குடமுழுக்கு பெயரால் ஜாதி மோதலா?

சேலம் மாவட்டம் சித்தர்கோயில் அருகே திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர்  என்ற கோயில் இருக்கிறது.
நேற்று அந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்படுவதாக இருந்தது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கலந்து கொள்ள இன்னொரு பிரிவினர் தடை விதித்தார்களாம். இதனை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டனர்.  சமரசம்  ஏற்படாத நிலையில் கோயில் இழுத்து மூடப்பட்டது.  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 21 கிராமங்களில் 144 தடை ஆணையை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

இந்த 21ஆம் நூற்றாண்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நாட்டு மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கிராமங்களின் வளர்ச்சி என்பது பஞ்சமத் தன்மையிலும் சூத்திரத் தன்மையிலும்தான் இருக்கின்றது.

விவசாயம் பாவப்பட்ட தொழிலாகவே (பார்ப்பன மனுதர்மப் பார்வையில்) ஆக்கப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட கடனைத் திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு விவசாயம் வருமானம் இல்லாமல் தேய்ந்து கட்டெறும்பாக ஆகி விட்டது; தற்கொலையின் விளிம்பில் விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பது போல கிராமங்களில் கோயில்களைக் கட்டுவதும், குட முழுக்குச் செய்வதும், அதில் காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்டோர் கலந்து கொள் ளக் கூடாது என்பதும் அர்த்தம் நிறைந்தவைதானா?

மற்ற மற்ற சண்டைகளைவிட பக்தர்கள் சண்டைதான் அதிகரித்து வருகிறது என்று ஒருமுறை ராஜாஜி சொன்னது தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

கடவுளை மற - மனிதனை நினை என்பது தந்தை பெரியார் கொள்கை - சிந்தனைக் கருத்து எவ்வளவு ஆழமானது - அவசியமானது என்பதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மதம் மக்களை ஒன்றுபடுத்தாது - பேதப்படுத்தும் - அதுவும் வருணாசிரமம் என்ற பிளவுக் கலாச்சாரத்தை ஆணி வேராகக் கொண்ட இந்து மதம் - இதனை மிக அதிகமாகவே செய்யும் என்பது வெளிப்படை.

கோயிலுக்குள் குடியமர்த்தப்பட்ட கடவுளாவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டாமா? அது எப்படித் தீர்க்கும்? அதுதான் சுத்த குழவிக் கல்லா யிற்றே!

ஒரு கல் மனிதரின் மூளையை எந்த அளவுக்கு நாசப்படுத்தியிருக்கிறது பார்த்தீர்களா?

இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் இந்தப் பிரச்சினை என்கிற படத்தில் நேரிடையாக வர மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களுக்குள் மோதிக் கொள்வதை தூரத்திலிருந்து பார்த்து வெகுவாகவே ரசிப்பார்கள். பலே, பலே! நம் மருந்து எப்படியெல்லாம் இன்னும் வேலை செய்கிறது? என்று தங்கள் முதுகினைத் தாங்களே தட்டிக் கொள்வார்கள்.

இது இப்படி என்றால், இந்தக் கோயில் பிரச் சினையில் மனித உரிமை மீறல் இருக்கிறது என்பதை யும் புறத்தள்ளி விட முடியாதுதான்.

இந்துக்களே ஒன்று சேருங்கள்! என்று கூப்பாடு போடுகின்ற இந்து முன்னணி வகையறாக்களும், ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களும் இந்தப் பிரச்சினையில் ஏன் தலையிடவில்லை? - இரு தரப்பு மக்களாகிய இந்துக்களை ஏன் ஒன்று சேர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை?

அது எப்படிச் செய்வார்கள்? இந்து மதத்தில் உள்ள ஜாதியின் குணாம்சம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதா?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதுகிற, கூறுகிற நாங்கள்தான் வேதனைப்படுகிறோம். பக்தியின் பெயரால் நம் மக்கள் மோதிக் கொள்கிறார்களே என்று வருத்தப்படுகிறோம். இரு தரப்பிலும் உள்ள முக்கிய ஸ்தர்கள் இதில் ஒற்றுமைக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சேலம் மட்டுமல்ல; இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வை நாம் கண்டாக வேண்டும். அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சமத்துவக் கருத்தை - மனித உரிமைப் பிரச்சினையைப் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முன் வைத்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அதற்கான திட்டத்தையும், களங்களையும் முன் வைத்தார்கள். தந்தை பெரியார் அவர்களின் சீடரான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தமது ஆட்சியில் அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றிக் கொடுத் தார்கள். இரண்டு முறை அவர் சட்ட ரீதியான ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டும், பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று அதனை முடக்கி விட்டனர்.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்திருக்குமானால், தாழ்த்தப்பட்டவர்களும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு இருந்தால், சேலம் சம்பவம் போல தாழ்த்தப்பட்டவர்கள் கோயி லுக்குள் வரக் கூடாது என்ற குரல் கிளம்பி இருக்க முடியுமா? அப்படிக் கிளம்பினால் அதற்குக் காரண மானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டிய கடமையும், கட்டாயமும் ஏற்பட்டு இருக்குமே!

பகுத்தறிவை முன்னெடுப்பது என்பது ஒரு பக்கம்; சட்டப்படி மனித உரிமையைப் பாதுகாப்பது என்பது இன்னொரு பக்கம்  - இந்த இரண்டு தீர்மானங்களையுமே கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகம்தான் முன் வைக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சேலம் நிகழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசு முயல வேண்டும். இன்னொரு தர்மபுரியாக ஆகாமல் முளையிலேயே கிள்ளிடுக என்று அரசை வலியுறுத்துகிறோம்.

"விடுதலை” தலையங்கம் (5-3-2015)

நன்றி : தமிழ் ஓவியா
குடமுழுக்கு பெயரால் ஜாதி மோதலா? குடமுழுக்கு பெயரால் ஜாதி மோதலா? Reviewed by நமதூர் செய்திகள் on 20:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.