வங்கி மோசடி: தப்பியோடிய நீரவ் மோடி
மும்பையில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியின் பரோடி கிளையில் முறைகேடான சட்ட விரோதப் பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தைக்கு நேற்று (பிப்ரவரி 14) பஞ்சாப் நேசனல் வங்கி அளித்துள்ள அறிக்கை ஒன்றில், "பஞ்சாப் நேசனல் வங்கியின் பரோடி கிளையில் வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சில ஆதாயங்களை அடைவதற்காக வாடிக்கையாளர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலர் இணைந்து இம்மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கொடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். கடன் பொறுப்பேற்கும் ஆவணங்களிலும் மோசடி நடைபெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை அளித்ததன் மூலம் வெளிநாடுகளில் 177 கோடி டாலர் (இந்திய ரூபாயில் 11,300 கோடி) அளவுக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி உள்ளிட்ட சிலர் மீது பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.280 கோடி பணப் பரிவர்த்தனை மோசடி செய்ததாக மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ) அமைப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடி, அவருடைய மனைவி அமி மோடி, அவருடைய சகோதரர் நிஷல் மோடி மற்றும் அவருடைய மாமா மெஹுல் சோக்சி (கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர்) உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பஞ்சாப் நேசனல் வங்கி அதிகாரிகளைக் கொண்டு பண மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்தச் சோதனையின் முடிவில் பஞ்சாப் நேசனல் வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தான் ரூ.11,300 கோடி மோசடி நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஒரே நாளில் பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்குகள் 10 சதவிகிதத்திற்கு மேல் சரிந்துள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய முறைகேடு வங்கி வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியின் மதிப்பு 2016-17ஆம் நிதியாண்டில் பஞ்சாப் நேசனல் வங்கி கண்ட லாபத் தொகையான ரூ.1,325 கோடியைப் போல எட்டு மடங்காகும். இதுகுறித்து அவ்வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், இம்முறைகேடு வங்கியின் ஒழுங்குமுறையில் கண்ட தோல்வியாகும் என்றார்.
இந்நிலையில் தொழிலதிபர் நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவைப் பிடிக்க இயலாமல் இந்திய அதிகாரிகள் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கி மோசடி: தப்பியோடிய நீரவ் மோடி
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:28:00
Rating:
No comments: