தலித் சிறுமி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
ராஜஸ்தான் மாநிலம், பிகானீரைச் சேர்ந்த தலித் சிறுமிக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
திர்மோஹி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர ராம். அவரது 17 வயது மகள், பிகானீரில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி கல்வி நிறுவனத்தில் இருந்த குடிநீர்த் தொட்டியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக, மார்ச் 29-ஆம் தேதி இரவு உடற்கல்விப் பயிற்சியாளரும், ஆசிரியருமான விஜேந்திர சிங்கின் அறையில் அந்த சிறுமி இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து, மார்ச் 31-ஆம் தேதி விஜேந்திர சிங் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விடுதிக் காப்பாளரும், அந்த பயிற்சி மையத்தின் முதல்வரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தங்கள் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என சிறுமியின் பெற்றோர் புகார் கூறினர். மேலும் ராஜஸ்தான் மாநில போலீஸாரின் விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்றும், தங்கள் மகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை போலீஸார் மூடி மறைக்க முயற்சிக்கின்றனர் என்றும் தங்களுக்கு நீதி வழங்க இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திர்மோஹி கிராமத்தில் உள்ள சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் எம்.பி. ஹரீஷ் செளதரி ஆகியோர் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ராகுல் கூறியதாவது:
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தலித் மாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரம் மூடி மறைக்கப்பட்டதைப் போல், இந்தச் சிறுமியின் விவகாரத்தையும் மறைப்பதற்கு போலீஸார் முயற்சிக்கின்றனர். எனவே சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்கு முதல்வர் வசுந்தரா ராஜே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
தலித் சிறுமி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:58:00
Rating:
No comments: