சிறப்புக் கட்டுரை: திட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி!

சிறப்புக் கட்டுரை: திட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி!

சல்மா

என் வயதை ஒத்தவர்கள் எமர்ஜென்சியை எதிர்கொள்ளவில்லை. இன்றோ அக்குறையைப் போக்கக்கூடியவர்களாக நம்மை ஆள்பவர்கள் இருக்கிறார்கள். நெருக்கடி நிலை என்பது பலருக்கும் வரலாற்றின் ஏடுகளின் படிக்கும் வார்த்தை. ஆனால்,அந்த வார்த்தையின் அர்த்தத்தை நிகழ்காலத்தில் நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோம். ஆள்பவர்கள் உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அந்தத் திட்டத்தின் வழியே சென்னை - சேலம் இடையே பயணம் செய்யும் மக்களுக்கு ஓரிரு மணி நேரத்தை மிச்சப்படுத்தித் தருவதே தங்களது தலையாய கடமை என்கிற ரீதியில் அரசும் ஆட்சியாளர்களும் நடந்துகொள்கிறார்கள்..
அத்தனை விரைவாக சேலத்திலிருந்து சென்னைக்கோ, அல்லது சென்னையிலிருந்து சேலத்துக்கோ வரக்கூடிய மக்கள் என்ன தலைபோகிற காரியத்தை நடத்தப்போகிறார்கள் என்று யாருக்கும் புரியவில்லை.
தங்கள் நிலங்களைக் கையகப்படுத்த வரும் அதிகாரிகளிடம் மக்கள் கதறுகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள்.
பதிலுக்கு அந்த மக்களின் மீது அரசு தனது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது.
போராடுபவர்களை, மக்களோடு நிற்பவர்களை, ஊடகவியலாளர்களை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அரசு கைது செய்கிறது.
ஒரு நாட்டில் பொதுவாக எந்த ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அங்கே அந்தத் திட்டத்தால் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்த மதிப்பாய்வு (social assessment) என்பது முக்கியம்.
அரசும் திட்டங்களும் மக்களுக்கானவையே தவிர அரசின் நோக்கங்களுக்கானது அல்ல. இந்தப் புரிதலின் வழியேதான் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
நிலமுள்ளவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பா?
சில வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் நான்கு வழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிற்று. மக்களும் கலங்கிய மனதோடு தங்கள் நிலங்களைத் தந்தார்கள். போராட்டம் எதுவும் நடத்தவில்லை. காரணம், சாலையின் தேவையை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.
அதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அரசு தந்தபோது அரைகுறை மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.
என் தந்தை, தனக்குச் சொந்தமான தோட்டத்தையும் தென்னை மரங்களையும் கிணற்றையும் இழந்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டார்.
எங்களது தோட்டத்தினைப் பல ஆண்டுகளாக ஒரு குடும்பம் பராமரித்துவந்தது. அந்தக் குடும்பம் தான் குடியிருந்த குடிசையை இழந்து, நான்கு பிள்ளைகளுடன் தெருவில் நின்றது. எங்கே செல்வது எனும் வழியறியாது நின்றபோது அவர்களுக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க யாரிடமும் எந்தத் திட்டமுமில்லை. தாங்கள் அண்டியிருந்த நிலத்தையும் வாழ்ந்த வீட்டையும் விட்டுப் பஞ்சம் பிழைக்க நகரத்தின் தெருக்களுக்குள் மறைந்து போனார்கள்.
மாபெரும் அணைகளைக் கட்டும்போதும் திட்டங்களைத் தீட்டும்போதும் கோடிக்கணக்கான மக்கள் இப்படித்தான் அகதிகளாக மாறிப் போகிறார்கள். இவர்கள் அனைவருமே நிலத்தைச் சொந்தமாக வைத்திருந்தார்கள் என்பதில்லை. ஆனால், அந்த நிலத்தில்தான் அவர்கள் வாழ்வு இருந்தது. அதில்தான் அவர்கள் பிழைக்க வழி இருந்தது.
தங்கள் நிலங்களை, வசிப்பிடத்தை, வாழ்வை இழந்த பல்வேறு மக்களைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாது. நில உரிமையாளர்களுக்கு ஏதோ இழப்பீடு கிடைக்கும். ஆனால், அந்த நிலத்தைச் சார்ந்து தங்கள் வாழ்வாதாரங்களை அமைத்துக்கொண்டவர்களுக்கு இழப்பு மட்டுமே கிடைக்கும். இழப்பீடு கிடைக்காது.
இவர்களைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? திட்டங்கள் தீட்டும் அரசுக்கும் இவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த திட்டம் ஏதேனும் இருக்கிறதா?
இன்றைக்கு இந்த அரசு மிக முனைப்போடு சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறது. தவிர்க்க இயலாத தேவை ஏதும் அற்ற இந்தத் திட்டத்தின் மீது பெரும் கவனத்தைக் குவிக்கிறது. எந்த விலை கொடுத்தும் இதை நிறைவேற்றியே தீருவேன் என அடம்பிடிக்கிறது. போராட்டம் செய்பவர்களைப் பல விதங்களிலும் ஒடுக்குகிறது.
அழிந்துவரும் பசுமை
ஒரு நாட்டின் மொத்தப் பரப்பளவில் பசுமை 33 சதவிகிதம் இருந்தாக வேண்டும் என்பது விதி. தமிழ்நாட்டில் இருப்பதோ 17 சதவிகிதம் தான். தற்போது போடவிருக்கிற சாலையால் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு 5,789 ஏக்கர் விவசாய நிலங்கள், மரங்கள், எட்டு மலைகள், எண்ணற்ற குளங்கள், ஏரிகள், ஆறுகள் அழித்தொழிக்கப்பட இருக்கின்றன. ஏற்கெனவே அபாயக் கட்டத்தில் உள்ள நிலத்தடி நீர் இதனால் முற்றிலும் நாசமாகிவிடும்.
ஏற்கெனவே தேவையான மழை இல்லாமல், காவிரிப் பங்கீட்டினாலும் வஞ்சிக்கப்பட்டுக் காய்ந்து கிடக்கிறது நிலம். இந்த நேரத்தில் அதை மேலும் பாலையாக்க இப்படி ஒரு திட்டம்.
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கை சென்னை மற்றுமொரு மழைக்கால அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக எச்சரிக்கிறது. ஏரிகள், நீர் நிலைகள் அழித்தொழிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்போது எது அவசியம், அரசு தன் கவனத்தை எதில் செலுத்த வேண்டும் என்பது சிஏஜி மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால், எது அவசியம் என்பதை ஆள்பவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்கிறார்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வயதான மூதாட்டியாக இருந்தாலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள் என்பது நெருக்கடி காலத்தைப் போன்ற நடவடிக்கை. தங்களது முடிவுகளுக்கு எதிர்க்குரல் வரக் கூடாது என்கிற சர்வாதிகாரப் போக்கு.
இயற்கையை அழித்து, மக்களின் வாழ்வாதாரங்களைப் புறக்கணித்து, மக்களின் கண்ணீரைப் புறம்தள்ளி, பத்தாயிரம் கோடி செலவழித்துப் போடவிருக்கிற இந்தச் சாலைத் திட்டம் ஆள்பவர்களது ஆணவத்தையும் யதேச்சாதிகாரத்தையும் காட்டுகிறது. இந்தப் போக்கு இந்த ஆட்சியைச் சவக்குழியை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமும் இல்லை.
ஆனால், அப்படி நடப்பதற்கு முன்பு இந்தச் சாலை அமைக்கப்பட்டுவிட்டால் அதை ஜனநாயகத்தின் தோல்வியாகத்தான் பார்க்க முடியும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சல்மா கவிஞர், நாவலாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: tamilpoetsalma@gmail.com)
சிறப்புக் கட்டுரை: திட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி! சிறப்புக் கட்டுரை: திட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.