விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன?

ஜெயலலிதா பொதுக்கூட்டம். ஆண்களும் பெண்களும் அழைத்து வரப்பட்டார்கள். 11 மணி முதல் திடலுக்குள் விடப்பட்டார்கள். வெயில் கொளுத்தியது. தண்ணீர் தீர்ந்து விட்டது. தாங்க முடியாமல் சிலர் வெளியேற முயன்றார்கள். போலீஸ் தடுத்து விட்டது.
சீயெம் வந்து விடுவார்; இப்போ போகக்கூடாது என்றது போலீஸ். அம்மா பேசிட்டு போகும் வரை அசையாமல் இருக்கணும்னுதானே கூட்டியாந்தோம் என்றனர் கட்சிக்காரர்கள். பலவீனமானவர்கள் மயங்கி சாய்ந்தார்கள்.
முதல்வர் மேடையேறி பேசும்போது மூன்றரை மணி ஆகிவிட்டது. மயக்கமான பெண்களை பார்த்து பதறிய ஆண் உறவினர்கள் உதவிக்கு போக முயன்றனர். சவுக்கு கட்டிகளும் லத்திகளும் தடுத்து விட்டன. நெரிசல் ஏற்பட்டது.
50 பேர் மயங்கி விழுந்ததாக தினத்தந்தியே சொல்கிறது. முதல்வர் பார்வையில் பட்டால் பிரச்னையாகும் என்று போலீசும் கட்சிக்காரர்களும் தடுப்பு வளையம் அமைத்தார்கள். நாலு மணிக்கு ஜெயலலிதா கிளம்பிய பிறகுதான் மயங்கி கிடந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல போலீஸ் அனுமதித்தது. அதே நேரம், யாரையும் உள் நோயாளியாக அனுமதிக்காமல் முதல் உதவி அளித்து உடனே அனுப்பிவிட ஆஸ்பத்திரிகளுக்கும் ஆணை பறந்தது.
இரண்டு பேர் மரணம், 7 பேர் கவலைக்கிடம் என்பது செய்தி.
ஜெயலலிதா என்ன சொல்கிறார்?
“பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கருணாகரன் என்பவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டேன். எம்.ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் உடல் நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டேன். வேதனை அடைந்தேன். அவர்கலின் குடும்பத்துக்கு தேர்தல் முடிந்த பிறகு நிதி வழங்கப்படும்” என கூறியுள்ளார்.
வெயில், மயக்கம், நெரிசல், பதட்டம் குறித்த எந்த தகவலும் இல்லை. ஏன் என்றால் போலீசும் சொல்லவில்லை, கலெக்டரும் சொல்லவில்லை. ஆகவே ஜெயாவை பொருத்தவரை அப்படி எதுவும் நடக்கவே இல்லை. அவர் பத்திரிகை வாசிப்பதில்லை. செய்திகள் கேட்பதில்லை. ஏனெனில் ஊடகங்களை நம்புவதில்லை. எனவே உண்மைகள் அவரை எட்டுவது இல்லை.
சட்டசபையில் ஜெயா பேசுவதும் இந்த அடிப்படையில்தான். அதிகாரிகள் ஆலோசனைப்படி காவல் துறை கொடுக்கும் அறிக்கையின் பேரில்தான் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்கள் குறித்த முதல்வரின் பதில் அல்லது விளக்கம் அமைந்திருக்கும்.
அத்தனையும் பச்சைப்பொய் என்பது அங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஊடகர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் 110ன் கீழ் முதல்வர் சொல்வதை எவருமே கேள்வி கேட்க முடியாத நிலையில் பாவம் ஊடகர்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும்?
மீறி உண்மையை எழுதினால் அவதூறு வழக்கு, அரசு விளம்பரம் நிறுத்தம், செய்தியாளர் அங்கீகார அட்டை மறுப்பு, நூலகங்களுக்கு பத்திரிகை நிறுத்தம்… என்று அரசின் அம்பரா தூளியில் இருக்கும் அத்தனை அம்புகளும் அடுத்தடுத்து ஏவப்படும்.
பத்திரிகை முதலாளி எங்காவது பஞ்சாயத்து துணையுடன் பல ஏக்கர் வாங்கியிருப்பார். ஏதேனும் வரியை குறைத்து செலுத்தியிருப்பார். பிடித்தம் செய்த பி.எஃப் பணத்தை வங்கியில் கட்ட மறந்திருப்பார். ஊழியர் வேலை நேர பதிவேடுகளை பராமரிக்காமல் விட்டிருப்பார். இவை எதுவும் இல்லையென்றால் அவரது மகன் ஆல்கஹால் வாசனையுடன் காரோட்டி சோதனையில் சிக்கி, தலைமை நிருபர் மூலம் துணை கமிஷனரிடம் பேசியிருப்பார்.
கதிர்வேல்கொளுத்தும் கோடை வெயிலில் நிழலுக்கு வழி செய்யாமல் பொதுக்கூட்டம் நடத்துவதே மனித உரிமை மீறல்தான். அப்படி ஒரு கொடுமை நடந்து அதில் சில உயிர்களும் பலியான நிலையில் வெகுஜன ஊடகம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடிப்பதும், அது ஏதோ தவிர்க்க முடியாத விபத்து என்பதை போல இட்டுக்கட்டி எழுதுவதும் வெட்கக்கேடு அல்லாமல் வேறில்லை.
- கதிர்வேல், நம்ம அடையாளம் இதழின் ஆசிரியர்.
விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன? விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன? Reviewed by நமதூர் செய்திகள் on 00:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.