அண்ணல் அம்பேத்கர் வழியில்
ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம். இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளை களத்தில் கடுமையாக எதிர்த்த புரட்சியாளன் உதித்த தினம் இன்று. இந்த சிறப்பான நாளில் நாம் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து, ஏதோ ஒரு வகையில் அவர் புகழ் பாடிவிட்டு நகர்ந்து விடுகிறோம். இதுதான் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. அண்ணல் அம்பேத்கர் இந்திய தேசத்தில் சாதிய ஆதிக்க சக்திகளால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட எளிய மக்களின் கதாநாயகன். தீவிர எதிர்ப்பு போராட்டங்களும், அரசியல்படுத்துதலும், ஆய்வுகளு ம், செயல்திட்டங்களும், அறிக்கைகளும் என அவரின் தொடர்ச்சியான செயல்பட்டால் ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டினார்.
சமுத்துவம், நீதி, ஜனநாயகம் போன்றவற்றிற்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்ல அதற்காக பல போராட்டங்களையும், தியாகங்களையு ம் எதிர்கொண்டார். "நம் சமுதாய, பொருளாதார வாழ்வில் இன்னும் எத்தனை காலம் நாம் சமத்துவத்தை மறுக்க முடியும்? கூடிய விரைவில் இந்த முரண்பாட்டை அகற்றாவிடில், ஏற்றதாழ்வினால் அவதியுறும் மக்கள் அரசியல் ஜனநாயகம் என்ற கூட்டமைப்பை வெடி வைத்து தகர்த்துவிடுவர்" என்று அம்பேத்கர் எச்சரித்தார். ஆனால் இன்றும் இந்த தேசத்தில் சமத்துவமும், நீதியும் மறுக்கப்படுகிறது கொடுமையானது. இன்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள். "உலகிலேயே அதிகமாக கொடூரங்களை சந்திப்பவர்கள் இந்திய தலித்கள்தான்" என்று சமீபத்தில் கூறுகிறார் ஆய்வாளர் ரஷ்டி. இது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதற்கெதிரான நமது பயணம் நீண்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்து கோவிலில் தலித் முதியவர் ஒருவர் நுழைந்ததற்காக உயிரோடு எரித்து கொல்லப்படுகிறார். தினமும் தலித்கள் மீதான தாக்குதல்களும், தலித் பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கான எதிர்ப்பு போராட்டங்களை நாம் அண்ணல் அம்பேத்கர் வழியில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய காலத்தில் நாம் தற்போது இருந்து வருகிறோம். அண்ணல். அம்பேத்கருக்கு துரோகம் இழைத்தவர்களும், அவரை நேரிடையாக கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று அவரை உரிமை கொண்டாடுகிறார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துக்களை திரிக்க முயலுகிறார்கள்.
இந்துத்துவத்தை கடுமையாக எதிர்த்த அம்பேத்கர் அவர்களை இன்று 'அம்பேத்கர் இந்துத்துவத்தை ஆதரித்தார். சாவர்க்கரின் கொள்கைகளை விரும்பினார்' என்று கற்பனை புனைவுகளை மேற்கொள்கிறார்கள். அம்பேத்கரை கொண்டாடுவதின் மூலம் அவரின் கொள்கைகளை, கருத்துக்களை அழிக்கவும், தங்களுக்கு சாதகமாக திரிக்கவும் நினைக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தவிர்க்க முடியாத தலைவராக அண்ணல் அம்பேத்கர் இருப்பதால் அவரை தங்கள் அடையாளமாக உருமாற்றி தங்களது பாசிச மனுதர்ம கோட்பாட்டிற்கு பயன்படுத்த சிந்திக்கிறார்கள், முனைகிறார்கள்.
'இந்துத்துவ அம்பேத்கர்' என்று ஒரு புத்தகமே தமிழில் வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இந்துத்துவம் வேரூன்ற இடம் இல்லாததால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டதால். ஒடுக்கப் பட்ட மக்களை தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள சேரிகளிலும் தங்களது செயல்திட்டங்களை கொண்டு செல்ல அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி உள்நுளைகிரார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வைத்தே அதிகாரம் பெற்று அவர்களை நசுக்கும் மறைமுக செயல்திட்டங்கள் அவர்களின் உண்டு. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக இந்துமதத்தை எதிர்த்தார். 'இந்து மதம் அழிய வேண்டும்' என்று சூளுரைத்தார். இன்று இந்துத்துவாதிகள் "இந்து மதத்தை காக்க வந்த நவீன மனுவாக" அம்பேத்கர் அவர்களை சித்தரிக்கிறார்கள். அதற்கு எதிரான எதிர்ப்பு கனைகளை எறிய வேண்டியது நமது கடமை. அதில் தீவிரமாக நமது கவனத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் இந்துத்தும் அண்ணல் அம்பேத்கரையும் உள்வாங்கிக்கொள்ளும்.
இந்த அம்பேத்கர் தினம் முதல் நாம் ஒரு உறுதிமொழியை மனதில் ஏந்த வேண்டும். அண்ணல் அம்பேத்கரை தீவிரமாக வாசிக்க வேண்டும். இந்துத்துவத்தை, சாதிய ஆதிக்கத்தை எதிர்ப்பதில் அவரைப்போல் உறுதியுடன் போராட வேண்டும். அம்பேத்கரிய கருத்துக்களை வேகமாக முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரிய கருத்துகளை திரிக்க முயலும் தீய சக்திகளுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும். இதுவே நமது முன் இருக்கக் கூடிய முதற்பணியாகும்.
"உங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள். உங்கள் ஆற்றல்களை ஒன்று திரட்டுங்கள்" என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் வழியில் தொடந்து நமது போராட்டங்களை முன்னெடுப்போம். சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைப்போம். அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை நோக்கி நடைபோடுவோம்.
- வி.களத்தூர் சனா பாரூக்
அண்ணல் அம்பேத்கர் வழியில்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:42:00
Rating:
No comments: