என்ன நடக்கிறது காஷ்மீரில் – அ.மார்க்ஸ்

காஷ்மீர் மீண்டும் எரிந்து கொண்டிருக்கிறது. நான்கு இளைஞர்கள், ஒரு வயதான பெண்மணி என ஐந்து பேர் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியுள்ளனர். இன்னும் அதிகப் படைகளைக் குவிக்க டெல்லி ஆணையிடுகிறது. ஹன்ட்வாராவில் அன்று என்னதான் நடந்தது?
குறைந்தபட்சம் மூன்று கதையாடல்கள் இப்போது மிதந்து வருகின்றன என்கிறார் சீமா முஸ்தபா.

கதையாடல் 1
இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுக்கு முதல் பலி வீழ்ந்த உடன் அத்தோடு பிறந்தமுதல் கதையாடலின்படி ஒரு இளம் பள்ளி மாணவி திடீரென அலறுகிறாள். அருகில் ஒரு இராணுவ வீரன் நிற்கிறான். என்ன நடந்திருக்கும் என்பதை அருகிருந்த மக்கள் ஊகித்து விரைந்து அருகே ஓடுகின்றனர். எத்தனை முறை இப்படி நடந்துள்ளது. எத்தனை பெண்கள் இராணுவத்தினரின் வெறிக்குப் பலியாகியுள்ளனர். பயனட் முனையில் வாழும் அந்த மக்கள் எளிதில் ஆத்திரப் படுகின்றனர். ஆத்திரம் வன்முறையாக வெடிக்கிறது. இராணுவம் வழக்கமாகச் செய்வதைச் செய்கிறது. உடன் மூன்று இளைஞர்கள் பலியாகின்றனர். அந்தப் பிரச்சினையை சிவில் அதிகாரிகளோ, ஏன் உள்ளூர் போலீசோ கூட இத்தனை உயிரிழப்பு இல்லாமல் சமாளித்திருக்கக் கூடும். ஆனால் AFPSA பாதுகாப்புடன் திமிர்த்துத் திரியும் இராணுவம் அதற்குத் தெரிந்த ஒரே வழியில் பிரச்சினையை எதிர் கொண்டது.
கதையாடல் 2
இரண்டாவது கதையாடல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டது. அவளும் அவளது தந்தையும் இப்போது காவல்துறையால் யாரும் அறியாமல் எங்கோ வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ வீடியோ ஒன்றில் பயந்து அதிர்ச்சியில் தடுமாறும் குரலில் அந்தப் பெண் சொல்வது ஒளிபரப்பப் படுகிறது. தன்னை இராணுவ வீரன் யாரும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கவில்லை. மாறாக உள்ளூர் இளைஞன் ஒருவன்தான் அதைச் செய்தான் என்கிறாள் அந்தப் பெண்.
கதையாடல் 3
மகளுக்கும் கணவருக்கும் என்ன நேர்ந்தது, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் அறியாது அச்சத்தில் உறைந்துள்ள அந்தப் பெண்ணின் அம்மா சொல்வது: மார்க்கெட்டில் ஒரு கழிவறைக்கு மகள் சென்றபோது உள்ளிருந்து ஒரு இராணுவ வீரன் வருகிறான். இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒரு காஷ்மீரப் பெண் என்ன செய்வாளோ அதை அவளும் செய்தாள். பயந்து அலறினாள். அருகிலிருந்த காஷ்மீர இளைஞர்கள் இந்த மாதிரிச் சமயத்தில் என்ன செய்வார்களோ அதைச் செய்தனர். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஓடினர். இந்த மாதிரிச் சமயத்தில் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் என்ன செய்யுமோ அதைச் செய்தது. ஓடி வந்த இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது.
இந்த மூன்றாவது கதையாடல்தான் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இப்படியான சூழல் எத்தனை அவலமான ஒன்று. ஒரு இராணுவ வீரனைக் கண்டவுடனேயே அவன் நிச்சயம் தன்னைக் கடத்திப் போவான், நாம் நிச்சயம் இன்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆட்பட்டுக் கொல்லப்பட்டு எங்காவது வீசி எறியப்படுவோம் என ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணும், அக் காட்சியைக் காணும் காஷ்மீர இளைஞர்களும் உறுதியாக நம்பக்கூடிய சூழல் எத்தனை கொடிய ஒன்று.

அங்கே ஒரு மாநில ஆட்சி, தேர்தல், தேச பக்தி, தேச ஒற்றுமை…எத்தனை அபத்தங்கள்….தமிழகத்திலிருந்து ஒரு எதிர்ப்புக் குரல், அனுதாபச் சொற்கள்… ஹூம்.. எல்லாம் பிசி தேர்தல் கொண்டாட்டத்தில்.
மானங்கெட்ட வாழ்க்கை… வெட்கங்கெட்ட அரசியல்

- See more at: http://www.thoothuonline.com/archives/76155#sthash.TjnRNe8j.dpuf
என்ன நடக்கிறது காஷ்மீரில் – அ.மார்க்ஸ் என்ன நடக்கிறது காஷ்மீரில் – அ.மார்க்ஸ் Reviewed by நமதூர் செய்திகள் on 23:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.