லஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்! _ எஸ்.டி.பி.ஐ அழைப்பு!

லஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுக்குறித்து சென்னையில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி அளித்த பேட்டியில் கூறியதாவது;
சமீப காலங்களில் தினமும் லஞ்ச ஊழல் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடைநிலை ஊழியர் முதல்,  அரசு உயர் அதிகாரிகள் வரை மக்கள் சேவைக்காக லஞ்சம் பெறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அலுவலகங்கள்,  காவல் நிலையங்கள்,  தாலுகா அலுவலகங்கள்,  கிராம நிர்வாக அலுவகங்கள்  தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இதேபோன்று அரசின் திட்ட ஒதுக்கீடுகள்,  கணிம சுரங்கங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றிலும் பல ஆயிரம் கோடி ஊழல்,  முறைகேடுகள் குறித்த செய்திகள் வருவதும் அதில் அரசு நிர்வாகம் மற்றும் ஆட்சியாளர்களின் தொடர்புகள் குறித்த செய்திகளும் கவலையை அளிக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் இத்தகைய ஊழல் முறைகேடுகளே நாட்டின் முனேற்றத்துக்கும்,  வறுமையை ஒழிப்பதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஆதர்ஸ்,  நிலக்கரி,  ஸ்பெக்ட்ரம், சவப்பெட்டி முறைகேடுக்கு இணையாக தமிழகத்திலும் காவல்துறை அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள்,  மணல் குவாரிகள்,  தாதுமணல் அள்ளுவதில், கிரானைட் சுரங்கங்களில், ஆவின் பாலில் என பல்வேறு வகையான முறைகேடுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் நாள் தோறும் பெருகி கொண்டிருக்கின்றன. இந்த ஊழல் முறைகேடுகள் ஆளும் வர்க்கங்களின் துணையுடனேயே நடைபெறுவதால் இதனை விசாரிக்கும் புலனாய்வுத் துறையால் உண்மைகள் மறைக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டு விடுகிறது.
இத்தகைய ஊழல், முறைகேடுகள் அரசு நிர்வாகத்தின் தலையீடு இன்றி சுந்திரமாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மேற்கொண்டு இதுபோன்ற ஊழல் முறைகேடுகளை தடுக்க இயலும்.
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டப் பிரிவு 63-இன் படி, 2014 ஜனவரியில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் முதல் ஓர் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மூலமாகவும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு தரசு இதுதொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆகவே தமிழகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த லோக் அயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான அழுத்தத்தை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்தக் கோரியும், தமிழகத்தில் லோக் அயுக்தாவை அமைக்க வேண்டும் எனக்கோரி மார்ச் 03 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டங்களையும், மார்ச் 12 ஆம் தேதி ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களையும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்துகிறது. இறுதியாக மார்ச் 20 ஆம் தேதி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டமும் நடத்தவுள்ளது. லஞ்ச, ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு வலுசேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை நடுத்தர மக்களை புறக்கணிக்கும் பட்ஜெட்:
2015-16 ஆம் ஆண்டுக்கான மத்திய பாஜக அரசின் பொது பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும், நடுத்தர ஏழை மக்களுக்கு பெரும் சுமையை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அடித்தட்டு சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், வளர்ச்சி என்ற பெயரில் தனியார் பெரு முதலாளிகளுக்கு சாதமாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும்தான் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களின் நலனுக்கான ஒதுக்கீட்டு நிதியில் கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே அடிப்படை நிலைகளில் பின்தங்கி இருக்கும் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் ஏற்றம் என்பது தற்போது குறைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.
சேவை வரி, கலால் வரி உயர்வுடன் புதிதாக 2 சதவீத தூய்மை இந்தியா செஸ் வரி அறிவிப்பானது சாமானிய மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்ப்படுத்தும். ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட ரயில் சரக்கு கட்டண உயர்வுடன் இந்த புதிய வரிவிதிப்புகளும் சேர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக நடுத்தர ஏழை மக்களே பெருமளவு பாதிக்கப்படுவார்கள். மொத்தத்தில் மத்திய அரசின் ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஏழை, எளிய நடுத்தர மக்களை புறக்கணித்து விட்டு தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம் கூடாது:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகள் நியமனத்தில் எல்லா சமூக மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஆனால் நீதிபதிகள் நியமனக்குழு பரிந்துரை பட்டியலில் தகுதியுள்ள சிறுபான்மை சமூக பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது பாரபட்சமுடையதாகும். இது கண்டிக்கத்தக்கது. ஆகவே பாரபட்சம் காட்டாமல் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி எல்லா சமூக மக்களுக்கும் உரிய பிரதிந்தித்துவம் வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி நீதித்துறையை கேட்டுக்கொள்கிறது.

மதுவிலக்கு:
மதுவினால் ஏற்படும் விபத்துக்கள், மரணங்கள், சமூக தீங்குகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களை பாதுகாக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது. பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தாவிட்டாலும் அண்டை மாநிலமான கேரளாவைப் போன்று படிப்படியாக மது பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு சமூக தீங்குகள் மற்றும் குற்றங்களுக்கு மது அடிப்படை காரணமாக இருந்த போதிலும், வருவாய் ஈட்டும் நோக்கில் டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அரசே தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. ஆகவே மக்கள் நலனில் அக்கறைகொண்டு மாற்று வழியில் வருவாய் திரட்டி மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக்கொள்கிறது.
மதவெறி சக்திகளை கட்டுப்படுத்து:
மத்தியில் பாஜக அரசு அமைந்த பின் நாடு முழுவதும் மதவெறி சக்திகளின் சிறுபான்மை சமூக மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சர்ச்சுகள், மசூதிகள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றன. இந்த மதவெறி சக்திகள் அமைதிப் பூங்காவான தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இந்த மதவெறி சக்திகள் தமிழகத்தின் குமரி, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தங்களின் வன்முறை செயல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆகவே தமிழக அரசு மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய மதவெறி சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேட்டியில் தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.
லஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்! _ எஸ்.டி.பி.ஐ அழைப்பு! லஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்! _ எஸ்.டி.பி.ஐ அழைப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 20:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.