எட்டு வழிச் சாலை: இன்னோர் ஆர்ப்பாட்டம்!

எட்டு வழிச் சாலை: இன்னோர் ஆர்ப்பாட்டம்!

எட்டு வழிச் சாலைக்கு எதிராக, அரசுக்கு அஞ்சாமல் மக்கள் போராட முன்வர வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச் சாலை திட்டமானது மக்களின் கருத்துகளைக் கேட்டறியாமல், காவல் துறை அடக்குமுறையைக் கொண்டு செயல்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அடக்குமுறை மூலம் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தியும், அதோடு, ஜனநாயக வழியில் போராடுபவர்களையும், குரல் கொடுப்பவர்களையும் நசுக்குவதை நிறுத்த வலியுறுத்தியும் சேலம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், நேற்று (ஜூலை 17) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் அப்சர் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் வி.எம்.எஸ்.முஹம்மது முபாரக் பேசுகையில், “அரசு செயல்படுத்த முனையும் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை என்பது இயற்கையையும் பசுமையையும் அழித்து அப்பகுதி மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து உருவாகக்கூடிய சாலை ஆகும்.
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தமிழக மக்கள் முழுமையாக ஆதரித்து வருகிறார்கள். ஆனால், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு என்று மிரட்டல் போக்கை விடுத்து வருகிறது தமிழக அரசு.
இத்திட்டத்தால் 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தினர், 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சாலையை அமைக்க 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் அழிக்கப்படவுள்ளது. மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், 10 ஆயிரம் கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள், லட்சக்கணக்கான மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற மரங்கள் அழிக்கப்படும். 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் இடிக்கப்படவுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், சாலை அமைக்கத் தேவையான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை, மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கூட நடத்தாமல் அரசு அடக்குமுறையைக் கையாண்டு மேற்கொண்டு வருகிறது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராடும் போராளிகளையும், மக்கள் இயக்கங்களையும் கைது செய்து வருகிறது அரசு. இதற்கு முன்னூட்டமாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கூறியே மக்களை அச்சுறுத்தியும் வருகிறது காவல் துறை. தமிழக காவல் துறையின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இந்த நெருக்கடி நிலைகளைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். .
அரசின் அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சாமல் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எட்டு வழிச் சாலை: இன்னோர் ஆர்ப்பாட்டம்! எட்டு வழிச் சாலை: இன்னோர் ஆர்ப்பாட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.