ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதாகும்! – பாப்புலர் ஃப்ரண்ட்
திண்டுக்கல் : ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் M.முகம்மது சேக் அன்சாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச்செயலாளர் M.முகம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்துகொண்டார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதாகும் :
நமது தேசம் ஜனநாயக குடியரசு என்ற நிலையிலிருந்து விலகி சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கும் மோசமான சூழல் உருவாகி வருகிறது. அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும், ஜனநாயக அடிப்படையில் நடைபெறக்கூடிய போராட்டங்களுக்கு தடை விதிப்பதும் வன்மையாக கண்டிக்கதக்கதாகும். சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கைதுசெய்யப்பட்டது, பார்வையற்றோர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் காவல்துறையை கொண்டு அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்துவது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, ஜனநாயக அடிப்படையிலான பேரணி மற்றும் பொதுக்கூட்டதிற்கு அனுமதி மறுப்பது என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற ஜனநாயக படுகொலைகளை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு இதற்கெதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது.
2. மத துவேச கருத்துகளை வெளிப்படுத்தும் பா.ஜ.க.வினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் :
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்கு பின் பா.ஜ.க-வினரும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களும் தொடந்து மத துவேச கருத்துக்களை வெளியிட்டு வருவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும். சமீபத்தில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணிய சாமி கோவில்களில் மட்டுமே கடவுள் இருப்பதாகவும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் கடவுள் இல்லை எனவும் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் வெறும் கட்டிடங்கள் தான் அவற்றை இடிக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற மத துவேச கருத்துகளை கூறுவது நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். எனவே இது போன்ற மத துவேச கருத்துகளை வெளியிடும் பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.
3. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் :
மத்திய பா.ஜ.க ஆட்சி நாட்டு மக்களின் நலனுக்கான ஆட்சி என்பதிலிருந்து மாறி கார்பரேட் நிறுவனங்களின் நலனுக்கான ஆட்சி என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதா சர்வாதிகார தன்மையோடு நாட்டு மக்களின் நிலங்களை பிடுங்கிகொள்ளும் தன்மை கொண்டது. இதன் மூலம் மக்களின் விவசாய நிலங்கள் எல்லாம் அவர்களின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டு, கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும். இது போன்ற கடுமையான சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. மத்திய பா.ஜ.க.வின் இதுபோன்ற கடுமையான சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது என்பது பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவு அளித்ததற்கு எதிரானதாகும். இது போன்ற நிலை மீண்டும் தொடருமானால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகுட்டுவார்கள். மேலும் மக்களுக்கு விரோதமான இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
4. பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:
பன்றிக் காய்ச்சலால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். தற்போது தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
5. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதும் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டு கொல்வோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்று உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்திய பிரதமர் மோடி இலங்கை பயணத்தின் போதே, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பதும் அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதும் பா.ஜ.க அரசு இலங்கையுடன் கொண்டுள்ள உறவின் வெளிப்பாடாகவே உள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களின் நலனுக்கே எதிரான செயல். எனவே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கவும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதாகும்! – பாப்புலர் ஃப்ரண்ட்
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:55:00
Rating:
No comments: