யானை (சிறுகதை) - வி.களத்தூர் சனா பாரூக்
அந்த இடத்தில ஒரே பரப்பரப்பு. எல்லோரும் குழுமிவிட்டார்கள். செய்தி கேள்விப்பட்டு அதிகாரிகள், காவல்துறையினர், வனத்துறையினர் விரைந்து வந்துவிட்டனர். கிராமவாசிகளிடம் கொந்தளிப்பான நிலை. அழகிய இயற்கை கொஞ்சும் மலை கிராமத்தில் இளகிய மனது படைத்த கிராமவாசிகள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை யானை எதிர்கொள்ளல்.
அன்றும் அப்படிதான் காட்டிற்கு விறகு வெட்டப்போன இரண்டு கிராமவாசிகளை துரத்தியது யானை. சிக்கிய ஒருவனை தூக்கி வீசியது. யானை தூக்கி வீசியது உடலை மட்டுமல்ல, அவன் உயிரையும்தான். இது ஏதோ அன்று மட்டும் நடைபெற்ற சம்பவம் அல்ல. அடிக்கடி நடைபெறும் துயரமிக்க சம்பவம். இதனால் கிராமவாசிகள் மிகுந்த அச்சத்துக்கு உட்பட்டுத்தான் வாழவேண்டிய நிலை. யானை திடீர் என்று ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் அவர்களை வாழ்வை கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது குறித்து அதிகம் வருத்தமடைந்தனர்.
தங்களை பாதுகாக்க அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. யானை எதிர்கொள்ளலை கிராமவாசிகளும், அதிகாரிகளும், ஊடகங்களும் யானையின் அத்துமீறல், அராஜகம் என்றே எண்ணி யானையை காட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்றுகூட திட்டம் தீட்டி பல தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தனர். அப்போதும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
கிராம பஞ்சாயத்து கூடியது. யானையிடமிருந்து எப்படி தப்பிப்பது என எல்லோரும் பல ஆலோசனைகளை சொன்னார்கள். முனியன் எழுந்தார். "யானையால இந்த மாசத்துல மட்டும் எட்டுபேர இழந்துருக்கோம். இதபத்தி அரசாங்கத்தோட பேசியும் எந்த பயனும் இல்ல. நம்ம கோயிலுக்கு ஒரு சாமி வந்து தவம் இருக்காரு ஒரு வாரமா. அவர பார்த்தா பெரிய மகான் போல தெரியுது. அவர்கிட்ட இதுக்கு என்ன பரிகாரம் செய்யனும்னு கேப்போம்" என்றவுடன் கூட்டம் அனைத்தும் அவரின் ஆலோசனையை ஆமோதித்து.
நேராக அனைவரும் கோயிலுக்கு சென்றார்கள். சாமி தவத்தில் இருந்தார். "சாமி" என்று குரல் ஒலித்தது. வந்திருந்தவர்களை ஆச்சரியமாக பார்த்தார் சாமி. "என்ன விஷயம். எல்லோரும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள்" கிராம முக்கியஸ்தர் நடந்த அனைத்து விசயங்களையும் ஒன்று விடாமல் சொன்னார். யானையால் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கபடுவதாகவும், அதற்கு தாங்கள்தான் நல்ல தீர்வை சொல்ல வேண்டும் என்றும். அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் நாங்கள் செய்கிறோம் என்றும் அவர் சொன்ன விசயங்களை கவனமாக கேட்டுக்கொண்டார் சாமி.
சிறிது அமைதிக்குப்பின் தனது மௌனத்தை கலைத்தார். "அய்யா, யானை நம்மை அழிக்க நினைக்கிறது. நமது வாழ்வாதரங்களை அழிக்க நினைக்கிறது, காட்டைவிட்டு துரத்த நினைக்கிறது என்று நீங்கள் கூறுவதெல்லாம் சுத்தக்கற்பனை. அது உண்மையல்ல. நாம்தாம் அவைகளுடைய வாழ்நிலைகளை அழித்துக்கொண்டுருக்கிறோம். நாம் காடுகளுக்கு வந்து வாழ்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே யானைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. அடிப்படையில் யானைகள் ஒரே இடத்தில வசிக்கும் ஜீவனல்ல. அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்யும் வகையில் அது இறைவனால் படைக்கப்பட்டிருக்கி றது. காடுகள் சமநிலை அடைய யானை இடப்பெயர்ச்சியின் பங்கு மிக அதிகம். அதன் பாதைகளை அழித்துதான் நாம் வீடுகளையும், சென்று வர ரோடுகளையும் அமைத்திருக்கிறோம். யானைகள் நம் பகுதிக்கு வரவில்லை. நாம்தாம் யானைகள் வரும்பாதையில் வசிக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் யானைகள் வாழும் வீடான காடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். காடுகளின் இயற்கை வளத்தையும், தண்ணீர் வளத்தையும் நாம் நம் சுயநலத்திற்காக பயன்படுத்தி அழித்து வருவதால் யானைகள் அவற்றை தேடி நாம் இருக்கும் இடத்திற்கு வருகின்றன. குறிப்பாக காடுகளில் தண்ணீர் வசதி குறைந்து வருவதால் யானைகள் அதிகமாக தண்ணீர் தாகத்திற்காகத்தான் நமது இருப்பிடத்திற்கு வருகின்றன. எதிர்படுபவர்களை தாக்குகின்றன. இதில்கூட பெரும்பாலான யானைகள் மனிதர்களை தாக்குவதில்லை. கொம்பன் யானை மட்டும்தான் தாக்கும். ஏனென்றால் மற்ற யானைகளைவிட கொம்பன் இரண்டு மடங்கு உணவருந்தும். யானைகளும் நம்மை போன்றே வாழ்விடங்களை இழந்து வருகின்றன.
அதனால் யானைகளை எதிரிகளாக கருதாமல். நம்முடைய நண்பர்களாக கருத வேண்டும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே யானைகள் மனிதனுக்கு பல வகைகளில் உதவி புரிந்துள்ளன" என்று அவர்களுக்கு இதுவரை எட்டாத விசயங்களை சாமி கூறி முடிந்ததும். கூட்டம் அவருக்கு நன்றி சொல்லி கலைந்தது.
மறுநாள் எல்லோரும் கூடி யானையின் வாழ்வாதரங்களை காப்பது குறித்து நீண்ட நேரம் விவாதித்தனர்.
- வி.களத்தூர் சனா பாரூக்
யானை (சிறுகதை) - வி.களத்தூர் சனா பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:01:00
Rating:
your story was published in this link.kindly permit me to do this
ReplyDeletehttps://www.facebook.com/tamilpenpals/