ஹாஷிம்புரா:இரத்தத்தை உறைய வைக்கும் அந்த படுகொலைகளை மறக்க முடியுமா?

இந்திய தேசத்தின் நீதிமறுப்பின் மறு உருவமாக முஸ்லிம் சமுதாயம் திகழ்ந்து வருகிறது.பாபரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை, மும்பை இனப்படுகொலை, அஸ்ஸாம் நெல்லி…. என தொடரும் நீதி மறுப்பின் வரிசையில் 28 ஆண்டுகாலமாக காத்திருந்த ஹாஷிம்புரா கூட்டுப்படுகொலை வழக்கும் இணைந்துள்ளது.
அண்மையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்றும் போதுமான ஆதாரங்களும் இல்லை என்றும் கூறி அனைவரையும் விடுதலைச் செய்ய உத்தரவிட்டார்.இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் நீதிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்குக் குறித்து ஒரு விரிவான அலசல்:
1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் பொழுது பாபரி மஸ்ஜிதிற்குள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமனின் சிலையை வழிபட இந்துக்களுக்கு பள்ளிவாசலின் கதவை திறந்து விட்ட பிறகு அவ்வாண்டின் ஏப்ரல்,மே மாதங்களில் டெல்லி மற்றும் உ.பி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் உச்சகட்டத்தை அடைந்தன.
அச்சமயம் உ.பி மாநிலம் மீரட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. மே 24 மீரட்டின் ஹாஷிம்புராவில் உ.பி.மாநில ஆயுதப்படையான Provisional Armed Constabulary ஐச் சார்ந்த 19 போலீசார், கமாண்டர் சுரேந்திர பால் சிங் தலைமையில் தினக்கூலிக்கு வேலை செய்துவந்த 50 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் ஒரு ட்ரக்கில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.
தாங்கள் போலீஸ் ஸ்டேசனுக்குத்தான் கொண்டுச் செல்லப்படுகிறோம் என்று அந்த அப்பாவி இளைஞர்கள் நம்பினர். ஆனால் அந்த இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டதோ முராத் நகருக்கு அருகிலிலுள்ள கங்கை கால்வாய்க்கு.
கால்வாய்க்கு அருகில் நிறுத்தப்பட்ட இளைஞர்களை கொடூர மனம் படைத்த PAC படையினர் அநியாயமாக ஒவ்வொருத்தராக சுட்டுத்தள்ளி கங்கைக் கால்வாயிலும் அருகிலிலுள்ள ஹிண்டன் கால்வாயிலும் வீசியெறிந்தனர்.
சுதந்திர இந்தியாவில் ஒரு போலீஸ் படை நடத்திய மிக மோசமான கூட்டுப் படுகொலைதான் ஹாஷிம்புரா படுகொலைகள்.3
ஆனால் சுட்டுத் தள்ளப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் தப்பிப் பிழைத்த நான்குபேர் இப்படுகொலைகளை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தனர்.
உயிர் பிழைத்த சிராஜுத்தீன் என்ற இளைஞர் படுகொலை நடந்த மறுநாள் முராத் நகர் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று சம்பவத்தை விவரித்தார். தப்பிப் பிழைத்த வேறு இருவர் உ.பி. மாநிலத்தின் இரண்டு போலீஸ் ஸ்டேசன்களுக்குச் சென்று எஃப்.ஐ.ஆர் ஐ பதிவுச் செய்தனர்.
குண்டடிப்பட்டும் மரணிக்காத இருவர்தான் இவ்வழக்கின் நேரில் கண்ட சாட்சிகள். ஒவ்வொரு இளைஞராக சுட்டுக்கொன்ற PAC படையினர் அவர்களை கால்வாயில் தள்ளி துப்பாக்கியின் பேனட்டுகளைக் கொண்டு குத்தி தாழ்த்திய அதிர்ச்சிகரத் தகவல்களை நீதிமன்றத்தில் விவரித்தனர். சம்பவம் நடந்து சிறிது காலத்திற்கு பிறகு உ.பி.அரசு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் நஷ்ட ஈடு வழங்கியது. பின்னர் மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் முயற்சியின் பலனாக சுப்ரீம் கோர்ட் மேலும் 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இச்சம்பவத்தைக் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1988 ஆம் ஆண்டு விசாரணையைத் துவக்கிய சி.ஐ.டி குற்றப்பத்திரிகையை 1994 ஆம் ஆண்டில் சமர்பித்தது.
தொடர்ந்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக காஸியாபாத் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பிய போதிலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரிக்குமிடையே ஆறு தடவை ஜாமீன் அனுமதிக்கும் வாரண்டும், 1998 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் 2000-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குமிடையே 17 தடவை ஜாமீன் அனுமதிக்காத வாரண்டும் அனுப்பிய பிறகும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்தியாவில் நடந்த அசாதாரணமான சம்பவமாகும் இது.
தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தலையிட்டதன் விளைவாக குற்றவாளிகள் 19 பேரில் 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் காஸியாபாத் நீதிமன்றம் 16 பேருக்கும் ஜாமீன் வழங்கியது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசுப் பணியாளர்களாகயிருப்பதால் அவர்கள் தப்பி ஓடமாட்டார்கள் என்பது நீதிமன்றத்தின் வாதமாகும்.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வழக்கு காஸியாபாத் நீதிமன்றத்திலிருந்து டெல்லி தீஸ்ஹஸாரி நீதிமன்றத்திற்கு 2001 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை வேகமாக நடத்தவேண்டுமென்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவாகும்.
ஆனால் உ.பி.அரசு, அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்காததால் வழக்கு கவனத்தில் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு அவ்வழக்கைக் குறித்து விருப்பமில்லை.
இதனால் மீண்டும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு புதிய நபரை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்க உத்தரவிட்டது. ஆனால் புதிய நபருக்கு எந்தவொரு முன் அனுபவமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வழக்கு விசாரணைத் துவங்கியது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ வழக்கை படிக்கக்கூட இல்லை.
இதனைத் தொடர்ந்து அடிசனல் செசன்ஸ் நீதிபதி எம்.பி.கவுசிக் அரசுதரப்பு வழக்கறிஞரை கடுமையாக விமர்சித்தார். சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின்னர் தீஸ் ஹஸாரி நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றத்தை பதிவுச் செய்தது.
இப்படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினமான 2010-ஆம் ஆண்டில், கொல்லப்பட்ட முஸ்லீம்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 காக்கிச் சட்டை கிரிமினல்கள் பற்றி சில தகவல்களை அளிக்குமாறு, உ.பி. மாநில லக்னோ போலீஸ் அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். ஹாஷிம்புரா படுகொலையை விட, அப்படுகொலையில் தொடர்புடைய 19 போலீசார் பற்றி உ.பி. மாநில அரசு அளித்திருக்கும் தகவல்கள்தான் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
இப்படுகொலை அம்பலமானவுடனேயே,அது பற்றி ‘சி.பி.சி.ஐ.டி’ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசாரணையில், 19 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், அந்தப் போலீசாரின் பணி குறித்த பதிவேட்டில் (Service Register), இக்கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, படுகொலை நடந்த 1987ஆம் ஆண்டில், போலீசாரின் பணி குறித்து தயாரிக்கப்பட்ட வருடாந்திர இரகசிய அறிக்கையில், ‘அவர்கள் அந்த ஆண்டில் (1987) மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட இந்த 19 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை.எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து 1995இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், 19 போலீசாரும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர். ‘அவர்களின் சேவை உ.பி. அரசிற்குத் தேவைப்படுகிறதென்றும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், போலீசாரின் குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டதைத் தடுக்கும் முகமாகத்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும்’ காரணம் கூறப்பட்டுள்ளது.
இப்படுகொலையோடு தொடர்புடைய மற்ற போலீஸ் அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்படுகொலை பற்றிய சி.ஐ.டி போலீசாரின் விசாரணை அறிக்கையை வெளியிட மறுத்து வந்தது உ.பி. அரசு.
கொலைக் குற்றவாளிகளுக்கு இதற்கு மேல் ஒரு அரசினால் என்ன பாதுகாப்பு வழங்கிவிட முடியும்?
வழக்கை டெல்லி தீஸ் ஹஸாரிக்கு மாற்றி பல வருடங்கள் கழித்தும் கூட்டுப் படுகொலையிலிருந்து தப்பித்த சுல்ஃபிகார், முஹம்மது நயீம், சிராஜுத்தீன், அப்துல் கஃபார், அப்துல் ஹாமித், போலீஸ் அதிகாரியான ஜி.எல்.சர்மா ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவுச்செய்யும் நடவடிக்கை மட்டும்தான் நடந்தது.
25 ஆண்டுகள் கழித்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பேர்(மீதமுள்ளவர்கள் இறந்துவிட்டனர்) நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள்.
mu
இத்தீர்ப்பிற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
- See more at: http://www.thoothuonline.com/archives/71846#sthash.zV9Ls93B.dpuf
ஹாஷிம்புரா:இரத்தத்தை உறைய வைக்கும் அந்த படுகொலைகளை மறக்க முடியுமா? ஹாஷிம்புரா:இரத்தத்தை உறைய வைக்கும் அந்த படுகொலைகளை மறக்க முடியுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 06:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.