலத்தில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட உயர்தர இரும்பை விட தரம் உயர்ந்ததாக இருந்தது, என்றார்.
2) சங்க காலம் துவங்கி, பல நூற்றாண்டுகளாக சேலம் இரும்பு நாடு முழுவதற்கும் ஆன கத்திகள், வாள்கள், கதவு கீழ்கள் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பெரிய பட்டறைகளை கொண்டு இருந்தது. கிபி 4 ம் நூற்றாண்டில் போரஸ், மாமன்னர் அலெக்சாண்டருக்கு 30 பவுண்டுகள் சேலம் உருக்கு தந்ததாக வரலாறு சொல்கிறது.
3)18 ம் நூற்றாண்டில், கஞ்சமலை தாது கொண்டு பூலாம்பட்டியில் இரும்பு தயாரிக்கப்பட்டது. காவிரி ஆறு மூலமாக கொண்டு செல்லப்பட்டு பரங்கிப் பேட்டையில் இரும்பு தயாரிக்க பட்டது.
4) 1914 பாண்டிச்சேரி ஜென்டர் கம்பெனி கஞ்சமலையில் உரிமம் பெற்று, உருக்கி 10 டன் இரும்பை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பியது.
5) இரும்பை உருக்க நிலக்கரியோ, மின்சார உலைகள் Electric Smelters இல்லாத காரணத்தால், இருபதாம் நூற்றாண்டில் ஒரு நாளைக்கு 60 டன்கள் இரும்பு உற்பத்தி செய்ய 51 டன்கள் கரி மற்றும் 204 டன்கள் மரங்கள் தேவைப்பட்டதால், சேலம் கஞ்சமலை இரும்பு உருக்கப்படும் முயற்சிகள் தடைபட்டன. தரம் குறித்த வேறு காரணங்கள் எதுவுமில்லை. (விரிவாக தனியொரு கட்டுரையில் பரிசீலிப்போம்.)
கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டுகள் பல்வேறு பொய்களை சொல்லி வருகின்றனர். 8வழி பசுமை சாலை விவசாயிகளுக்கு கேடு என்பது மட்டுமல்ல! சேலம் தருமபுரி திருவண்ணாமலையில் உள்ள கனிமங்களை கொள்ளையடிக்கும் திட்டமும் ஆகும்.
மக்கள் சொத்தான கனிமங்களை காப்பாற்றிட கார்ப்பரேட் ஆட்சியாளர்கள் கூட்டுசதிகளை முறியடித்திட… மக்கள் இயக்கம் ஒன்றும் உருவாகிட வேண்டும்!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.
எட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும் எட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும் Reviewed by நமதூர் செய்திகள் on 04:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.