கருப்பு தங்கம் ஜமீலா - மு. உமர் முக்தார்



இரவு நேரம் கும்மிருட்டாக இருந்தது. விளக்கு அணைவதும் எரிவதுமாக இருந்தது. பத்து மணி தாண்டியும் பள்ளிவாசலில் விளக்கு எரிந்தது ஜமாத் கூட்டம் இருப்பதை உணர்த்தியது. நிர்வாகிகள் ஒவ்வொருவராக வந்தவண்ணம் இருந்தனர். சிலர் போனில் பேசிக்கொண்டே இருந்தனர். சிறிது நேரத்தில் தெருவை அடைத்துக்கொள்கிறது வரிசையாக நின்றிருந்த பைக். எல்லோரும் வந்து விட்டதால் ஜமாத் கூட்டம் கூடியது. இது குடும்ப பஞ்சாயத்து ஆகையால் ஊர் மக்கள் எல்லோருக்கும் அழைப்பில்லை; ஊர்கூட்டம் அல்ல அது. அதையும் தாண்டி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நிறையபேர் வந்துவிட்டார்கள்.  வந்தவர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பள்ளிவாசல் கேட்டை பிடித்துக்கொண்டு நின்றுக்கொண்டுருந்தனர். பல கதைகளை தங்களுக்குள் பேசிக்கொண்டனர். தலாக் பிரச்னை என்பதால் இளைஞர்களின் கூட்டம் மிகுதியாக இருந்தது. ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக்கொண்டனர். பெண் வீட்டு தரப்பிலும், மாப்பிள்ளை வீட்டு தரப்பிலும் தலா பத்து நபர்கள் வந்து அமர்ந்தனர். சிறிது நேரம் அமைதி நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சிலர் கீழே குனிந்துகொண்டு பாயில் உள்ள குச்சிகளை உடைத்துக்கொண்டு இருந்தனர். சிலர் செல்போனை நோண்டிக்கொண்டிருந்தனர்

"என்னப்பா எல்லோரும் வந்தாச்சா" 
"வந்தாச்சுங்க"
"ஆரம்பிக்கலாம்ங்க" குரல் வந்த மறுநொடி ஜமாஅத் தலைவர் காஜாமொகிதீன் ஆரம்பித்தார் "அஸ்ஸலாமு அலைக்கும். காதர் அலி மனு ஒன்னு கொடுத்துக்கிறாரு. தன்னோட பொண்ண தலாக் சொல்லி அம்மாவீட்டுக்கு அனுப்பிவிட்டதால ஜமாஅத் விசாரித்து முடிவெக்க கோரிக்கை வைச்சிருக்கார். ஏற்கனவே அவங்க ரெண்டு குடும்பத்துக்குள்ள பேசிருக்காங்க. எந்த முடிவும் வரல, அதான் இப்ப இங்க வந்திருக்காங்க" என்றார் ஜமாத் தலைவர்.

"முதலில் பொண்ணு வீட்டுக்காரங்கள பேச சொல்லுங்க" பின்னால் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த வயதான ஜமாத் நிர்வாகி ஒருவர் குரல் எழுப்பினார். எல்லோர் கண்ணும் பெண்ணுடைய அத்தா காதர் அலியின் பக்கம் திரும்பியது. காதர்அலி  ஸலாம் சொல்லி ஆரம்பித்தார். "நம்ம ஜமாத் தலைமையில் ஆறுமாசத்துக்கு முன்னதான் எம்பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. எம்பொன்ன சரியாவே வாழ வைக்கலங்க. கல்யாணம் ஆகி மொத மாசமே பிரச்சனை ஆரம்பிச்சிடுச்சி. இடையில் எங்க ரெண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசினோம். ஒன்னும் சரிப்படல. இப்ப அவரு பாட்டுக்கும் தலாக் சொல்லி அனுப்பி வைச்சிட்டாங்க. அவரும் துபாய்க்கு போய்ட்டாரு. எம்பொன்ன பத்தி தப்புத்தப்பா பேசுறாங்க. இதுக்கு நீங்கதாங்க நல்ல முடிவா சொல்லணும்" மனதில் இருந்த பாரங்களை வார்த்தைகளின் வழியாக இறக்கி வைத்தார். "ஏம்பா இதெல்லாம் நல்லா இருக்கா. கல்யாணம் பண்ணி ஒருமாசம்கூட வாழாம தலாக் சொல்லிட்டானே எதுக்குயா அவன் கல்யாணம் பண்ணுனான். இந்த பொண்ணோட வாழ்க்கையை நினைச்சு பார்த்திங்களா" ஜமாத் தலைவர் கோபம் கொண்டு வினவினர். "இருங்க அந்த பையன் தரப்புல விசாரிங்க, அதுக்குள்ளே ஏன் வாய உடுறீங்க" சிலர் பொங்கினர். குரல் வந்த திசையை நோக்கி தலைவர் முகத்தை திருப்பினார். விவகாரம் புடிச்சவைங்க எனத்தெரிந்து பின் அமைதியானார். 

"அந்த பொண்ண எங்களுக்கு பிடிக்கலங்க. எம் பையன் அந்த பொண்ணோட இனிமே வாழ மாட்டேன் என்று சொல்லி தலாக் சொல்லிப்புட்டான்" வேகமாகவே பதிலளித்தார் மாப்பிள்ளை உபைரின் தந்தை யாசின் அஹமது. "பொண்ணு கருப்புங்க. யாரும் கட்ட முன்வரல. நாங்கதான் போனாபோதுன்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டோம். தன்னாலேயே பேசிக்குது. தானாகவே சிரிக்குது. ஒரு வேலையும் செய்யமாட்டேங்குது. யாரையும் மதிக்க தெரில. அதனால்தான் எம் பையன் தலாக் சொல்லிட்டான். பொண்ணு சரியா இருந்தா பையன் ஏங்க இப்படி செய்யப்போறான்" ஜமீலா வின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

காதர் அலி இடைமறித்தார் "எம்பொண்ணு கருப்புன்னு இப்பதான் தெரிதுங்களா. இது அவங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியேதான் தெரியுமே. நேர்ல வந்து பார்த்துதான் பொண்ண புடிச்சிருக்குனு கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க. மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணுக்கிட்ட போன்லயும், வீடியோ கால்ளையும் பேசிக்கிட்டுதான் இருந்தாரு. அப்பவெல்லாம் இது தெரில்லங்களா. இவங்க சொல்லுற குற்றச்சாட்டுல எந்த உண்மையும் இல்லைங்க. அல்லாவோட பள்ளியில உட்கார்ந்து எம்பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்றாங்களே" என முடிக்கும் முன்பே வெடித்துவிட்டார் காதர் அலி. 

தன்னையறிமால் பீறிற்று வந்த கண்ணீரை தனது தோல்மீது இருந்த துண்டால் துடைத்துக்கொண்டார். பெண்ணின் தரப்பில் சிலர் பேசினார்கள். அவர்களின் மொழியில் வேகம் இல்லை. மாறாக மாப்பிள்ளை வீட்டு தரப்பில் பேசியவர்கள் அனைவரும் குரலை உயர்த்தியே பேசினார்கள். எல்லோருமே மாற்றி மாற்றி பேசினார்கள். ஜமீலாவின்மீது எப்படியாவது குற்றச்சாட்டுகளை அடுக்க வேண்டும் என துடித்தனர். அவர்களின் எண்ணமெல்லாம் இந்த தலாக்கை ஜமாத்தார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், தங்களுக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதே. அப்போதுதான் மாப்பிள்ளைக்கு வேறொரு கல்யாணம் செய்யமுடியும்.

ஜமீலா தரப்பில் பஞ்சாயத்தில் பேசுவதற்கு சில  சொந்தக்காரர்களை அணுகினார் காதர் அலி "நம்ம பொண்ண தலாக் விட்டுட்டாங்க. இன்னிக்கு நைட் பள்ளிவாசல்ல ஜமாஅத் கூட்டம் நீங்க வரணும்" என வேண்டினார். யாரும் அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. "நீ எதுக்கு இவனுக்கெல்லாம் பொண்ணு கொடுத்த. அப்போவே நாங்க சொன்னோ கேட்டியா" கண்களால் பேசினார்கள். கல்யாணத்துக்கு முன்பே சில பேச்சுக்கள் காதில் விழுந்தது. இவன் சரியில்லாதவன் இவனுக்கு பொண்ணு கொடுக்காதீங்கன்னு. அந்த நேரத்துல அதெற்கெல்லாம் காதர் அலி செவிகொடுக்கவில்லை. அப்போது அவருக்கு ஒரே நோக்கம் மட்டும்தான் இருந்தது. எப்படியாவது எம்பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடனும் என்பதுதான் அது. வயதும் 26 ஆகிவிட்டது. யாரும் பெண்கேட்டு வரவில்லை. அதனால் அவருக்கு வேறு இல்லை என்பதே எதார்த்தம்..

ஜமாத்தார்கள் பேசிப்பார்த்தார்கள். ஒண்ணும் வேலையாகவில்லை. மாப்பிள்ளை பக்கம் பேசியவர்கள் விடாப்பிடியாக இருந்ததால் ஜமாத் தலைவர் காஜாமொகிதீன் விழிபிதுங்கினார். கடைசியாக தலாக்கை அங்கீகரித்தனர் ஜமாத்தார்கள். திருமணத்தின் போது பெண்வீட்டின் சார்பாக தரப்பட்ட சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டார் திருப்பி தந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கும் மாப்பிள்ளை வீட்டார்கள் தரப்பில் இடைஞ்சல்கள்  தரப்பட்டன. ஜமாத் கடுமை காட்டிய பிறகு அதற்கு ஒப்புக்கொண்டனர். மாப்பிள்ளை செய்த தவறை கண்டிக்க அல்ல; சுட்டிக்காட்டக்கூட ஜமாத்தார்கள் முனையவில்லை. இதை கவனித்துக் கொண்டிருந்த பெண்ணின் சிச்சா இப்படி முணுமுணுத்தார் "பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, பேச தெரிந்தவனுக்கு ஒரு நீதி; பேச தெரியாதவனுக்கு ஒரு நீதி என்பதே பஞ்சாயத்தாக இருக்கிறது. யார் தலைவராக வந்தாலும் இதுமட்டும் மாறாமல் இருக்கிறது" 

நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்கு பிறகு பஞ்சாயத்து முடிந்தது. ஜமாத் தலைவர் ஸலாம் சொன்னவுடன் அனைவரும் எழுந்துகொண்டனர். கனத்த மனதுடன் வெளியே வந்தார் காதர் அலி. அப்பாடா என்று மலர்ந்த முகத்துடன் காணப்பட்டார் யாசின் அஹமது. இந்த செய்தியை தெரிவிப்பதற்காக துபையில் இருக்கும் தனது மகனுக்கு போன் போட்டு கொண்டிருக்கிறார். வெளியே நின்றுகொண்டு இருந்தவர்கள் செய்தி அறிந்து வருந்தினர். 

"இதெல்லாம் ஒரு தீர்ப்பா. கல்யாணம் பண்ணுவான்னா, ஒரு மாசம்கூட வாழ வைக்க மாட்டானா,அப்புறம் தலாக் சொல்லி வீட்டுக்கு அனுப்புவானா, இவனையெல்லாம் கட்டி வைச்சி அடிக்கணும்னுயா" ஒருவன் கூற 
"ஆமா நீ சொல்லிப்புட்ட ஜெயிலுக்கு போறது யாரு" என்றான் மற்றொருவன். விஷயம் தெரிந்தவர்கள் குபுக்கென்று சிரித்துக் விட்டனர்.

காதர் அலி உறவினர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டினுள் நுழைந்தார். அவரது வருகைக்காக இரவு 12.30 மணியாகியும் காத்திருந்தனர் வீட்டு பெண்கள். "என்ன நடந்தது" வினவினார் காதர்  அலியின் மனைவி சைலஜா. காதர் அலி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து முட்டத்தையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தார். அத்தா வந்துவிட்டதை அறிந்துகொண்டு தொழுதுகொண்டு இருந்த ஜமீலா வெளியே வந்தாள். "என்ன ஆச்சி, என்ன பேசினாங்க" சைலஜா மீண்டும் கேட்டாள். காதர் அலி நடந்தவற்றை வெளிப்படுத்த துவங்கினார். ஒன்றுவிடாமல் அனைத்தையும் கொட்டித்தீர்த்தார். தன்னுடைய ஆசை மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று அவரது மனம் குமுறியது. "ஜமாத்தும் கைவிட்டுவிட்டது" என்று அவர் முடிக்கும்போதே அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. அம்மாவின் தோளின்மீது சாய்ந்து கொண்டே அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள் ஜமீலா. "அவன் இல்லனா என்ன. அந்த அல்லா என்தங்கத்துக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தருவான்" ஜமீலாவை இருக்கக் கட்டியணைத்துக்கொண்டாள் சைலஜா.

அம்மாவின் பிடியிலிருந்து விலகி தனது ரூமிற்கு ஓடினாள். திறந்திருந்த கதவை தாப்பாள் இட்டாள். மடித்திருந்த முசல்லாவை விரித்து தனது நேசத்திற்குரிய அல்லாவை தொழுக ஆரம்பித்தாள். ரெண்டு ரெண்டு ரக்கத்துக்களாக தொழுதுகொண்டே இருந்தாள். நீண்ட நேரம் சஜ்தா செய்தாள். இருகரம் கூப்பி தனது அல்லாவிடம் துவா கேட்டாள். அழுத்தி வைத்திருந்த துக்கம் பீச்சென  வெளியேறியது. அவளது மெலிந்த உடல் நனைந்திருந்தது. அழுகையின் குரல் அந்த ரூமை தாண்டியும் வெளியேறியது.
"அழாத ராஜா கதவ திற" சைலஜா கதவை தட்டினாள்.
"நீ கருப்பு இல்லடா என் கருப்பு தங்கம்,கதவ திற என் தங்கம்"  காதர் அலி  சொல்லியவாறே ஜன்னலை திறந்து பார்த்தார்.
ஜமீலா காதில் வாங்கிக்கொள்ளாமல் துவா கேட்டுக்கொண்டிருந்தாள். 
 "அல்லாவே உன்னைத்தானே நம்பினேன். நீதானே என்ன படச்ச என் வாழ்க்கையை நீயே இப்டி ஆக்கிட்டியே. நான் என்ன தப்பு செஞ்சேன்.
வறுமையால அத்தாவும் கைவிட்டுட்டாரு 
என்ன கட்டுனவுண கைவிட்டுட்டான் 
என் சமுதாயமும் கைவிட்டுடுச்சி
நீயும் என்ன கைவிடப் போறியா அல்லா" ஜமீலா கதறினாள். 
விளக்கு மீண்டும் அணைந்தது.

- மு. உமர் முக்தார்
கருப்பு தங்கம் ஜமீலா - மு. உமர் முக்தார் கருப்பு தங்கம் ஜமீலா - மு. உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 06:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.