வட்டி… (சிறுகதை)
“ஏற்கனவே வாங்கிய பணத்திற்கே இன்னும் வட்டி கட்டல அதுக்குள்ளே இன்னும் பணம் கேட்குறே” என்று முத்தலிப் கோபமாக பேசினார். “வட்டிக்கு பணம் வாங்க பல பேரு இருக்காங்க. அங்கெல்லாம் சரியா வட்டி கட்டுவாங்க உன்னமாதிரி இல்ல”. என்று பொங்கினார்.
“அடுத்தமுறை கண்டிப்பா சேத்து வட்டி கட்டிற்றேன்” என்று அப்துல்லா சமாதானம் கூறி பணத்தை வாங்கினார்.
அப்துல்லா சாதாரண குடும்பத்தை சேர்ந்த கூலி வேலைக்கு செல்பவர். அவர் மனைவி கதீஜா உடம்பு சரியில்லாதவர். அவருக்கு ஒரே மகள் ஆயிஷா. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவளுடைய படிப்பிற்காகதான் வட்டிக்கு பணம் வாங்கி வந்தார் அப்துல்லா.
ஆயிஷா புத்திசாலி பெண், நன்றாக படிப்பவள், மார்க்க விசயத்தில் தீவிரமாக பின்பற்றுபவள். பெரிய படிப்பு படித்து அரசு வேலையில் சேர்ந்து தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியம் உள்ளவள்.
அப்துல்லாவிடம் “ஏன்யா ஓ புள்ளைய படிக்க வைக்கற. அவ படிச்சி என்ன செய்யபோறா?”. என்று பலரும் கூறுவார்கள். அப்துல்லா இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவருக்கு ஆயிஷா வின் விருப்பம்தான் முக்கியம்.
தனது அத்தா வட்டிக்கு பணம் வாங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை. “அத்தா நீங்க வட்டிக்கு பணம் வாங்காதீங்க, வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது”. என்று எத்தனையோ முறை கூறிவிட்டாள்.
அப்போதெல்லாம் “தெரியும் ஆயிஷா என்னப்பண்றது, நமது குடும்பத்தை ஓட்டவும், உன்னை படிக்க வைக்கவும் எனக்கு வேறு வழி தெரியல” என்பார் அப்துல்லா.
“இல்லத்தா நமதூர்ல பல அமைப்புகள் வட்டி இல்லாம கடன் தருகிறார்களே.” என்று ஆயிஷா சொன்னாள்.
அதற்கு அப்துல்லா “ஏற்கனவே அங்கேதாம்மா உன் அம்மா நகையை வச்சு பணம் வாங்கினேன். ஆனா அவங்களால நம்ம தேவைக்கு தர முடியலையே. முத்தலிப் பாயின்னா, வட்டியா இருந்தாலும் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாரு. அதனாலதான் ஊர்ல பல பேரு அவர்கிட்ட வட்டிக்கு பணம் வாங்குறாங்க” என்றார்.
“நமதூர்ல பல பணக்காரர்கள் இருக்காங்களே, அவங்க நம்மள மாதிரி ஏழைகளுக்கு உதவ மாட்டாங்களா? என்று அப்பாவியாக கேட்டாள்”. பாவம் அவளுக்கு பெரிய பணக்காரர்களிடம் பெரிய மனது இல்லை என்பது தெரியாது போல.
ஒருநாள் அப்துல்லாவிற்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டது. அதனால் அவர் வேலைக்கும் போகவில்லை. வட்டியும் கட்டவில்லை. முத்தலிப் கோபமாக வட்டி காசை கேட்க வீட்டிற்கே வந்துவிட்டார்.
நிலைமையை உணர்ந்த ஆயிஷா தனது படிப்பை நிறுத்திவிட்டு எதாவது வேலைக்கு போகலாமா என்று சிந்திக்க தொடங்கினாள். தனது விருப்பத்தை அப்துல்லாவிடம் தெரிவித்தால். ஆனால் அப்துல்லா இதற்கு சம்திக்கவில்லை.
இரண்டு நாளில் அப்துல்லா உடல் சரியாகி வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்.
ஆயிஷாவிற்கு அது தேர்வு நேரம், இரவு நேரங்களில் கண் விழித்து படித்துகொண்டிருந்தாள். மீண்டுமொரு நெருக்குதல் அந்த குடும்பத்திற்கு. கதீஜாவிற்கு மீண்டும் உடம்பு சரியில்லை. மருத்துவ செலவிற்கு காசும் இல்லை.
ஆயிஷாவின் தேர்வுக்கு பணம் கட்ட வேண்டும். அதை அப்துல்லாவிடம் சொல்ல காத்திருந்தால். வெகுநேரமாகியும் அப்துல்லா வரவில்லை. இரவு 2 மணிக்கு தான் வந்தார்.
லேட்டாக வந்ததுக்கு தனது தந்தையிடம் காரணத்தை வினவினாள் ஆயிஷா. “ஏனத்தா இவ்ளோ நேரம். எங்க போனிங்கே?.
“அது ஊர்ல ஒரு ஜமாஅத் கூட்டமா அதுமுடிய ரொம்ப லேட்டாகிவிட்டது”. என்றார் அப்துல்லா.
ஆயிஷா “தனக்கு தேர்வு வந்து விட்டது. தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னாள்”.
“அப்படியா, இப்போது யாரிடம்மா பணம் கேட்பது பலரிடமும் பணம் வாங்கியாகிவிட்டதே”. என்று புலம்பினார் அப்துல்லா.
“ஏன்தா ஜமாஅத் கூட்டம்னு சொன்னீங்களே. அங்கே நமது குடும்ப சூழ்நிலை சொல்லி உதவி கேட்கலாம்ல” என்று கேட்டால் ஆயிஷா.
அவளை மேலும் கீழுமாக பார்த்த அப்துல்லா “ஏம்மா ஜமாஅத் கூட்டத்துல நம்மள மாதிரி ஏழைகள பத்தில்லாம் எங்கம்மா சிந்திகிறாங்க, அப்படி சிந்தித்தா தான் நமதூர்ல ஏழைகளே இருக்கமாட்டங்களே”. யாரும் வட்டிக்கும் பணம் வாங்க மாட்டாங்க”.
“அப்பா என்னதான் அங்க பேசுவாங்க”. என்று ஆயிஷா ஆர்வமாக கேட்டால்.
“ஏதாவது சின்னசின்ன பிரச்னை வச்சி ரெண்டு மூணு குரூப் சண்ட போட்டுக்குவாங்க. அவங்கள விளகுறுதே பெரிய பஞ்சாயத்தா இருக்கும். அதனாலதான் இன்னிக்கு 2 மணி ஆகிடிச்சி”. வேதனையுடன் சொன்னார் அப்துல்லா.
இதைகேட்ட ஆயிஷா தூங்காமல் நீண்ட நேரம் இதைபற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.
மறுநாள் பணத்தை எப்படியோ புரட்டி எழுதிவிட்டு மாலை வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாள். அப்போது சில இளைஞர்கள் வட்டிக்கு எதிராக மைக்கில் சத்தமாக பேசிகொண்டிருந்தனர்.
“வட்டியை ஒழிப்பதற்காக எந்த ஒரு செயல்திட்டங்களும் இல்லாமல் வெறும் பிரச்சாரத்தால் மட்டுமே வட்டி ஒழித்துவிட முடியுமா?“ என்று மனதில் நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் ஆயிஷா.
- வி.களத்தூர் பாரூக்.
வட்டி… (சிறுகதை)
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:20:00
Rating:
No comments: