பெரம்பலூரில் வெல்வாரா ப.சிவகாமி IAS?

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சமூக சமுத்துவ படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக மாறி மாறி வெற்றி பெற்று வரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இந்தமுறை சமூக சமுத்துவப்படை கட்சி நிற்கிறது. அக்கட்சியின் சார்பாக அதன் நிறுவன தலைவர் ப.சிவகாமி IAS போட்டியிடுகிறார். அவர் போட்டியிடுவதால் பெரம்பலூர் தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.
பெரம்பலூரை பொறுத்த வரையில் திமுக, அதிமுக விற்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுகவின் சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த ஐந்து வருடத்தில் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர் மீது தொகுதி மக்களிடம் அவப்பெயர் இருக்கிறது. மக்கள் நலக்கூட்டனியில் உள்ள விடுதலை சிறுத்தைகளுக்கு அமைப்பு ரீதியிலான பலம் இங்கு உள்ளது. அவர்களின் வாக்குகளும் பிரிகிறது. அது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தெரியும். 

தற்போது பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ப.சிவகாமி IAS பல இடங்களிலும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நேரத்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

சிவகாமி பழனிமுத்து :
பெரம்பலூர் மாவட்டத்தில் 01.12.1955 ம் ஆண்டு பிறந்தார். அப்பாவின் பெயர் பழனிமுத்து. இவர் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர். தனது கடுமையான உழைப்பால் தமிழ் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக உயர்ந்தவர். தமிழகத்தில் தலித் அரசியலில் முக்கியான பங்களிப்பு செய்தவர். செய்து வருபவர் ப.சிவகாமி IAS.

ஆட்சிப்பணி :
1980 ம் ஆண்டு IAS தேர்ச்சி பெற்றார். தமிழகத்தின் முதல் தலித் பெண் IAS ப.சிவகாமி ஆவார். ஆரம்பத்தில் IAS படிப்பில் விருப்பம் இல்லாமல் படித்தாலும், வகுப்புகள் செல்ல செல்ல அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாக கருதி IAS வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக, அரசின் அச்சு மற்றும் எழுதுகோல் துறையின் ஆணையாளராக பணியாற்றினார். பல துறைகளின் பொறுப்புகளையும் ஏற்று சிறப்பாக பணியாற்றினார். எந்த பொறுப்பில் இருந்தாலும் யாருக்கும், எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் பணியாற்றியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்.
அதனாலேயே பல முக்கியமான உயர் பொறுப்புகள் அவருக்கு தடுக்கப்பட்டன என்ற புகாரும் உண்டு. மக்களுடைய தேவைகளை ஓரளவிற்கு திறம்பட செய்ததால் மக்களிடத்தில் அவர் பணியாற்றிய இடங்களில் நற்பெயரும் பெற்றுள்ளார்.

எழுத்துப்பணி :
இந்தியாவின் முதல் தலித் பெண் எழுத்தாளர் ப.சிவகாமி IAS. சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை என எழுத்துக்களில் ஆர்வம் காட்டினார். 1980-1990 காலகட்டத்திலிருந்தே பல்வேறு தளங்களில் எழுதி வருகிறார். எளிய மக்களின் அவல வாழ்கையை தனது எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் கதாபாத்திரங்களை உயர்வாக செதுக்கினார். 

சமூக மாற்றம், தலித்தியம், பெண்ணியம் சார்ந்து அதிகம் சிந்தித்தார். அதிகமதிகம் எழுதினார். இவருடைய "பழையன கழிதலும்",  "ஆனந்தாயி" நாவல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றன. இவருடைய "தலித் சிறுகதைத் தொகுப்பு" தமிழில் வெளிவந்துள்ள சிறந்த தலித்திய சிறுகதைகளில் ஒரு பெட்டகமாக திகழ்கிறது. "புதிய கோடங்கி" இதழை 19 ஆண்டுகளாக நடத்தி தொடர்ந்து எழுதி வாசக மனங்களில் சிறப்பு பெற்றார். 1995 ல் "ஒஊடக" என்ற குறும்படம் எடுத்தார். அப்படம் நேசனல் மனோரமா மற்றும் ஜனாதிபதி விருது பெற்றது. 1995 ல் உலக தமிழ் மாநாட்டில் தலித் மேடை அமைக்க பெரிதும் செயலாற்றினார். தனது எழுத்தின் மூலம் தலித் அரசியலை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

சமூக அரசியல் பணி :
IAS பதவியில் இருந்துகொண்டே தலித்தியம், பெண்ணியம் சார்ந்து இயங்கினார். பல்வேறு நிகழ்சிகளுக்கு பின்புலமாக இருந்து வலுவூட்டி இருக்கிறார். ஆட்சிப்பணியும், சமூகப்பணியும் அதிகரிக்கவே 2008 ம் ஆண்டு தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். முழு நேரமாகவே சமூக மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2008 ல் இவர் முன்னின்று நடத்திய பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் "பெண்கள் மாநாடு" மாதர்களின் ஆதரவோடு எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் பிறகுதான் பிற அரசியல் கட்சிகளும் பெண்கள் மாநாடுகளை நடத்த ஆரம்பித்தன. 

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து 2009 நாடாளமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தனது கோரிக்கையை வலுவாக எடுத்துசெல்லும் பொருட்டு 2009 ம் ஆண்டு 'அறிவுச்சுடரில் அமைதிப்புரட்சி' என்ற முழக்கத்துடன் "சமூக சமுத்துவப்படை கட்சி"யை நிறுவி நடத்தி வருகிறார். பெண்களுக்கு தனி அரசியல் அமைப்பு வேண்டும் என்பது இவரது முக்கிய கோரிக்கையாகும். பெண்களுக்கு சட்டமன்ற, நாடாளமன்றங்களில் 50% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறார். பஞ்சமி நிலம் மீட்புக்கான போராட்டங்களிலும், களப்பணியிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் செயலாற்றி இருக்கிறார். 

தேர்தல் களம் :
ஆரம்ப காலங்களில் திராவிடத்தையும், திமுக விமர்சித்திருக்கிறார். தற்போது திமுகவுடன் இணைத்து தேர்தலை சந்திக்கிறார். சமரசம் செய்து கொண்டார் என்று சொல்லலாம். தேர்தல் அரசியலுக்கு மறுபெயர் சமரசம்தானே. இதில் யார் இங்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். இருக்க முடியும் இந்த நாடாளமன்ற தேர்தல் ஜனநாயகத்தில்? இவரை விட திமுகவை கடுமையாக விமர்ச்சித்தவர்கள்கூட ஒரு கட்டத்தில் திமுகவுடன் இணைத்து செயலாற்றி இருக்கிறார்கள் என்ற வரலாறு நம் முன் இருக்கிறதல்லவா!

தலித்தியம், பெண்ணியம், சமூக மேம்பாடு, எழுத்து, பேச்சு, களப்பணி, ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வு, கிராம முன்னேற்றம், கல்வியறிவின்மை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பஞ்சமி நில மீட்பு  என  தொடர்ந்து இயங்கி வரும் ப.சிவகாமி IAS போன்ற சிந்தனையாளரை சட்டமன்றத்திற்கு அனுப்பும் பெரும்பேறு பெரம்பலூர் வாக்காள பெருமக்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் சரியாக பயன்படுதிக்கொள்வார்களா என்று பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும். 

ப.சிவகாமி IAS வெற்றிபெற்றால் தலித் அரசியலிலும், பெண்கள் நலனிலும், பின்தங்கிய பெரம்பலூர் முன்னேற்றம் காணவும் உழைப்பார் என்று நம்புவோம்.

- வி.களத்தூர் சனா பாரூக்
பெரம்பலூரில் வெல்வாரா ப.சிவகாமி IAS? பெரம்பலூரில் வெல்வாரா ப.சிவகாமி IAS? Reviewed by நமதூர் செய்திகள் on 22:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.