வாருங்கள் போராடுவோம், இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்கு!
நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்தத்திற்கெதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று 14 எதிர்கட்சிகள் சேர்ந்து இதற்காக மிகப்பெரிய பேரணியை நடத்தி, குடியரசு தலைவரையும் சந்தித்து இந்த சட்ட திருத்ததிற்கெதிராக முறையிட்டி ருக்கிறார்கள்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2013 ம் ஆண்டு இதுபோல நிலம் கையகப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. விவசாயிகளும், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்த்ததின்பேரில் காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தில் நிலம் கையகப்படுதுவதற்கு சில நிபந்தனைகளை விதித்தது.
நிலம் கையகப்படுத்தும்போது 80% மக்கள் ஆதரவளித்தால் மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலத்திற்கு இழப்பீடு தொகை சந்தை மதிப்பை விட 4 மடங்கு உயர்த்தி தரவேண்டும். நிலம் கையகப்படுத்தி 5 வருடம் ஆகியும் எந்த தொழிற்சாலையும் தொடங்கவில்லை என்றால் அந்த நிலம் உரியவர்களிடமே திருப்பி தர வேண்டும் என்று சில நிபந்தனைகளை சேர்த்தது காங்கிரஸ்.
இந்த சட்டத்தில் தான் நிலம் எடுக்க 80% மக்களின் விருப்பம் தேவையில்லை எனவும், நிலம் எடுத்து பல வருடங்கள் ஆகியும் எந்த தொழிற்சாலையும் தொடங்கவில்லை என்றாலும் நிலம் திருப்பி தர தேவை இல்லை என மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த நிபந்தனைகளை திருத்தி இருக்கிறார் மோடி.
இந்த சட்ட திருத்தத்தின் பேரில் தனது நிலத்தை யாரும் விற்க விரும்பாவிட்டாலும் அவர்களின் ஒப்புதலின்றி அரசு படைபலம் மூலம் அபகரித்து தனியார் முதலாளிகளுக்கு கொடுப்பார்கள். இந்த மோசடியை அறிந்தனால்தான் பல்வேறு விவசாயிகளும், பொதுமக்களும் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். ஊழலுக்கெதிராக போராடிய அண்ணா கசாரே “இந்த சட்ட திருத்ததிற்கெதிராக இரண்டாவது சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும்” என்று போராடி வருகிறார்.
மோடி அரசு அமைந்தது முதல் எந்த கருத்தும், போராட்டமும் நடத்தாத அண்ணா கசாரே இந்த சட்ட திருத்தத்தினால் நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து இருப்பதால் தான் இன்று பல்வேறு மாநிலங்களுக்கு சென்று போராடி வருகிறார்.
இந்த சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தபோது எதிர்த்த அதிமுக இன்று ஆதரிக்கிறது. இது அதன் இரட்டை நிலையை வெளிச்சம் போட்டு காட்டியிள்ளது. இந்த சட்டதிருத்தத்தை எதிர்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தபடுகிறார்கள்.
வளர்ச்சி வளர்ச்சி என்று கூவுபவர்கள் அது யாருக்கான வளர்ச்சி என்று கூற மறுக்கிறார்கள். ஏற்கனவே தனியார் கார்பரேட் முதலாளிகளும், பல மாநில அரசுகளும் தொழில்தொடங்குவதற்காக என்று பல லட்சகணக்கான நிலங்களை கைப்பற்றி வைத்துள்ளார்கள்.
மும்பை தொழில் வளர்ச்சி கழகம் மட்டும் 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை இன்னும் பயன்படுத்தாமல் வைத்துக்கிறது. மகாராஸ்டிராவில் 2006 ம் ஆண்டிலேயே 1250 ஹெக்டேர் வளைத்து போட்டுள்ளார் முகேஷ் அம்பானி. இதுவரைக்கும் அங்கு அவர் தொழில் தொடங்கவில்லை.
நொய்டா பகுதியில் விவசாயிகளிடமிருந்து ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு தரப்பட்ட விலை ரூ. 820. ஆனால் அங்கு தொழில் தொடங்காமல் ரியல் எஸ்டேட் நிலங்களாக ஆக்கி ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ. 35000 விற்கப்பட்டுள்ளன. இதுபோல இந்தியா முழுவதும் தொழில் தொடங்குவதற்காக என்று நிலத்தை கையகப்படுத்தி ரியல் எஸ்டேட் தொழில் கொள்ளை அடிக்கத்தான் இந்த சட்டம் பயன்படும்.
“ஒரு மனிதன் அனைத்து சாம்ராஜ்யங்களை அடைந்தாலும் கடலுக்கு அப்பால் உள்ள நிலத்தையும் அடைய நினைப்பான்” என்றார் புத்தர். அதுபோல இந்த நாட்டில் ஏழை விவசாயிகளின் நிலங்களை எவ்வளவோ கொள்ளையடித்து வைத்திருந்தாலும், இன்னும் பிடுங்க நினைக்கிறார்கள் தனியார் முதலாளிகளும், மோடியும்.
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு எதிராக தனது அரசை நடத்தி வருகிறார். ரயில்வே துறையில் அந்நிய முதலீடு, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு, கட்டுமான துறையில் அன்னிய முதலீடு, நமது கடல் வளத்தில் அன்னிய கம்பெனிக்கு மீன் பிடிக்கும் உரிமை என தொடர்ந்து இந்த நாட்டின் வளங்களை தனியார் கார்பரேட் முதலாளிகளுக்கு வழங்குவதில் அக்கறை கட்டிவருகிறார்.
முதலீடுகளை திரட்டுகிறோம் என்கிற பெயரில் பொதுத்துறை நிருவனங்களை தனியாருக்கு விற்றும் வருகிறார்கள். இன்னும் இந்தியா விற்பனைக்கு என்று போர்டு மட்டும்தான் வைக்கவில்லை.
மோடி பதவிக்கு வந்ததிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பன்றி காய்ச்சலினால் ஆயிரகணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனால் இதற்காகவெல்லாம் அவசர சட்டம் கொண்டு வராத மோடி. தன்னை ஆட்சி கட்டிலில் அமர வைத்த தனியார் கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கிறது.
“பெரும்பாலான மக்கள் துயரங்களிலும், வழிகளிலும் சிக்கி கிடக்கிறார்கள். நவீன முதலாளித்துவ சமூகத்தில் மக்கள் அன்னியப்படுதப்படுகிறார்கள்”. என்று மார்க்ஸ் அன்றே சொன்னார். அதுதான் இன்று இந்தியாவில் மோடி அரசில் நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவன் ஏழையாக பிறந்ததற்கு அவன் காரணமல்ல. அவன் ஏழையாகவே வாழ்வதற்கு அரசும், முதலாளிதுவமும்தான் காரணமாகும். இந்த நாட்டில் ஏழைகளுக்கும், முதலாளிகளுக்கும் இடைவெளி அதிகரித்துகொண்டே போகிறது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இது இன்னும் அதிகரிக்கும்.
ஆகவே தோழர்களே! இப்போது நடைபெற்று கொண்டிருக்கிற மோடி அரசு பாட்டாளி மக்களுக்கான அரசு அல்ல. தனியார் முதலாளிகளின் கைக்கூலி அரசு.
இந்த கைக்கூலி அரசை அகற்ற ஒன்றிணைந்து போராடுவோம்!
போராடினால் எவ்வளவு பெரிய சர்வாதிகாரிகளையும் வீழ்த்தலாம்!!
வாருங்கள் போராடுவோம், இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்கு!
- வி.களத்தூர் பாரூக்
வாருங்கள் போராடுவோம், இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்கு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:58:00
Rating:
No comments: